

ஓர் ஆசிரியரால் என்ன செய்ய முடியும் என்கிற கேள்விக்கு, மாணவர்களையும் சமூகத்தையும் மாற்ற முடியும் என்று தன் செயல் மூலம் நிரூபித்திருக்கிறார் எரின் க்ரூவெல்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த எரின், படிப்பை முடித்த பிறகு சட்டத்துறைக்குள் செல்லலாமா, கல்வித் துறைக்குள் செல்லலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, 1992ஆம் ஆண்டு இனக்கலவரம் ஒன்று நிகழ்ந்தது. அதன் விளைவாக லாங் பீச் பகுதி மாணவர்களிடம் போதைப் பழக்கம், வன்முறையில் நாட்டம் இருந்ததைக் கண்டவர், சட்டத்துறையில் களமாடுவதைவிட, கல்வித் துறையில் களமாடுவதுதான் சிறந்தது என்கிற முடிவுக்கு வந்தார்.
1994இல் வுட்ரோ வில்சன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். ‘203’ என்கிற வகுப்பறைக்குள் ஆர்வமாக நுழைந்தார் எரின். அங்கிருந்த மாணவர்கள் பள்ளியை வெறுத்தனர். ஒருவரை இன்னொருவர் வெறுத்தனர். ஆசிரியரையும் வெறுத்தனர். ‘கற்பிக்க முடியாது’ என்று ஆசிரியர்களால் கைவிடப்பட்ட வகுப்பறையின் முதல் நாள் அனுபவம் இப்படித்தான் இருக்கும் என்று எரின் கணித்திருந்தாலும் அவர் நினைத்ததைவிட நிலைமை மோசமாக இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களிடம் உரையாடினார். பொறுமையைக் கடைப்பிடித்தார். ஆன் ஃப்ரான்க் டயரி போன்ற புத்தகங்களைப் படிக்க வைத்தார். ‘வதைமுகாம்’ என்றால் என்ன ஒன்று மாணவர் கேள்வி கேட்க ஆரம்பித்தபோது, எரினுக்கு நம்பிக்கை வந்தது. மாணவர்களும் எரினும் உரையாட ஆரம்பித்தனர். வதைமுகாம் சித்திரவதைகளைக் காட்சிப் படுத்தியிருக்கும் ‘மியூசியம் ஆஃப் டாலரன்ஸ்’க்கு மாணவர்களை அழைத்துச் சென்றார் எரின். வதைமுகாமிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களை அழைத்து வந்து மாணவர்களிடம் உரையாட வைத்தார். ஆன் ஃப்ரான்க் குடும்பத்துக்கு உதவி செய்த மையீப் கைஸை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து, ஹிட்லர் ஆட்சியின் கொடூரங்களை நேரடியாகச் சொல்ல வைத்தார் எரின். ‘நீங்கள் ஒவ்வொருவருமே ஹீரோதான். முடிந்தால் இருட்டறையில் ஒரு விளக்கை ஏற்ற முயற்சி செய்யுங்கள்’ என்ற மையீப் கைஸின் பேச்சு மாணவர்களின் நெஞ்சைத் தொட்டது. இனத்தின் பெயரால் மனிதர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட மாணவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் உண்டானது. சக மாணவர்களையும் சக மனிதர்களையும் நேசிக்க ஆரம்பித்தனர்.
ஆசிரியர் பணியோடு இன்னும் சில பகுதி நேர வேலைகளையும் செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் மாணவர்களுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார் எரின்.
‘உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் என்ன எழுத விரும்புகிறீர்களோ அதைத் தயங்காமல் எழுதுங்கள். அது கதையாகவும் இருக்கலாம், எண்ணமாகவும் இருக்கலாம், கட்டுரையாகவும் இருக்கலாம். அவற்றை நான் படிக்கப் போவதில்லை. ஒருவேளை நீங்கள் விரும்பினால் அலமாரியில் உங்கள் டயரியை வையுங்கள். நான் அவற்றைப் படித்துப் பார்க்கிறேன்’ என்று அறிவித்தார் எரின்.
