

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கமோ முக்கியமான கட்டத்தையோ அடையாமலே புகழ்பெற்றிருக்கிறார் ஜீயிங் ஜாங். 58 வயதில் சிலியின் டேபிள் டென்னிஸ் வீராங்கனையாகத் தகுதிபெற்று, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறார்.
சீனாவில் பிறந்த ஜீயிங்குக்கு மிகச் சிறிய வயதிலேயே டேபிஸ் டென்னிஸை அறிமுகம் செய்து வைத்து, பயிற்சியாளராகவும் இருந்தவர் அவருடைய அம்மா. ஒன்பது வயதில் முறையாகப் பயிற்சியை ஆரம்பித்த ஜீயிங், 12 வயதில் தொழில்முறை விளையாட்டு வீராங்கனையாக மாறினார். 16 வயதில் சீனாவின் தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. அடுத்த இரண்டே ஆண்டுகளில் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சீனாவின் சார்பாகப் பங்கேற்கத் தேர்வானார் ஜீயிங்.
”என் குழந்தைப் பருவத்தில் டேபிள் டென்னிஸ் புகழ்பெற்று இருந்தது. பிரேசில் நாட்டுக்கு ஃபுட்பால் எப்படியோ அப்படி எங்களுக்கு டேபிள் டென்னிஸ்! ஆனால், 1986ஆம் ஆண்டு பல வண்ண ‘ராக்கெட்’களைப் பயன்படுத்தலாம் என்று ஒரு விதி வந்தது. அதுவரை நான் ஒரே வண்ண ராக்கெட்களைத்தான் பயன்படுத்திவந்தேன். பல வண்ண ராகெட்கள் என் கவனத்தைச் சிதைத்து, விளையாட்டை விட்டே செல்லும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டன. ஒலிம்பிக் செல்லும் என் கனவும் தகர்ந்தது” என்கிறார் ஜீயிங்.
சிலியில் குடியேற்றம்
20 வயதில் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் பணிக்கு வருமாறு சிலி நாட்டிலிருந்து அழைப்பு வந்தது. சீனாவில் இருந்து சிலிக்குச் சென்ற ஜீயிங், பள்ளியில் பயிற்சியாளராக வேலையைத் தொடர்ந்தார். சிலியில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்றார். திருமணம், குழந்தைகள் என்றான பிறகு, டேபிள் டென்னிஸைக் கைவிட்டு, சீனப் பொருள்களை விற்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். மகனுக்கு டேபிள் டென்னிஸ் மீது ஆர்வம் வந்தபோது தானே பயிற்சியாளராக இருந்து மகனை வழிநடத்தினார்.
அதன் பிறகு 20 ஆண்டுகள் டேபிள் டென்னிஸை முற்றிலும் மறந்திருந்தார் ஜீயிங். ஆனால், மீண்டும் டேபிள் டென்னிஸ் மீது ஆர்வம் வருவதற்கு, 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருந்தொற்றுக் காலம் காரணமாக அமைந்தது. வீட்டுக்குள் முடங்கியபோது பொழுதுபோக்காக டேபிள் டென்னிஸை விளையாட ஆரம்பித்தார். ஆர்வம் அதிகமாக, தினமும் மூன்று மணி நேரம் கடுமையாகப் பயிற்சிசெய்தார். இளமையில் விளையாடியதுபோல் இப்போது அவ்வளவு எளிதாக விளையாட முடியவில்லை. ஆர்வத்தில் அதிக நேரம் பயிற்சி செய்யும்போது தோள்பட்டை வலிக்க ஆரம்பித்துவிடும். இருந்தபோதும் அவர் விளையாடுவதை நிறுத்தவில்லை.
ஊக்கமூட்டிய பயிற்சியாளர்
பெருந்தொற்றுக் காலம் முடிந்தபோது, ஜீயிங்கின் முன்னாள் பயிற்சியாளரும் நண்பருமான ஸுவான் லிஸாமா, “அந்தக் காலத்தில் பார்த்ததுபோலவே விளையாட்டு இருக்கிறது. குறையே கண்டுபிடிக்க முடியவில்லை. தொழில்முறையில் விளையாடினால் சிலிக்கு நல்ல விளையாட்டு வீராங்கனை கிடைப்பார்” என்றார்.
”அவர் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. விளையாட்டுக்குச் சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அவருக்காகப் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். விரைவில் சிலி தேசிய அணியில் இடம் கிடைத்தது. கனவிலும் இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் ஜீயிங்.
ஒலிம்பிக் வாய்ப்பு
“சூடாமெரிக்கனோஸ், பான் அமெரிக்கன்ஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பும் ஜீயிங்குக்குக் கிடைத்தது. என் கணிப்பு சரியாக இருந்தது. 58 வயதில் இது மகத்தான சாதனை. உலகத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பார் ஜீயிங்” என்றார் ஸுவான் லிஸாமா.
பாரிஸுக்குச் சென்றார் ஜீயிங். தகுதிச் சுற்றுப் போட்டியோடு வெளியேறிவிட்டார். ஆனால், ஒட்டுமொத்த உலகமும் ஜீயிங் ஜாங்கை அன்பால் அரவணைத்துக்கொண்டது.
“நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுடன் செல்லவில்லை. ஒலிம்பிக்கில் விளையாடுவதுதான் என் ஆரம்பக் காலக் கனவாக இருந்தது. அந்தக் கனவு 58 வயதில் நிறைவேறும் என்று நினைக்கவில்லை. பெண்கள் கனவு காண்பதே அரிது. அப்படியே கண்ட கனவை நனவாக்குவது அரிதினும் அரிது. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால், எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை சிலி நாடு வழங்கியிருந்தது. என் கனவும் நிறைவேறிவிட்டது! என் சீனப் பெயரை சிலி மக்கள் உச்சரிக்கச் சிரமப்படுவார்கள். அதனால் ’டானியா’ என்றுதான் அழைப்பார்கள். சிலியில் நான் சீனராகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களில் ஒருவராகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். அதேபோல நான் முதியவள் என்கிற பாகுபாடும் இங்கே இல்லை. ஒலிம்பிக்கில் என்னைவிட மூன்று வயது பெரியவர் நி ஆலியன் (Ni Xialian), தொடர்ச்சியாக ஒலிம்பிக் உள்படச் சர்வதேசப் போட்டிகளில் லக்ஷம்பர்க் நாட்டுக்காக விளையாடிவருகிறார். அவரும் நானும் சின்ன வயதில் ஒன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டோம். அவரை ஒலிம்பிக்கில் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்கிறார் ஜீயிங் ஜாங்.
ஒலிம்பிக்கின் நோக்கமே பதக்கம் பெறுவதல்ல, எப்படிப் போராடுகிறோம் என்பதுதான்! அதைச் சிறப்பாகவே செய்திருக்கும் ஜீயிங் ஜாங், அடுத்த ஒலிம்பிக்கிலும் பங்கேற்கும் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.