

40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை அனைவருக்கும் அத்தியாவசியம் என்று சொல்கிறார்கள். இதில் பல்வேறு வகையான சிறப்புச் சலுகைகளும் காம்போ ஆஃபர்களும் உள்ளன. பெண்களுக்கேற்ற எந்த வகையான முழு உடல் பரிசோதனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- அ. யாழினிபர்வதம், சென்னை - 78.
டாக்டர் ஆர்.சாந்தி,
சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்.
பொதுவாக 40 வயதுக்கு மேல் மாதவிடாய்க் கோளாறுகள், அதிக வெள்ளைப்படுதல், பழுப்பு நிறத்திலோ, ரத்தம் கலந்தோ, துர்நாற்றத்துடனோ வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ மார்பகச் சுய பரிசோதனை செய்யும்போது மார்பகத்தில் ஏதேனும் கட்டிகளோ வேறு மாற்றங்களோ தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சில நேரம் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அறிகுறிகள் வெளிப் படுவதற்கு முந்தைய நிலையிலேயே நோய்களைக் கண்டறிய பாப் ஸ்மியர், மாமொகிராம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், தைராய்டு பரிசோதனை போன்றவற்றைச் செய்து கொள்ளலாம்.
40 வயதைக் கடந்துவிட்டாலே பெரும்பாலான பெண்களுக்கு ஏதாவது ஒரு நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படும். உதாரணத்துக்கு சர்க்கரை நோய் இருக் கிறது என்றால் தலைசுற்றல், சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படும். கருப்பை தொடர்பான சிக்கல் இருந்தால் அதிக வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு போன்றவை ஏற்படக்கூடும். சிலருக் குச் சிறுநீர்ப் பாதைத் தொற்று, மார்ப கத்தில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எந்த அறிகுறியாக இருந்தா லும் அதைப் புறக்கணிக்காமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி
ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது அவசியம். அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை பெறும்போது தேவையைப் பொறுத்து மருத்துவரே இதர பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.
முழு உடல் பரிசோதனையின்போது ஆண்களுக்குச் செய்யப்படுகிற பொதுவான பரிசோதனைகளோடு பெண்களுக்கான பிரத்யேகப் பரிசோதனைகளான தைராய்டு, மார்பகப் புற்றுநோய் - கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை களையும் மேற்கொள்வது நல்லது. முழு உடல் பரிசோதனை செய்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று வந்துவிட்டால் வேறு பிரச்சினைகளே இல்லை என்பது பொருள் அல்ல. சிலருக்குத் தொடர்ச்சியான இடுப்பு வலி இருந்தால் முதுகுத்தண்டில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். இதற்கு முதுகுத்தண்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இது முழு உடல் பரிசோதனையில் வராது. அதனால், அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவரை அணுகுவது நல்லது. அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் மார்பகப் புற்றுநோய் - கருப்பைவாய்ப் புற்று நோய், தைராய்டு போன்றவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டால் ஆரம்ப நிலை நோய்க் கண்டறிதலுக்கு உதவியாக இருக்கும்.
பொதுவாக 40 வயதைக் கடந்து விட்டாலே உடல் பருமனில் கவனம் தேவை. உடல் பருமன் அதிகரித்தால் அது நோய்களை இருகரம் நீட்டி வரவேற்கும். நம்மால் முடிந்த எளிய உடற்பயிற்சிகளைத் தினமும் செய்வது நல்லது.
| உங்கள் கேள்வி என்ன? ‘கேளாய் பெண்ணே’ பகுதிக்கு நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். சமையல், சரித்திரம், சுயதொழில், மனக்குழப்பம், குழந்தை வளர்ப்பு, மருத்துவம் என எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களே பதிலளிப்பார்கள். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, இந்து தமிழ் திசை, கஸ்தூரி மையம், மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |