

நான் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்தபோது என் வகுப்பாசிரியர் மூலமாக சு.சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ நாவல் எனக்கு அறிமுகமானது. என் ஆசிரியரின் பேச்சு இந்நாவலைப் படித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டியது. நூலகத்தில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ‘வாடாமல்லி’யில் வரும் ‘சுயம்பு’ என்கிற கதாபாத்திரம் என்னை வெகுவாகப் பாதித்தது. சுயம்பு மனதளவில் தன்னை ஒரு பெண்ணாக நினைத்துக்கொள்கிறான். அதன்பிறகு யாரும் அனுபவிக்கக் கூடாத துன்பத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறான். ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழ்வதிலுள்ள துயரங்களை இந்நாவலின் மூலம் தெரிந்துகொண்டேன். இந்நாவல்தான் திருநங்கையரின் வலியைப் புரிந்துகொள்ள உதவியது.
அதன் பிறகு ‘புதுமைப்பித்தன் கதைகள்’ எனக்கு 100 ரூபாய் விலையில் மலிவுப் பதிப்பாகக் கிடைத்தது. அதில் ‘வழி’ என்கிற கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை சிறியதாக இருந்தாலும் ஒரு பெண்ணின் துயரத்தை மிக வலிமையாக எனக்குள் கடத்தியது. ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ கதையில் புதுமைப்பித்தனின் பகடி மிகச் சிறப்பாக இருந்தது. அவரது நெல்லை வட்டாரமொழி ஆரம்பத்தில் அவரது கதைகளைப் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருந்தது. புதுமைப்பித்தனைத் தொடர்ந்து கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ கதையைப் படித்தேன். மணி, சாரதா, ராமு ஆகிய மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு கு.ப.ரா. ஆண்களின் மன உலகத்தை அழகாகக் காட்டியிருந்தார்.
காவேரி எழுதிய ‘ஆத்துக்குப் போகணும்’ என்கிற நாவலையும் படித்தேன். காவேரி தமிழிலும் ஆங்கிலத்திலுமாகச் சிறுகதை, நாவல்களை எழுதிவருகிறார். இந்நாவல் வீடு என்னும் பருப்பொருளைப் பல்வேறு குறியீட்டுத் தலங்களுக்கு எடுத்துச் செல்லும் நுண்ணியல்பு வாய்ந்தது. இந்த நாவலை நான் வாசித்தபோது மனதிற்குள் பல கேள்விகள் எழும்பின. பெண்களுக்கும் வீட்டுக்குமான உறவை இந்நாவல் எனக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. இந்நாவலைத் தொடர்ந்து அவரது சிறுகதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.
ஒருநாள் வகுப்பில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட இருக்கும் ‘இளைஞர் இலக்கியத் திருவிழா’ போட்டிக்கான சுற்றறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் ஹைக்கூ கவிதைப் போட்டியும் இருந்தது. ஏற்கெனவே வாசிப்பில் இருந்த ஆர்வம் போட்டியில் கலந்துகொள்ளக் காரணமாக அமைந்தது. சுஜாதாவின் ‘ஹைக்கூ ஓர் அறிமுகம்’ என்கிற நூலின் வழியாக ஹைக்கூ கவிதை குறித்து அறிந்துகொண்டேன். தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை எழுதிப் பார்த்தேன். அதன் வடிவம் பிடிபடவே இல்லை. ஆனால், எழுத்துப் பயிற்சி, போட்டியில் கலந்துகொள்ளும் தன்னம்பிக்கையை அளித்தது. போட்டியின் முடிவு எனக்குச் சாதகமாக இல்லை. மூன்றாம் பரிசு கூடக் கிடைக்கவில்லை. அந்தத் தோல்வி என்னை மேலும் ஹைக்கூ கவிதை களை எழுதத் தூண்டியது. இப்போது அந்தக் கவிதை வடிவம் பிடிபடத் தொடங்கி யிருக்கிறது. இப்போது 100 கவிதைகள் வரை எழுதி வைத் துள்ளேன். ஒருவேளை அந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அதோடு ஹைக்கூ எழுதுவதை விட்டிருப்பேனோ என்னவோ. என்னைப் பொறுத்தவரை தோல்வி நல்லது!
- சு. சாருலதா