

இ
ந்தியாவைச் சுத்தமும் சுகாதாரமும் மிக்க நாடாக மாற்றுவதாகச் சொல்லி, பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், அது பல மாநிலங்களிலும் திட்டமாக மட்டுமே இருக்கிறதே தவிர செயல்வடிவம் எடுக்கவில்லை. ஆனால், கேரளாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரியான சுதா, சொல்லைவிடச் செயலில் நம்பிக்கை உள்ளவர். இவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கட்டம்புழா வனச்சரகத்தில், வனச்சரகராகப் பணியாற்றிவருகிறார். கடந்த 2016-ல் அங்குள்ள ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளில் கழிவறை கட்டும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கழிவறை கட்டுவது சாதாரணமான விஷயம்தானே, இதில் என்ன கஷ்டம் இருக்கிறது என்று பலருக்கும் தோன்றலாம். யானைகள் உலாவரும் அடர்ந்த வனப்பகுதியில் ஆள் நடமாட்டமே அரிதாக இருக்கும் இடத்தில் கழிவறை கட்டுவதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதே இமாலய சாதனைதான். கட்டம்புழா வனச்சரகத்தில் இருக்கும் ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளும் 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றன.
அடர்ந்த வனப்பகுதியில் ஒற்றையடிப் பாதைகளை மட்டுமே நம்பியிருக்கும் இந்த மக்கள், ஒரு குடியிருப்பில் இருந்து மற்றொரு குடியிருப்புக்குப் போகக் குறைந்தது மூன்று மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். இப்படிப்பட்ட குக்கிராமப் பகுதியில்தான் 497 கழிவறைகளைக் கட்டி சுதா சாதித்திருக்கிறார்.
அங்குள்ள மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களை மட்டுமே நம்பியிருந்தனர். வனப்பகுதி என்பதால் யானை உள்ளிட்ட விலங்குகளோடு இரவு நேரத்தில் விஷப் பூச்சிகளால் தாக்கப்படும் ஆபத்தும் அங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு இருந்தது. இந்த நிலையிலும் தங்களுக்குச் சொந்தமாகக் கழிவறை வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்படவில்லை. இதற்குக் காரணம் கழிவறை கட்டக் கூடாது என்பதல்ல; கழிவறை கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற மனநிலைதான் அவர்களைத் தடுத்தது.
சுதா பஞ்சாயத்து நிர்வாகத்தின் நிதியுதவி, வனத்துறை அனுமதி ஆகியவற்றோடு ஆதிவாசி குடியிருப்புகளில் கழிவறை கட்டும் பணிக்கான அனுமதியையும் வாங்கினார். ஆனால், அதற்கு பிறகுதான் சவால்கள் தொடங்கின. எந்தவொரு கட்டுமான ஒப்பந்ததாரரும் வனப்பகுதிக்குள் கழிவறை கட்டுவதற்கு முன்வரவில்லை. கழிவறை கட்டுவதற்கான பொருட்களை நியாயமான விலையில் வாங்கினாலும், அவற்றைச் சாலை வசதி இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்வது செலவை வெகுவாக அதிகரிக்கும் என்பதுதான் அவர்கள் அனைவரும் சொன்ன காரணம்.
இதற்கு ஒரு சுலபமான தீர்வை சுதா கண்டறிந்தார். வனப்பகுதி வழியாகச் செல்லும் ஆறுகளில் பரிசல் மூலமாகக் கட்டுமானப் பொருட்களை ஆதிவாசி மக்கள் வசிக்கும் காலனிக்கு அருகே கொண்டு சென்றார். சில நேரம் கட்டுமானப் பொருட்களின் பாரம் தாங்காமல் பரிசல் கவிழ்ந்ததும் நடந்திருக்கிறது. ஆனால், அவற்றால் மனம் தளராமல் இலக்கை எட்டிப்பிடித்தார்.
ஒருவழியாகக் கட்டுமானப் பொருட்களைக் கழிவறை கட்டவேண்டிய பகுதிக்குக் கொண்டு சென்றாகிவிட்டது. ஆனால், அதைக் கட்டுவதற்கு தேவையான ஆட்கள் இல்லை என்பது அடுத்த பிரச்சினையாக உருவெடுத்தது. எர்ணாகுளம் புறநகர் பகுதிகளில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்களை அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வது மிகப்பெரிய சவாலாக மாறியது. யானைகள் உலவும் காட்டுக்கு வந்து வேலை செய்ய யார்தான் முன்வருவார்? இதற்கும் வனச்சரகர் சுதா தீர்வு கண்டார்.
ஆதிவாசி குடியிருப்பு பகுதியிலேயே கட்டுமான தொழிலில் ஓரளவு அனுபவம் இருந்தவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் போதிய பயிற்சி பெற உதவினார். இதன் விளைவாகக் கழிவறை கட்டுவதற்கான ஆள் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, ஆகஸ்ட் 2016-ல் கழிவறை கட்டும் பணி தொடங்கியது. தொடர்ந்து மூன்று மாதங்கள் சுதாவின் ஓய்வில்லாத செயல்பாட்டால், 497 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2016 அக்டோபர் மாதம் திறந்தவெளி கழிவறை இல்லாத இந்தியாவின் மூன்றாவது மாநிலம் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்தது கேரளா.
கழிவறை என்றால் என்னவென்றே தெரியாத ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளிலும் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து விளக்கினார். வனச் சரகர் வேலையோடு மட்டும் தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் தான் பணியாற்றுகிற வனத்தைச் சுற்றியுள்ள மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக உழைத்த சுதாவுக்கு சிறந்த வனத்துறை அதிகாரிக்கான விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கிக் கவுரவித்தார்.
மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசின் நாரி சக்தி புரஸ்கார் விருதையும் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சுதாவுக்கு வழங்கினார்.