

நான் தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நான் கருவுற்று இருக்கிறேன். இதைக் காரணமாக வைத்து என் பணியிடத்தில் எந்தச் சலுகையையும் நான் எதிர்பார்ப்பது இல்லை.
அடுத்த தலைமுறையை உருவாக்க பெண்களின் உடலில் இயல்பாக ஏற்படும் நிகழ்வு இந்தக் கருவுறுதல். இது ஒரு இயல்பான நிகழ்வு. இதில் என் பணி சார்ந்த தகுதி - தகுதியின்மை எதுவும் இல்லை. அலுவலகத்தில் இவ்வளவு வருடங்கள் மிகவும் பொறுப்புணர் வோடு கடமை தவறாது வேலை செய்திருக்கிறேன். ஆனால், நான் கருவுற்று இருப்பதைத் தெரிவித்ததில் இருந்து எனக்குப் பதிலாக மாற்று நபரைத் தேடுகிறார்கள். அலுவலக விஷ யங்களில் தேவை இல்லாதவளாக நடத்தப்படுகிறேன்.
நான் அனைத்து அலுவலக வேலைகளையும் செய்ய நினைக்கிறேன். ஆனால், இனி இந்த அலுவலகத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்பதுபோல் நடத்துகிறார்கள். இந்த வேலையை உங்களால் செய்ய முடியாது, அந்த வேலையை உங்களால் செய்ய முடியாது எனச் சொல்லி (இவ்வளவுக்கும் அவற்றைச் செய்ய நான் தயாராக இருந்தும்) எனக்குக் கீழ் அடுத்த நிலையில் உள்ள ஆண் ஊழியரிடம் செய்யச் சொல்கிறார்கள். மகப்பேறு விடுமுறைக் காலம் என்பது பெண்களின் பணி வாழ்க்கையில் குறுகிய கால இடைவெளியே அன்றி, நிரந்தர இடைவெளி அல்ல. மகப்பேறு விடுமுறை முடிந்து வரும்போது இந்த இடைவெளியை நிரப்ப இன்னும் வேகமாக நான் ஓடவேண்டும். ஊதிய உயர்வு, பணி உயர்வு இரண்டுமே மறுக்கப்படும். அதுவரை நான் வகித்து வந்த பொறுப்பிலேயே மீண்டும் தொடர நேரிடும். வீடு, வேலை, குழந்தை இந்த மூன்றையும் நான் சமாளித்துப் பராமரிக்க வேண்டும்.
எந்தவிதப் பொருளாதாரப் பின்புலமும் அற்ற நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டபட்டுப் படிப்பை மட்டுமே நம்பி வேலைக்கு வந்து தற்போது நல்ல பொருளாதார நிலையை அடைந்தாலும், இந்தப் பயணத்தில் ஆண்களுக்கு வாய்ப்பு மிகவும் எளிதாகக் கிடைக்கிறது. பெண்ணுக்கோ பலப் பல தடைக்கற்கள். ஏன் இந்த ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் என்று பார்த்தால் உயர் பதவியில் இருப்பவர்கள் எல்லாரும் ஆண்கள். அலுவலகத்தில் நடுத்தர வயதில் இரண்டு பெண்கள் இருப்பதைக் காட்டிலும் இரண்டு ஆண்கள் இருப்பதையே விரும்புகிறார்கள். இந்த நிலை மாறவேண்டுமானால், தடைகள் அனைத்தையும் தாண்டி பெண்களாகிய நாம் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும்; நாம்தான் நமக்கான கொள்கையை வகுக்க வேண்டும். ‘துன்பம் நெருங்கிவந்தபோதும் நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா’ என்கிற பாரதியார் வரிகளுடன் தைரியமாகப் பயணித்துத் தலைமைப் பொறுப்புகளை வகிப்போம்.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.