தலைவாழை: பொரியிலே பல சுவை காண்போம்

தலைவாழை: பொரியிலே பல சுவை காண்போம்
Updated on
2 min read

ஆயுத பூஜை, விஜயதசமி நாள்களில் வீட்டில் பொரிகடலை குவிந்துவிடும். அதை வீணாக்காமல் புது வகை உணவைச் சமைத்துவிடலாம். பொரி சாட் மசாலாவைக் குழந்தைகள்கூடச் செய்யலாம். அவர்களுக்கும் இது புது அனுபவமாக இருக்கும்.

பொரி உருண்டை

என்னென்ன தேவை?

பொரி, வெல்லம் – தலா 1 கப்

பொடித்த ஏலக்காய் – சிறிதளவு

தேங்காய்ச் சில்லு, பொட்டுக்கடலை, நெய் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

வெல்லத்தில் கெட்டிப் பாகு காய்ச்சுங்கள். பாகு முறிந்துவிடக் கூடாது. தேங்காய்ச் சில்லைச் சின்ன சின்னதாகக் கீறி, நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். பொரி, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்ச் சில்லு, பொட்டுக்கடலை அனைத்தையும் தாம்பாளத்தில் கொட்டி அவற்றுடன் வெல்லப் பாகைச் சேர்த்து கைபொறுக்கும் சூட்டில் உருண்டை பிடியுங்கள். கையில் சிறிது அரிசி மாவைத் தொட்டுக்கொண்டால் பாகு கையில் ஒட்டாது.

பொரி சாட் மசாலா

என்னென்ன தேவை?

பொரி - 1 கப்

ஓமப் பொடி – 1 கப்

வெங்காயம், தக்காளி – தலா 1

மல்லித் தழை - சிறிதளவு

சாட் மசலா - 1 டீஸ்பூன்

சாட் மசாலா செய்யத் தேவையான பொருள்கள்:

சீரகம், தனியா, மாங்காய்த் தூள் - தலா கால் கப்

கறுப்பு உப்பு, மிளகு – தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 8

எப்படிச் செய்வது?

சாட் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து, அரைத்தெடுத்தால் சாட் மசாலா தயார். சாட் மசாலா பொடியுடன் பொரி, ஓமப் பொடி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித் தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தால் பொரி சாட் மசாலா தயார்.

பொரி உப்புமா

என்னென்ன தேவை?

பொரி - ஒரு கப்

பொட்டுக்கடலை பொடி - அரை டேபிள் ஸ்பூன்

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 1

எண்ணெய், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுந்து, வேர்க்கடலை - தாளிக்க

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பொரியைத் தண்ணீரில் அலசிப் பிழிந்துகொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுந்து, வேர்க்கடலை சேர்த்துத் தாளியுங்கள். பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். அதோடு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்புத் தீயைக் குறைத்துப் பொரியைச் சேர்த்துக் கிளறுங்கள். விரும்பினால் சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். லேசாகச் சூடானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இல்லையென்றால் பொரி தீய்ந்துவிடும். இறுதியில் பொட்டுக்கடலைப் பொடி, கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in