கொண்டாட்டம்: இது நெய்தல் தீபாவளி!

மேகலா
மேகலா
Updated on
2 min read

சென்னை பட்டினப் பாக்கத்தின் லூப் சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்தச் சாலையின் ஒருபுறம் மீன் விற்பனை கடைகள் என்றால், மறுபுறம் காரசாரமான மீன் உணவகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இன்ஸ்டா ரீல்ஸில் டிரெண்டிங்கில் இருக்கும் பல மீன் உணவகங்கள் லூப் சாலையில்தான் இருக்கின்றன. மெரினாவில் கூடும் கூட்டத்தால் அலர்ஜி அடைபவர்கள், நேராக லெஃப்ட் இன்டிகேட்டர் போடுவதும் இதே லூப் சாலைக்குத்தான்.

தீபாவளிப் பண்டிகையை மீனவப் பெண்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்கிற ஒற்றைக் கேள்வியுடன் மேகலா, குமாரி, செந்தாமரை மூவரையும் அணுகினோம்.

“என்னைப் பொறுத்தவரை தீபாவளின்னா அது புதுத் துணியும் கறிக்குழம்பும்தான்” என உரையாட லைத் தொடங்கினார் மேகலா. “என் வீட்டுக்காரருக்கு மாசத்துல பத்து நாள்தான் கடல்ல வேலை இருக்கும். மீதி 20 நாள் சும்மா கடலைப் பார்த்துட்டுதான் நாளை ஓட்டுவாரு. அவரோட பத்து நாள் வருமானத்துலயும் நான் மீன் வித்து வர்ற வருமானத்துலயும்தான் குடும்பம் ஓடிக்கிட்டு இருக்கு. ஆனா, பண்டிகைன்னு வந்துட்டா எங்க மகிழ்ச்சிக்குக் கொஞ்சமும் குறை விருக்காது. மீனவர் சங்கம் மூலம் கிடைக்கும் பணத்திலோ கடனை வாங்கியோ பிள்ளைகளுக்குப் புதுத் துணி எடுத்துக் கொடுத்துடுவோம். இன்னமும் தீபாவளிக்கு முதல் நாளுலதான் துணி எடுத்துட்டு இருக்கோம். சாப்பாடு பத்திச் சொல்லணும்னா எங்க வீடுகளில் மத்த நாளுல மீன் சாப்பாடுதான் பிரதானமா இருக்கும். ஆனால், தீபாவளிக்கு ஸ்பெஷலா கறிக்குழம்பு சமைப்பாங்க” - உற்சாகமாகப் பேசினார் மேகலா.

“எங்க வீடுகளில் தீபாவளி இனிப்புன்னா உளுத்தங்களி அல்வா, புடலம்பூ ரெண்டும்தான். தீபாவளி அன்னைக்கு இந்த இரண்டும் இல்லாத மீனவ வீடுகளை நீங்க பார்க்கவே முடியாது” என்றார் குமாரி. புடலம்பூ என்கிற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே எனக் கேட்டபோது, மீண்டும் ஆவலாகக் குறுக்கிட்டார் மேகலா.

“காலையிலயே பிள்ளைகளை எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைச்சிட்டு, முதல்ல உளுத்தங் களியையும் புடலம்பூவையும்தான் தருவோம். இந்த ரெண்டையும் சாப்பிட்ட பிறகுதான் கறிச் சாப்பாடு எல்லாம். கடலைப் பருப்பை வடை பக்குவத்துல அரைச்சி எடுத்து அதை நெய்யில வறுத்து, தேங்காய்த் துருவலும் வெல்லமும் சேர்த்துச் செய்யறது புடலம்பூ” என்றார் மேகலா.

“சில மீனவ வீடுகள்ல தீபாவளி அன்னைக்கு அசைவம் சமைக்க மாட்டங்க. அவங்க வீட்ல இந்த ரெண்டும் தவறாம இருக்கும்” என்று சொன்ன குமாரி, “என் சொந்த ஊர் கல்பாக்கம்கிட்ட கூவத்தூர். நாங்க பாரம்பரியமா மீன் பிடிக்கிற தொழில்தான் செய்றோம். முப்பாட்டன் காலத்துல இருந்து மீனைச் சுத்திதான் எங்க வாழ்க்கை இருக்கு. இப்ப நான் இருக்குற பட்டினப்பாக்கம் எங்க மாமியார் வீடு. எங்க வீட்டுத் தீபாவளி இலை சாப்பாட்டுல கறிக் குழம்பு, சோமாஸ், குலாப்ஜாமூன், அதிரசம், முறுக்குன்னு எல்லாத்தையும் வரிசையா அடுக்கி வச்சிருப்போம். அந்த இலைய பார்க்கி றப்பவே நிறைவா இருக்கும்” என உற் சாகமாக அடுக்கிக் கொண்டே போனார்.

புன்முறுவல் கலந்த தயக்கத்துடன் செந்தாமரை தனது தீபாவளி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“என்னோட தீபாவளி நினைவு எல்லாமே புதுப்பட்டினத்தோட சம்பந்தப்பட்டது. சின்ன வயசுல புதுத் துணிமணிய போட்டுக்கிட்டு சினிமா கொட்டாயில எம்ஜிஆர் படத்தைப் பார்த்து ரசிச்சது இன்னும் நினைவுல இருக்கு. தீபாவளின்னா எம்ஜிஆர் படம்தான் முதல்ல நினைவுக்கு வரும். அவர் படத்தோடதான் எங்க தீபாவளி சந்தோஷமாவும். இப்பல்லாம் தீபாவளில பெருசா ஆர்வம் இல்ல, படமும் விரும்பிப் பார்க்குறது இல்ல. பிள்ளைகளுக்காகக் கொண்டாடிட்டு இருக்கோம்” என்றார் செந்தாமரை.

மணி மதியம் இரண்டை நெருங்க, மூவரும் மதிய உணவுக்காகத் தொலைவில் இருந்த கொட்டகையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள், தீபாவளி கதையைப் பேசிக் கொண்டே!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in