முதல் சில நாள்கள் அலமாரி காலியாகவே இருந்தது. ஆனாலும் எரினுக்கு நம்பிக்கை குறையவில்லை. ஒருநாள் எதிர்பாராதபோது அலமாரியில் ஒரு மாணவரின் டயரி வைக்கப்பட்டிருந்தது. எரினின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. படித்துவிட்டுப் பாராட்டினார். அடுத்தடுத்து மாணவர்கள் தங்கள் கதைகளையும் எண்ணங்களையும் எழுதி அலமாரியில் வைக்க ஆரம்பித்தனர்.
பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களை அழைத்துவந்து மாணவர்களுடன் பேச வைத்தார். மாணவர்களுக்குக் கல்வி மீது ஆர்வமும் நம்பிக்கையும் உருவானது. போதைப் பொருள் பயன்படுத்துவதைக் கைவிட்டனர். இளம் வயது கர்ப்பம் குறித்த விழிப்புணர்வும் அவர்களிடம் உருவானது. வன்முறை தவறு என்கிற எண்ணமும் அவர்களிடம் வந்துவிட்டது.
நான்கே ஆண்டுகளில் மாணவர்கள் இவ்வாறு புதிய மனிதர்களாக உருவானார்கள். பள்ளி இறுதித் தேர்வை எழுதினார்கள். அவர்களில் சுமார் 150 பேர் கல்லூரிக்குச் சென்று, பட்டமும் பெற்றனர்.
அவர்களில் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கட்டிடக் கலைஞர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தன்னார்வலர்களாக மாறியிருந்தனர். பலரும் எரினுடன் தொடர்பிலும் இருந்தனர். அவர்களை இணைத்து ‘ஃப்ரீடம் ரைட்டர்ஸ் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பை ஆரம்பித்தார் எரின்.
1999ஆம் ஆண்டு 150 பேரின் படைப்புகளையும் தொகுத்து, ‘The Freedom Writers Diary Teacher’s Guide’ என்கிற புத்தகமாகக் கொண்டுவந்தார் எரின். அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக அது மாறியது! கல்வி தொடர்பான சில நூல்களை எரின் எழுதினார். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களுக்கான நூலையும் எழுதியிருக்கிறார்.
கடந்த இருபது ஆண்டுகளில் ஃப்ரீடம் ரைட்டர்ஸ் ஃபவுண்டேஷன் உலகின் பல்வேறு நாடுகளிலும் கல்வி தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கும் கல்வியை மேம்படுத்து வதற்கும் கற்பித்தலில் முன்னேற்றம் கொண்டுவருவதற்கும் பாடுபட்டு வருகிறது. ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளையும் அளித்துவருகிறது.
ஃப்ரீடம் ரைட்டர்ஸ் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இனப் பாகுபாடு, வறுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் உரையாற்றுகிறார்கள். தற்கொலை விழிப்புணர்வை ஊட்டுகிறார்கள். தன்னம்பிக்கை அளிக்கிறார்கள். கல்வியைத் தொடர்வதற்கான உதவிகளையும் செய்கிறார்கள்.
‘ஃப்ரீடம் ரைட்டர்ஸ்’ என்கிற ஹாலிவுட் திரைப்படம் இவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, 2007ஆம் ஆண்டு வெளிவந்தது.
ஒரு சூழலைக் கண்டு ஒதுங்கிச் செல்லாமல், அந்தச் சூழலை மாற்றுவதற்கான முயற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொண்ட எரின் க்ரூவெல்லின் பயணம் ஒரு புத்தகம், ஓர் அமைப்பு, ஒரு திரைப்படம் என விரிவடைந்திருக்கிறது. ‘203’ என்கிற வகுப்பறை இன்று புதிய அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறது.