

என் சிறுவயதில் ‘அம்புலிமாமா’ மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனது. அதில் இருந்த அழகான படங்கள், கதையை வாசிக்கும் ஆர்வத்தை என்னுள் தூண்டின. இதுதான் என் வாசிப்பின் தொடக்கக் காலம்.
எங்கள் வீட்டில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் யாரும் இல்லை என்பதால் எனக்கு யாருடைய எழுத்தும் அறிமுகம் ஆகவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு உறவினர்கள் வீட்டில் இருந்த ஆனந்த விகடன், குமுதம், கல்கி, மஞ்சரி எனப் பிரபலமான இதழ்கள் என் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டின. அவற்றில் வரும் தொடர்கள், கதையின் மீதான பேரார்வத்தை என்னுள் விதைத்தன. சுஜாதா, சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் கதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பள்ளிப் பாடங்களுக்கு மத்தியிலும் என் வாசிப்பை நிறுத்தியதில்லை. தொடர் வாசிப்பு எனக்குள் கவிதை எழுதும் ஆர்வத்தையும் வளர்த்தது.
இலக்கியச் சிற்றிதழ்களின் அறிமுகம் கிடைத்தபோது இதழ்களுக்குக் கவிதைகள் அனுப்பிவைத்தேன். தமிழில் வெளிவரும் பெரும்பாலான இலக்கிய இதழ்களில் எனது கவிதைகள் பிரசுரம் ஆகின. மகிழ்ச்சியுடன் எழுதுவதும் தொடர் வாசிப்பும் இன்றும் தொடர்கின்றன.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்கள் எனக்கு வாசிப்பின் மீதான அடங்காத ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டேயிருக்கின்றன. தொடர்ந்து புதிய புதிய எழுத்துகளைத் தேடிப் படிக்கும் ஆர்வமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மதுரையில் வசிப்பதால் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். உலகின் புதிய வாசல்களைத் திறந்து வைப்பதில் புத்தகங்களுக்கு நிகரான வேறொன்றை இதுவரை நான் அறியவில்லை.
வாசிப்பின் வழியே நமது வாழ்வை மேம்படுத்திக் கொள்ள முடியும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் பக்குவமும் விசாலமான மனமும் கைகூடும். வாசிப்பின் மூலம் நமக்குள்ளும் படைப்பின் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
- மஞ்சுளா, மதுரை.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |