

இருபது வருடங்களுக்கும் மேலாக ஓட்டும் இருசக்கர வாகனம். சீரற்ற சாலைகளுக்கு மத்தியில் அதிசயமாகப் புதிதாய் போடப்பட்ட மதுரை செல்லூர் கண்மாய் ஓர சாலை. அதிக வாகனப் போக்குவரத்தின்றி இருந்த முன் அந்தி மாலைப் பொழுது.
நீத்தார் சடங்கு முடிந்து வீசி எறியப்பட்ட எண்ணற்ற மாலைகளில் ஒன்றின்மீது வண்டியின் முன் சக்கரம் ஏறி இறங்கும்போது கட்டுப்பாட்டை மீறி வலது பக்கம் சரிந்தது வண்டி. மிதமான வேகத்தில் சென்றும் நிறுத்த முடியவில்லை. வலது முழங்கையும் முழங்காலும் சாலையைத் தேய்த்துத் தாங்க, பெரும் கூப்பாடோடு கைகளை விடுவித்து எழ முயன்றேன். அதற்குள் ஏழெட்டுப் பேர் சூழ்ந்துவிட, ஒருவர் காலை உதறச் சொன்னார். இன்னொருவர் கையைக் கொடுத்து எழுப்பிவிட, வலது காலை ஊன்ற முயன்று மீண்டும் கீழே விழுந்தேன். மீண்டும் முயன்று சரிந்தேன். மூட்டே இல்லாதது போன்ற உணர்வு. ‘என் கால் போச்சு’ எனச் சில நிமிட அரற்றல். கிட்டத்தட்ட நொண்டிக்கொண்டே இருவர் துணை யோடு வேறொரு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். ஜவ்வு முறிவு என எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தெரிவித்தது.
முதல் 15 நாள்கள் முழுமையாகப் படுக்கை வாசம். அதன் பிறகு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றபோதே பாதி நிம்மதி. உறவுகளின் துணையோடு வீட்டு வேலைகள் நடக்க, அடுத்து வந்த நாள்கள் கொடுமையாக ஊர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்து முக்கால்வாசிக்கு மேல் மீண்டு விட்டாலும், மூட்டு அவ்வப்போது சின்ன சின்ன வலியைக் கொடுத்துக் கீழே விழுந்ததைக் காட்டிக்கொள்கிறது.
எல்லாம் சரியாகிவிடும் என்றாலும் மீண்டும் பழைய மாதிரி நடக்க முடியுமா என்கிற போராட்டம் ஒரு மாதம் இருந்தது. பிரசித்திபெற்ற மருத்துவமனை. சரியான கூட்டம். மருத்துவரிடம் காத்திருக்கையில் கை, கால், இடுப்பு எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை பெறுவோரிடம் பேசுகையில் ‘நம் நிலை தேவலை’ எனும் எண்ணம் எழுந்தது. குறிப்பாக, நம்மைவிட இளையவர்கள் அறுவை சிகிச்சையைக் கடந்து வந்தும் சிரமப்படுவதைப் பார்த்தபோது மனதில் ரணம்.
தெரிந்தவர்களிடம் இருந்து, ‘வால் சூப் சாப்பிடு', ‘ஆர்லின் ஆயில் தடவு', ‘சூடான, குளிர்ச்சியான தண்ணீரை மாற்றி மாற்றி ஒத்தி எடு', ‘ஆமணக்கு இலையால் ஒத்தடம் கொடு', ‘நீ கேப் (knee cap) அணிந்துகொள்' என விதவிதமான ஆலோனைகள் வந்துகொண்டே இருந்தன. என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என அவர்கள் அளித்த ஆலோசனைகள் உண்மையில் உபயோக மானவை. அவர்களுடனான உரையாடல்கள் பல தகவல்களைத் தந்தன. பலரும் வண்டி ஓட்டும்போது கீழே விழுந்தோ, தரையில் வழுக்கி விழுந்தோ, மைதானத்தில் விளையாடும்போது விழுந்தோ இயல்பான வேலைகளைச் செய்ய முடியாமல் வாரக்கணக்கில் சிரமப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு விளையாட்டு வீரர் இரு கால்களி லும் மாற்றி மாற்றிப் பத்து முறைக்கு மேல் ஜவ்வு முறிவைச் சந்தித்ததாகச் சொன்னபோது அதிர்ச்சி. ‘நாமதான் கொஞ்சம் லேட்டு' என்பது போல அடிபட்டு எழுந்து நடக்கும் பெரும்பான்மை யோர் அட்டவணையில் இணைந்தது போன்ற எண்ணம். ‘நான் தனி ஆளு இல்லை’ என்று தோன்றியது.
சிறுவயதில் ஓடியாடிக் கீழே விழுந்து, சிராய்ப்பு வாங்குவதும் அந்தப் புண் எளிதில் ஆறுவதும் இயல்பு. வயது ஏற ஏற உடலில் பலவீனமும் ஏறுகிறது. குழந்தைகள் என்றால் காயமும் கருணையோடு உள்ளது. எனக்கு ஆலோசனை தந்தவர்கள் அனைவருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள். எனக்கு வீதியில் கிடந்த பூ மாலை தந்ததைப் போன்றே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அவர்களின் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நிலைகுலையச் செய்திருக்கிறது. ஒழுங்காக நடக்காமல், முறையாக ஓடாமல், சரியாக வண்டியை ஓட்டாமல் இருக்கும் சமயங்களில் சின்ன சின்ன தண்டனைகள் வழங்கி கண்டிப்புக் காட்டுகிறது காலம். ‘இனி எதைச் செய்தாலும் சற்று நிதானத்துடன் செய்வதைச் செய்’ எனச் சொல்கிறது.வயது கூடக்கூட அதன் கண்டிப்பும் அதிகரிக்கிறது. நாற்பதைத் தாண்டிவிட்டாலே நாலா பக்கமும் கண்களையும் கவனத்தையும் குவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன்.