

புதினம் (நாவல்) என்பது தீவிர இலக்கியவாதிகள், லகுவான வாசிப்புக் கென்று எழுதுபவர்கள் ஆகிய எழுத்தாளர்களுக்கான களமாக மட்டுமே அறியப்படுகிறது. இணையத்தில் புதினங்கள் எழுதுவதற்கெனவும் அவற்றை வாசிப்பதற்கெனவும் ஒரு பெருங்கூட்டமே உள்ளது. ஒருகாலத்தில் பயணங்களின்போது நம்மோடு துணைக்குவந்த ‘பாக்கெட் நாவல்’களின் அடுத்த வடிவம் இது.
காதல், அமானுஷ்யம், துப்பறிதல் போன்ற பல வகைகள் இதிலும் உண்டு. எழுத்தாளர்களிடையே நட்பு, பகை, அரவணைப்பு, அடிதடி எல்லாம் உண்டு. அந்த உலகமும் வாசகர்களின் ஆதரவோடு பரபரப்பாகத்தான் இயங்கிவருகிறது. குடும்பப் பொறுப்புகளோடு முழுநேர எழுத்தாளராகவும் வலம்வரும் பெண்கள் சிலரிடம் இது குறித்துப் பேசினோம்:
சென்னை ஆவடியில் வசித்துவரும் மோனிஷா செல்வராஜுக்குப் பள்ளி, கல்லூரிக் காலத்திலிருந்தே எழுதுவதில் ஆர்வம் இருந்தது. நேரம் கிடைக்கும்போது கதைகள் எழுதிவந்தார். ஆனால், வீட்டு வேலைகளுக்கு இடையே கதை பின்னுக்குப் போய்விடும். மீண்டும் புதிதாக ஒரு கதை தோன்றும். ஒருவழியாக இந்தக் கண்ணாமூச்சி ‘இரு துருவங்கள்’ என்கிற கதையால் முடிவுக்கு வந்தது.
“இணையதளத்தில் வெளிவந்த அந்தக் கதையைப் பலர் பாராட்டிப் பின்னூட்டம் இட்டனர். நான் எண்டமூரி வீரேந்திரநாத் கதைகளை விரும்பிப் படிப்பேன். என் முதல் கதை, எண்டமூரியின் பாணியை நினைவூட்டியதாக ஒரு வாசகர் கூறினார். வாசகர்கள் இந்த அளவுக்குக் கவனிக்கிறார்களே என ஆச்சரியமாக இருந்தது’’ என்கிற மோனிஷா, இதுவரை 18 புதினங்களை எழுதியுள்ளார்.
கிருஷ்ணப்ரியா நாராயண், சென்னை பெருங்களத்தூரில் வசிக்கிறார். 2001இல் அனைத்திந்திய வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்த கிருஷ்ணப்பிரியா, திருமணத்துக்குப் பின்னர் பணிக்குச் செல்லவில்லை. வாசிப்பதிலும் எழுதுவதிலும் இருந்த ஆர்வம், புதினம் எழுத அவரைத் தூண்டியது. ‘திரும்பி வந்திட மாட்டாரோ?’ என்கிற அவரது முதல் படைப்பு, ‘பிரதிலிபி’ இணையதளத்தில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு, அவரைத் தொடர்ந்து எழுத வைத்தது. இதுவரை 14 புதினங்கள் வெளியாகியுள்ளன. மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களை மையப்படுத்திய ‘காட்டு மல்லி’ என்கிற இவரது புதினம், அதிகக் கவனம் பெற்றது.
