

விஜய் தனிக் கட்சி ஆரம்பித்து விட்டார். ‘மெய்யழகன்’ திரைப்படம் திரையரங்கில் வந்தபோது மிக மோசமாக விமர்சிக்கப்பட்டு இப்போது ஓடிடி தளத்தில் வெளியான பிறகு அதிகமாகக் கொண்டாடப்படுகிறது. ‘வாழை’ திரைப்படம் திரையரங்கில் கொண்டாடப்பட்டு ஓடிடியில் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டது.
- இவை எல்லாம்தான் கடந்த வாரத்தில் நடந்த முக்கியமான விஷயங்களாகப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வலி நிறைந்த ஒரு சம்பவம் தென் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நாம் அது குறித்துப் பெரிதாகக் கவலைப்படவில்லை, சமூக வலைதளங்களில் பேசவில்லை. ஏனெனில், அது இரண்டு பெண்களின் மரணம் மட்டுமே என்கிற தன்னுணர்வற்ற மனநிலையாகக்கூட இருக்கலாம்.
துணிவு இல்லாத ஆண்
சுசீந்திரத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்கிற பெண் தன் மாமியாரின் நிலைப்பாடுகளால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகத் தன்னுடைய அம்மாவுக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை நான் தற்செயலாகக் கேட்டேன். ஒரு நிமிடம் என் நரம்புகள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றுவிட்டன. கோயம்புத்தூரில் பிறந்த அந்தப் பெண் கல்யாணமாகி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பிறகு அந்தப் பெண்ணின் மாமியார் அவரைக் கணவனோடு எங்கும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதே நேரம் ஸ்ருதி வீட்டை விட்டு அனுப்பப்பட வேண்டும் என்றும் அப்படி அவர் அனுப்பப்படவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லியிருக்கிறார். எவ்வளவு பெரிய உணர்வுரீதியான மிரட்டல் இது. இதை அனுமதித்த ஸ்ருதியின் கணவரை மிகவும் நல்லவர் போல சுருதி பேசியிருப்பது எனக்குக் கோபத்தையே ஏற்படுத்தியது. தன்னுடைய மனைவியை வீட்டைவிட்டு அனுப்ப வேண்டும் என்று அடம்பிடிக்கும் அம்மாவைச் சமாளிக்கும் துணிவு இல்லாத ஒரு மகனாக இருக்கக்கூடிய தன்னுடைய கணவனை, ‘என் புருஷன் நல்லவர்’ என்று ஸ்ருதி சொல்லியிருக்கிறார். பெண்கள் இப்படித்தான் - நமக்கு நாமே ஏமாற்றிக்கொள்ளும் திட்டத்தில் மிகத் தெளிவாக ஈடுபடுவார்கள்.
வரதட்சிணைக் கொடுமை
ஆண்டாண்டு காலமாக நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட ‘கல்லானா லும் கணவன்’ என்கிற மாய பிம்பம் ஸ்ருதியின் இதுபோன்ற மனநிலையில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இணை என்பதற்குச் சரியான அர்த்தம் ‘புரிதலும் மதிப்பும் மரியாதையும் இருக்கும் ஓர் உறவு’ என்பதுதான். ஆனால், இங்கு திருமணம் என்கிற பந்தம் ஐந்து நிமிடங்களில் ஒரு காபியின் மத்தியில் ஒருவரை இன்னொருவர் பார்த்துக்கொண்டு அவர் நல்லவரா, கெட்டவரா என்று முழுவதுமாகக்கூடத் தெரியாமல் அவருடைய விருப்பங்களையும் அவருடைய கோபங்களையும் பற்றி அறிந்துகொள்ளாமல் வரதட்சிணை எவ்வளவு என்கிற அடித்தளத்தில் உடனடியாக முடிவாக்கப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாமியார் விசாரணைக்குப் பயந்து தற்கொலைக்கு முயன்று அவரும் உயிரிழந்துவிட்டார். திருமணத்தின்போது போடப்பட்ட 45 பவுன் தங்க நகைகள், ஐந்து லட்சம் ரொக்கம், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவை தனக்குப் போதவில்லை என்கிற புகாரோடுதான் அவர் தன் மருமகளை அணுகியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய இடத்தைத் தனது மருமகள் நிரப்ப வந்துவிட்டதான ஓர் அச்சத்தை மனதிற்குள் வளர்த்துக்கொண்டே இருக்கும்போதுதான் ஒரு பெண் தோற்கிறாள். எல்லா மாமியாரும் கெட்டவர்கள், எல்லா மருமகளும் நல்லவர்கள் என்பதல்ல இதன் பொருள். திருமணமாகி வரக்கூடிய பெண்களும் தங்கள் கணவனை அம்மாவிடமிருந்து பிரிப்பதை முதற்கட்ட வேலையாகவே சில நேரம் வைத்திருப்பார்கள். அதற்கு முக்கியக் காரணம் அவர்களின் அம்மாக்கள் அவர்களுக்குப் போதித்து அனுப்பும் ‘புத்திமதிகள்’தான். இன்றைய காலக்கட்டத்தில் ‘ஆலோசனை’ என்கிற பெயரில் தன் மகள் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் அம்மாக்களும் உண்டு.
வார்த்தை வன்முறை
ஸ்ருதியின் ரெக்கார்டிங்கில் இருந்த அவருடைய குரல், அதிலிருந்த நடுக்கம், தெளிவில்லாமல் விழுந்த வார்த்தைகள் இவை எல்லாமே என் மனதில் இன்னும் நிறைந்தபடிதான் இருக்கின்றன. இந்தக் காற்றில் எங்கோ ஒரு மூலையில் அது காலத்திற்கும் அலைந்தபடிதான் இருக்கும். அந்தக் குரல் நம்மைத் தொட்டுச் சென்றால்கூட நாம் அதைத் தூசி போலத் துடைத்துவிட்டுப் போய்விடு வோம் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், இந்த ஒரு வாரத்தில் சமூக வலைதளத்தில் அதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசக்கூட இல்லை.
‘வாழாவெட்டியாக வந்து வாழ எனக்கு விருப்பமில்லை’ என்று அவர் அந்த ஆடியோவில் சொல்லியிருக்கிறார். ‘வாழாவெட்டி’ என்கிற பெயரில் ஒரு பெண் குறிப்பிடப்படுவதன் மூலமாக நிகழும் மன ரீதியான வன்முறையை இங்கு நாம் பேசியே ஆக வேண்டும். எத்தனை எத்தனை பெண்கள் இதுபோன்ற வார்த்தை ரீதியான வன்முறைக்கு ஆளாக் கப்பட்டுத் தங்களை மாய்த்துக்கொள்கி றார்கள். என்னுடைய திரைப்படமும் ஒரு பெண்ணின் தற்கொலையைப் பற்றியது தான். தற்கொலை என்பது மரணம் மட்டுமல்ல; மனதின் மரணமாகக்கூட அது இருக்கக்கூடும். அதைத்தான் என் திரைப்படத்தின் முக்கியக் கருத்தாகக் கொண்டு இயக்கியிருக்கிறேன். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதை நான் மிக முக்கியமாகப் பெண் களுக்குத்தான் சமர்ப்பித்து இருக்கிறேன் இந்த வரிகளோடு:
‘தங்கள் வானத்தின் வாசனையை முகர்ந்து பார்க்கும் பெண்களுக்கு’
தங்களை மாய்த்துக்கொள்ளும் முடிவுகளை இனிமேல் எந்தப் பெண்ணும் எடுக்காமல் இருக்கட்டும்.
(உரையாடுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.