

விளையாட்டு வீரர்கள் பெரும்பாலானோரின் கனவும் இலக்கும் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதாக இருக்கும். ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தொடங்கி அபினவ் பிந்த்ரா, ககன் நரங் எனப் பலரும் பதக்கங்களை வென்று உலக அரங்கில் இந்தியாவின் பெயரை நிலைநாட்டியிருக்கிறார்கள்.
இவர்களைப் போன்ற இந்திய வீரர்களின் ஒலிம்பிக் பதக்க வேட்டை சிறியவர் முதல் பெரியவர் வரை துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்திருக்கிறது. அப்படி ஊக்கம் பெற்றவர்களில் ஒருவர் இனியா தேன்மொழி. கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவியான இவர், ‘ஷாட்கன்’ எனப்படும் பிரிவில் முன்னேறிவருகிறார்.
ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் ரைபிள், பிஸ்டல், ஷாட்கன் ஆகிய மூன்று வகை துப்பாக்கிகள் உள்ளன. ரைபிள், பிஸ்டல் ஆகியவை குறிப்பிட்ட இலக்குகளை நோக்கிச் சுடுவதாகும். ஆனால், ஷாட்கன் என்பது டிராப் மற்றும் ஸ்கிட் ஆகிய முறைகளில் திறந்தவெளி அரங்குகளில் கண் இமைக்கும் நேரத்தில் எங்கிருந்தோ திடீரெனப் பறந்து வரும் களிமண் இலக்கை நோக்கிச் சுட வேண்டும். இந்தச் சவாலான விளையாட்டுப் போட்டியைத்தான் இனியா தேன்மொழி தேர்ந்தெடுத் திருக்கிறார்.
குடும்பத்தின் ஆதரவு
“நான் கோவையில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் பிளஸ் டூ படித்துவருகிறேன். எனக்குச் சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளைக் காண்பதில் ஆர்வம் இருந்தது. 2023இல் காங்கேயம் அருகில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் போட்டிகளைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது 13 வயதுச் சிறுவன் யுகன், தரையில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் வெளியேறும் களிமண் இலக்கை நோக்கிச் சுட்டு டிராப் பிரிவு துப்பாக்கி சுடுதலில் வென் றார். அந்தச் சிறுவனின் அசாத்திய திறமையைப் பார்த்து, எனக்கும் அந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. பின்னர், நானும் பயிற்சியில் சேர்ந்தேன்.
கோவையில் இருந்து காங்கேயம் வரை சுமார் 90 கி.மீ. தொலைவு பயணம் செய்து பயிற்சி பெற்று வருகிறேன். பிளஸ் டூ படித்துக்கொண்டிருப்பதால் பள்ளியில் சிறப்பு அனுமதி பெற்றுத் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
டிராப் பிரிவு துப்பாக்கி சுடுவதற்காக முதல் மூன்று மாதங்கள் துப்பாக்கி சுடுதல் குறித்து அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றேன். ரைபிள் கிளப் உறுப்பினர்களான லோகேஷ், செந்தில், முத்து, நாதனியல் ஆகியோர் துப்பாக்கி சுடுதலில் உள்ள நுணுக்கங்கள் குறித்த பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினர். என் தாத்தாராமசாமியும் பாட்டி ருக்மணியும் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நாள் முழுவதும் என்னோடு இருந்து உத்வேகப்படுத்தினர். விளையாட்டுப் போட்டி களைப் பொறுத்தவரை குடும்பத்தினரின் ஆதர வும் அரவணைப்பும் இருப்பதால் என்னால் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது.
தமிழகத்தில் டிராப் பிரிவு துப்பாக்கி சுடுதலுக்கு சென்னை, புதுக்கோட்டை, காங்கேயம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே பயிற்சி பெறும் வசதி கள் உள்ளன. கடந்த ஓராண்டாகத் தொடர் பயிற்சி பெற்றுவருகிறேன்” என்கிறார் இனியா.
தேசியப் போட்டிக்குத் தகுதி
தேசிய ரைபிள் கிளப் சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற மாநில அளவிலான மகளிர் டிராப் ஜுனியர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தென்மண்டல மகளிர் டிராப் ஜுனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தத் தொடர் வெற்றி மூலம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றிருக்கிறார்.
“டெல்லியில் நடைபெறும் போட்டி களில் வெல்வதன் மூலம் தேசிய அளவில் சிறந்த வீராங்கனையாக மாறு வேன் என்கிற நம்பிக்கை உள்ளது. நான் கண்ணாடி அணிந்து துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வரு கின்றேன். பொதுவாகக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்பது சவாலா னது. துப்பாக்கியை நீண்ட நேரம் தோள்பட்டையில் வைத்துச் சுடுவதால் வலி ஏற்படுவதுண்டு. துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உடல்,மனம் இரண்டும் உறுதியாக இருக்க வேண்டும். துப்பாக்கி சுடுதல் போட்டி யில் இலக்கை நோக்கி மட்டுமே கவனத்தைக் குவிப்பதால் கவனச் சிதறல் இருக்காது. பாடங்களை நன்றாக உள்வாங்கிப் படிக்கவும் இது கைகொடுக்கிறது” என்கிறார் இனியா தேன்மொழி.