“தொடக்கத்தில் என் கதை களுக்குப் பாடல் வரிகள் தலைப்பாக வைக்கப்பட்டன. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. திரைப்படத் தாக்கமற்ற தலைப்புகளை வைக்கத் தொடங்கினேன். ‘காட்டு மல்லி’ என்னும் பெயர்கூட அந்தப் பாடல் வெளிவருவதற்கு முன் நான் வைத்ததுதான்” என்கிறார் கிருஷ்ணப்ரியா.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இருந்தபடி, இணையவெளி எழுத்தாளராக வலம்வருபவர் தீபா செண்பகம். மண்மணம் கொண்ட கதைகள் இவரது அடையாளம். ‘பாண்டி குடும்பம்’ தீபா என்கிற பெயரில் வாசகர்களிடையே நன்கு அறியப்பட்டவர். இவர் எழுதி, நான்கு பாகங்களாக வெளிவந்துள்ள ஒரு பெருங்கதை அது.
தீபாவுக்கு 19 வயதில் திருமணம் ஆனது. ஃபேஷன் தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பு, இந்தி மொழியில் அடிப்படைத் தேர்ச்சி என்கிற கல்வித் தகுதியுடன் இருந்த தீபா, இந்தியில் இளங்கலைப் படிப்பை முடித்தார். சிறு வயதில் நூலகங்களில் அறிமுகமான வாசிப்பு இன்பம், புத்தகங்களை நாட வைத்தது. இணையத்தில் சில குழுக்களில் உறுப்பினர் ஆனதன் அடுத்த கட்டமாக இணையதளங்களில் உள்ள புதினங்கள் அவருக்கு அறிமுகமாயின.
“2015இல் பழநி முருகன் கோயிலுக்குக் குடும்பத்துடன் காவடி எடுத்துச் சென்றோம். அந்த அனுபவத்தை எனது வலைப்பக்கத்தில் எழுதினேன். அந்த நிகழ்வை நன்றாக வர்ணித்து எழுதியிருந்தது, பலருக்குப் பிடித்தது. என்னால் எழுத முடியும் என்கிற தன்னம்பிக்கை வந்தது. ஒருகட்டத்தில் புதினம் எழுதலாம் எனத் தோன்றியது. 2019இல் ‘பிரதிலிபி’ செயலியில் ‘மனதின் வார்த்தைகள் புரியாதோ?’ என்கிற எனது முதல் கதை வெளியானது. முதல் கதை 80 அத்தியாயங்களுக்கு நீண்டது” என்கிற தீபா, இதுவரை 15 புதினங்களை எழுதியுள்ளார்.
சில செயலிகளில் வெளியிடப்படும் இவர்களின் கதைகளைச் சந்தா செலுத்தி மொத்தமாக வாசிக்கலாம். சில கட்டுப்பாடுகளுடன் இலவச மாகவும் வாசிக்கலாம். அமேசான் கிண்டில் வழியாகவும் ஒலி வடிவ நூல்களாகவும் இவை கிடைக்கின்றன. அமேசானில் புதினம் வெளியானவுடன் ஒரு மாதத்துக்குக் குறைந்தபட்சம் 15,000 ரூபாயும் பின்னாள்களில் மாதத்துக்கு ஏறக்குறைய 7,000 ரூபாயும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. எழுதுவதைப் பகுதி நேர வேலையாகக் கருதினால், இது நல்ல வருவாய்தான். இவர்கள் தங்களுக்கென இணையதளங்களும் வைத்துள்ளனர். அவற்றில் ஓரிரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வோர்அத்தியாயமாகப் பதிவேற்றம் செய்கின்றனர். சக எழுத்தாளர்களின் புதினங்களையும் தங்கள் இணைய தளத்தில் வெளியிடுகின்றனர். முன்னணிப் பதிப்பகங்களால் இவர்களது புதினங்கள் புத்தகங்களாக அச்சிடவும் படுகின்றன.
இதுபோன்ற பல சுவாரசியமான கட்டுரைகளை ‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர் 2024லில் வாசிக்கலாம்.
276 பக்கங்கள், விலை ரூ.175
ஆன்லைனில் பெற: https://shorturl.at/bXX2Q
வாட்ஸ் அப் எண்: 9940699401