

என் மகள் சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கிறார். மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தைச் சில பள்ளிகளில் கற்றுத்தருகிறார்கள். சில பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி அடிப்படையில் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகங்களைக் கற்றுத்தருகிறார்கள். எந்தப் புத்தகத்தைப் படித்தால் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்?
- ரேவதி.
டாக்டர். ரவிகுமார், இயற்பியல் பேராசிரியர்.
மதிப்பெண்கள் வாங்குவதற்காக மட்டுமே படிக்கக் கூடாது. அது மனப்பாடக் கல்வியை நோக்கி மாணவர்களை நகர்த்தும். மனப்பாடம் செய்வதால் மதிப்பெண் வாங்க முடியுமே தவிர, அறிவு விசாலமாகாது. பாடத்திட்டத்தில் இருக்கும் பாடங்களைப் பற்றி என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் எழுதியிருப்பார்கள். உதாரணத்துக்கு, கணக்குப் பாடத்தில் ஒரு கணக்கை மட்டும் கொடுத்திருப்பார்கள். அந்தக் கணக்கின் அடிப்படையைப் புரிந்துகொண்டு மற்றவற்றை மாணவர்களே தீர்க்க வேண்டும். ஆனால், தனிப்பட்ட ஆசிரியர்களால் எழுதப்படும் புத்தகங்கள் ‘கைடு’ போல இருக்கும். அதில் எல்லாமே விரிவாக விளக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் யோசிப்பதற்கும் சிந்தித்துச் செயல்படுவதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். எதைப் பற்றியும் விவாதிப்பதற்கான சூழலும் இருக்காது. ஆசிரியர் - மாணவர் கலந்துரையாடலும் குறைந்துவிடும்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை மாணவர்களின் சிந்திக்கும் திறனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதால் என்.சி.ஆர்.டி புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் ஒரு குறிப்பிட்ட கருவியைப் பற்றிப் படிக்க வேண்டுமென்றால், அதைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒன்றுவிடாமல் படிக்க வேண்டும். எந்தப் பாடமாக இருந்தாலும் அதற்கென மாணவர்களே தனியாக விரிவான ‘நோட்ஸ்’ ஒன்றை உருவாக்க வேண்டும்; ‘கைடு’ அல்ல. அப்படியும் சில பகுதிகள் புரியவில்லை என்றால் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். இப்படிப் புரிந்து கொண்டு படிக்கிறபோது எளிதில் மறக்காது. அதனால், மதிப்பெண் குறித்த அச்சமின்றித் தேர்வுகளை நல்லவிதமாக எழுத முடியும்.