வீட்டு முறைப்படி இனிப்பு தயாரிப்பில் அசத்தும் மகளிர் குழு!

வீட்டு முறைப்படி இனிப்பு தயாரிப்பில் அசத்தும் மகளிர் குழு!
Updated on
3 min read

கோவை: தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு பலகாரங்கள் தான் நம் கண்முன்னே வந்து போகும். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதுவித இனிப்பு, பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இனிப்பு பலகார வர்த்தகத்தில் பெரிய கடைகள் முதல் சாதாரண கடைகள் வரை பல கோடி வருவாயை ஈட்டித் தரும் தொழிலாக உள்ளது.

வீட்டுமுறை உணவுகளுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு இருப்பது போல, தீபாவளிக்கு வீட்டு முறைப்படி தயார் செய்யும் இனிப்பு, பலகாரங்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அந்தவகையில் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உணவகம் நடத்திவரும் ஸ்ரீகங்கை விநாயகர் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் தீபாவளி பண்டிகைக்கு லட்டு, மைசூர்பா, அதிரசம், ஜிலேபி, காஜு கத்திலி உட்பட 20 வகை இனிப்பு, பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது: கோவை குறிச்சியில் சுய உதவிக்குழு நடத்தி வந்தோம். 2013-ல் கோவை மாநகராட்சியில் உணவகம் நடத்த தேர்வு செய்யப்பட்டோம். அப்போது முதல் தரமான உணவு வகைகளையும், பலகார வகைகளையும் தயாரித்து வழங்கி வருகிறோம். சுண்டல், சிறுதானிய லட்டு, வல்லாரை சூப், கம்பங்கூழ் என உணவகத்தில் தயாரித்து வழங்கி வருகிறோம்.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் வீட்டுமுறைப்படி<br />இனிப்பு, பலகாரங்களை தயாரித்து வழங்கும் மகளிர் சுய<br />உதவிக்குழு உறுப்பினர்கள். | படங்கள் : ஜெ.மனோகரன். |
கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் வீட்டுமுறைப்படி
இனிப்பு, பலகாரங்களை தயாரித்து வழங்கும் மகளிர் சுய
உதவிக்குழு உறுப்பினர்கள். | படங்கள் : ஜெ.மனோகரன். |

எங்களின் உணவு வகைகள் தரமாக இருந்ததால், தீபாவளி பண்டிகை காலங்களில் இனிப்பு, பலகாரங்களை தயாரித்து வழங்குமாறு வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பரில் இனிப்பு, பலகாரங்கள் தயாரிக்க தொடங்கினோம்.

முதல் ஆர்டரிலேயே 400 முதல் 500 கிலோ வரை லட்டு, மைசூர்பா, ஜிலேபி, அதிரசம் மற்றும் கார வகைகளை தயாரித்து கொடுத்தோம். நாங்கள் தயாரித்துக் கொடுத்த இனிப்பு, பலகாரங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதனால் ஒவ்வோர் ஆண்டும் இனிப்பு, பலகார தயாரிப்புக்கு ஆர்டர் அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக கடந்த 12 ஆண்டுகளாக இனிப்பு, பலகார வகைகளை தயாரித்து வழங்கி வருகிறோம். நிகழாண்டில் சுமார் 2000 கிலோ வரை இனிப்பு, பலகாரங்களுக்கு ஆர்டர் கிடைத்தது. கோவை மாநகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித்துறை அலுவலகத்தினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் இனிப்பு, பலகாரங்களுக்கு ஆர்டர் கொடுத்தனர்.

நிகழாண்டில் இனிப்பு, பலகாரம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களான கடலை எண்ணெய், நெய், கடலைமாவு, முந்திரி ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் இனிப்பு, பலகாரங்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கிலோ ஒன்றுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ளது.

சாதாரண இனிப்பு வகைகளான லட்டு, ரவா லட்டு, ஜிலேபி, பாதுஷா ஆகியவை கிலோ ரூ.360-க்கு விற்பனை செய்கிறோம். மைசூர்பா ரூ.400, கேரட் மைசூர்பா, மோதி லட்டு ரூ.500, ஃபுரூட் மைசூர்பா ரூ.520, கருப்பட்டி மைசூர்பா ரூ.600, அத்திப்பழம் மைசூர்பா ரூ.500, குலோப் ஜாமூன்-ரசகுல்லா ரூ.500, எள் உருண்டை ரூ.400, பாதாம் கேக்-காஜு கத்திலி ரூ.900, தேங்காய் பர்பி ரூ.350-க்கு விற்பனை செய்கிறோம். அதேபோல மிக்சர் கிலோ ரூ.320, முறுக்கு, கை முறுக்கு ரூ.360-க்கு விற்பனை செய்து வருகிறோம்.

இதர பெரிய கடைகளுடன் ஒப்பிடும்போது குறைவான விலைக்கு தரமான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதர கடைகளுடன் ஒப்பிடும்போது, சாதாரண இனிப்பு வகைகள் ரூ.50 வரையும், முந்திரி மற்றும் நெய் வகை இனிப்புகள் சுமார் ரூ.200 வரையிலும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி இனிப்பு, பலகாரங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதால் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இது எங்களின் தரமான இனிப்பு, பலகார தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் தரும் அங்கீகாரமாக கருதுகிறோம். தீபாவளி இனிப்பு, பலகார விற்பனையில் கிடைக்கும் வருவாயை செலவினங்கள் போக மீதமுள்ள தொகையை உறுப்பினர்கள் சமமாக பங்கிட்டுக் கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in