Published : 24 Jun 2018 12:18 PM
Last Updated : 24 Jun 2018 12:18 PM

எசப்பாட்டு 41: பெண்கள் பொழுதுபோக்க எழுதுகிறார்களா?

ங்க காலம் எனப்படும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே 44 பெண்பால் புலவர்களைக் கொண்டிருந்த மொழி தமிழ்!

பெண்களுக்குச் சங்க காலம் வழங்கிய சுதந்திர வெளியைப் பின் வந்த காலம் வழங்கவில்லை. ஆணாதிக்கம் கொண்ட குடும்ப அமைப்பும் அதன் வழியே உயர்சாதி ஆதிக்கம் கொண்ட சாதி அமைப்பும் இவை இரண்டையும் நிரந்தரப்படுத்தி நியாயப்படுத்தும் மதங்களும் பிந்தைய காலத்தில் நிலைபெற்றதால் பெண்ணின் இடம் அடுக்களை என ஒதுக்கப்பட்டது. பெண் படைப்பாளிகள் எழுந்துவர வாய்ப்பில்லாமல் போனது.

பெண்ணை ‘மறந்த’ வரலாறு

ஆங்கிலேயர் காலத்தில் பெண்களுக்குப் பள்ளிக் கதவுகள் திறக்கப்பட்டாலும் மேற்சொன்ன நம் சமூக அமைப்புகள் பெண்களை உடனே பள்ளிகளுக்கு அனுப்பிவிடவில்லை. ஆனாலும் பெண்கள் தங்கள் குடும்பத்து ஆண்கள் இட்ட கல்விப் பிச்சையால் வாசிக்கக் கற்று, நூல்களை வாசித்துத் தாமும் அப்போதே எழுதவும் ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கான நாவல்களையும் சிறுகதைகளையும் கவிதைகளையும் பெண்கள் எழுதிக் குவித்தனர். அதனால் என்ன, இலக்கிய வரலாற்றை எழுதும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று காலம் அவர்களை அனுமதித்தது. பின்னர் இலக்கிய வரலாற்றை எழுதியவர்கள் அதில் பெண்களின் பங்களிப்பு பற்றி எதுவும் குறிப்பிடாமல் ‘மறந்தாற்போல’ இருந்துவிட்டனர்.

70-களுக்குப் பிறகு சமூகத்தில் பெண்நிலைவாதம் வேகமெடுக்கத் தொடங்கியது. அதன் பிறகே இலக்கிய வரலாற்றில் தங்களுக்கான இடம் ஏன் மறுக்கப்பட்டது என்ற கேள்விகளுடன் பெண்கள் எழுந்துவந்தனர்.

‘Women Writing In India - 600 BC To The Present’ (Oxford University Press) என்ற நூலை சுசீ தரு, கே.லலிதா இருவரும் இணைந்து தொகுத்தபோதுதான் இந்திய இலக்கிய வரலாற்றில் எத்தனை மகத்தான சாதனைகளைப் பெண்கள் படைத்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. மொழிவாரியாகப் பெண்களின் பங்களிப்பு அந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

இலக்கிய வரலாற்றில் புறக்கணிப்பு

தமிழில் இலக்கிய வரலாறுகளில் பெண் படைப்பாளிகளுக்கு எப்படியான இடம் வழங்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்ய முயன்ற ப.பத்மினியின், ‘மறக்கப்பட்ட பதிவுகள் – பெண் எழுத்து வரலாறு (1896-1950)’ என்னும் நூல் (புலம் வெளியீடு) பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.

1893-ல் கிருபை சத்தியநாதன் அம்மாளின் ‘கமலம் - ஒரு இந்துப் பெண்ணின் ஜீவிய சரித்திரம்’ எனும் புதினத்துடன் தமிழ்நாட்டில் பெண் படைப்பாளிகளின் வரலாறு தொடங்கிவிட்டது. அன்று முதல் 1947 வரை பெண்கள் எழுதிய 200 நாவல்கள் வந்துவிட்டன. ஆனால், இலக்கிய வரலாற்றை எழுதியவர்கள் ஆண் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தும் அவர்கள் வாழ்க்கை குறித்தும் அக்கறையாகவும் சிரத்தையாகவும் பதிவுசெய்த அளவுக்குப் பெண் படைப்பாளிகள் குறித்துக் கவனம் செலுத்தவில்லை. அப்படியே எழுதியிருந்தாலும் ஓரிரு வரிகளுக்கு மேல் இல்லை.

தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் ஆகிய நூல்களை இயற்றிய மது.ச.விமலானந்தம், பெண் எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “வை.மு.கோதைநாயகி அம்மையார் சமூகம் மற்றும் நாட்டு நிலையைச் சித்தரிக்கும் கதைகளை நூற்றுக்கும் மேலாக எழுதிக்குவித்தார். படிப்பு அவ்வளவாக இல்லாத பெண்டிர் படித்துப் பொழுதுபோக்கும் பான்மையன இவை” என்று சுருக்கமாக ஒற்றைத் தன்மையில் உரைத்துச் செல்வதாக பத்மினி குறிப்பிடுகிறார்.

மு.வரதராசனார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழண்ணல் எழுதிய ‘புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலிலும் எம்மார் அடைக்கலசாமி எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலிலும் பேராசிரியர்களான அ.கா.பெருமாள், எஸ்.ஸ்ரீகுமார் போன்றோர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூலிலும் துப்பறியும் கதைகள் எழுதியவராக மட்டுமே வை.மு. கோதைநாயகி அம்மாள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் பெயரைத் தவிர சரோஜா ராம்மூர்த்தி, ஆர். சூடாமணி, லட்சுமி போன்ற சில பெண் படைப்பாளிகள் பற்றிச் சில வரிகள் எழுதப்பட்டுள்ளன.

பெண்களின் மகத்தான பங்களிப்பு

ஆனால், ‘போனால் போகட்டும் பாவம் பெண்கள்’ என்று இலக்கிய வரலாறு தீட்டியோர் பெருந்தன்மையோடு நாலு வரி எழுதிவைக்கும் நிலையில் ஒருபோதும் பெண் படைப்பாளிகள் இருந்ததில்லை. ஒரு சோற்றுப் பதமாக வை.மு.கோதைநாயகி அம்மாளின் பங்களிப்பு குறித்துப் பார்ப்போம்.

1901-ல் பிறந்த வை.மு.கோதைநாயகி அம்மாள், பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. “10-12 வயதுக்கு மேல் நானாக ஆசைப்பட்டு என் சிறிய தகப்பனாரிடம் அ, ஆ, இ, ஈ முதலிய எழுத்துக்களைக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உண்டானது. கதையில் உள்ள ருசியால் பிறர் படிக்க நான் கேட்டு இன்பம் அடைவது மனதுக்குக் குறையாய் இருந்தது. நானே படித்து ரசிக்க ஆவல் மிகுந்தது. என் கணவரிடம் படிப்பதற்குக் கற்றுக்கொண்டேன்” என்று வை.மு.கோதை அவர்களே பின்னர் எழுதினார். எழுதப் படிக்கத் தெரிந்தும் விசையுறு பந்தினைப் போலப் பாய்ச்சல் வேகத்தில் அவர் நாவல்களை எழுதினார். 1925-ல் ‘ஜகன் மோகினி’ என்ற இதழை நடத்தத் தொடங்கினார். அந்த இதழில் 150-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களை எழுதவைத்தார், உருவாக்கினார்.

‘நாவலும் வாசிப்பும்’ என்ற தன் நூலில் பெண்கள் நாவல் வாசிப்பது குறித்து அன்றைய ஆண்களுக்கு இருந்த அசூயையும் வெறுப்பையும் ஆதாரங்களுடன் விளக்கியிருப்பார். அப்படிப்பட்ட சூழலில் வாசிப்பைத் தாண்டி 150 பெண்களை எழுதவைத்த ‘பாவத்தை’ச் செய்த வை.மு.கோதைநாயகி அம்மாளை அன்றைய சமூகம் சும்மா விடுமா? இது குறித்து அவரின் மருமகள் வை.மு.பத்மினி சீனிவாசன் கூறுகிறார்: “ஜகன் மோகினி தொடங்கிய புதிதில் வை.மு.கோ. தெருவில் நடந்து செல்லும்போது தெருக்காரர்கள் பத்திரிகையைக் கொளுத்தி அவர் முன்னே வீசியிருக்கின்றனர். அம்மையாருக்கு எதிர்ப்புகள் பல பிறந்தன. மிரட்டல்கள், மொட்டைக் கடிதங்கள், குற்றச்சாட்டுகள் எனத் தொடர்ந்தன” என்று குறிப்பிடுகிறார்.

தடையைத் தகர்க்கும் பெண் எழுத்து

இத்தனை தடைகளையும் தாண்டி அவர் ‘ஜகன் மோகினி’ இதழை 35 ஆண்டு காலம் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அவர் மட்டுமே 47 நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்துள்ளார். ஆனால், இலக்கிய வரலாறுகள் அவரைப் பொழுதுபோகப் பெண்கள் வாசிக்கக் கதை எழுதியவர் என்று ஒற்றை வரியில் பதிவு செய்துவிட்டுப் போகின்றன.

புதுமைப்பித்தனைக் கொண்டாடும் நம் இலக்கிய வரலாறுகள் அவரது இணையர் கமலா விருத்தாச்சலம் எழுதிய நுட்பமான சிறுகதைகள் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. கு.ப. ராஜகோபாலனை மறக்காமல் பதிவுசெய்யும் இலக்கிய வரலாறுகள் அவருடைய சகோதரி கு.ப. சேது அம்மாளின் பங்களிப்பை மறந்தே போகின்றன. ஆண்களைப் போன்ற கட்டற்ற சுதந்திரம் பெண்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால் இலக்கியத்தில் அவர்கள் மகத்தான சாதனைகளைப் படைத்திருப்பார்கள். இன்றைக்கும் வீட்டாரின் கோபத்துக்கு அஞ்சி, கழிவறைக்குள் சென்று கவிதை எழுதி புனைபெயரில் பத்திரிகைக்கு அனுப்பும் நிலைதான் (கவிஞர் சல்மாவின் பதிவுகள்) நீடிக்கிறது.

பெண்களைப் பேனா எடுக்க விடுவதில்லை. தம் சொந்த உழைப்பாலும் முயற்சியாலும் குடும்பத்து ஆண்களின் தளராத உதவிகளாலும் அவர்கள் எழுதியேவிட்டாலும் இலக்கிய வரலாற்றில் அவர்களுக்கு இடம் அளிப்பதில்லை. இது ஆணாதிக்கமன்றி வேறென்ன?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x