Last Updated : 24 Jun, 2018 12:19 PM

 

Published : 24 Jun 2018 12:19 PM
Last Updated : 24 Jun 2018 12:19 PM

நிதர்சனம்: கணவனை இழந்தால் வாழ்வில்லையா?

நா

ம் பெண்களுக்கென்றே ஆயிரமாயிரம் ‘தனித்துவ’ சொற்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். ‘சுமங்கலி’ என்ற சொல் திருமணமான பெண்களைக் குறிக்கிறது. இதே போன்ற வார்த்தை ஆண்களுக்கு உண்டா?

‘விதவை’ என்ற சொல் கணவனை இழந்த பெண்ணைக் குறிக்கிறது. மனைவியை இழந்த கணவனைக் குறிக்க ஏதேனும் சொல் உண்டா? பெண் என்ற பாரபட்சம் மொழியிலும் தொடர்வதையே இவை உணர்த்துகின்றன.

கைவிடப்பட்ட லட்சியம்

கணவனை இழந்த பெண்கள் சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நாள் மாநாடாக சமீபத்தில் கூடியிருந்தார்கள். வயது வித்தியாசமில்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களது வாழ்க்கையைக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.

இந்தக் காலத்திலுமா இப்படி? எத்தனை நாகரிகம், எத்தனை தகவல்தொழில்நுட்பங்கள்? ஆனாலும், விதவை என்று சமூகத்தால் சுட்டப்படும் பெண், இன்னமும் சுப நிகழ்வுகளிலிருந்து புறக்கணிக்கப்படுவதில் தொடங்கி வாடகை வீடு கிடைக்காமல் அல்லாடுவதுவரை ஏராளமானவற்றைக் கண்ணீரோடு பட்டியல்போட்டார்கள்.

கணவன் இறந்தவுடனேயே உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் ‘சதி’ கொடுமையை எதிர்த்த ராஜாராம் மோகன்ராய் தொடங்கி, கணவனை இழந்த பெண்களுக்குத் திருமணம் செய்துவைத்துச் சமூக சீர்திருத்த புரட்சியைத் தொடங்கிவைத்த தந்தை பெரியார்வரை நம் முன்னோரின் லட்சிய நடவடிக்கைகளை இடைப்பட்ட காலத்தில் நாம் கைவிட்டுவிட்டோமா என்ற குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

கணவனை இழந்த பெண்களுக்குத் தையல் மிஷின் வழங்குவது ஒன்றே அரசின் ஆகப் பெரிய கடமையாக வழக்கத்தில் இருந்துவருகிறது. ஆனால், விதவைச் சான்றிதழ் வாங்குவதற்குள் அந்தப் பெண்கள் படும்பாடு பெரும் துயரம்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டுத் தளங்களில் கணவனை இழந்த பெண்களுக்கான முக்கியத்துவம் உணரப்படுவதற்கும் அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கும் விதவைகள் பாகுபாடு மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு 18 லட்சம் முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகையை நிறுத்திவைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாகக் கணவனை இழந்த பெண்கள் பெற்றுவந்த உதவித்தொகை கணிசமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது தனிக்கதை.

துயர் நீக்குமா அரசு?

சமூகநலத் துறையின் இன்னொரு உட்பிரிவாகத் தனி இயக்குநரகம் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். தமிழகத்தில் 38 லட்சம் விதவைகள் உள்ளனர் என இந்த மாநாட்டின் ஆய்வறிக்கை கூறுகிறது. மாவட்டம்தோறும் அவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்புப் பணிக்கும் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் தனி இயக்கு நரகம் தேவை.

‘ஆர்வமுள்ள விதவைப் பெண்களுக்கும் அனைத்து விதவைப் பெண்களின் குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வியும் தொழிற்கல்வியும் வழங்க வேண்டும்.

வறுமையில் வாடும் வீடில்லாத விதவைப் பெண்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். அரசின் தரிசு நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்வதற்கு இலவச நிலமும் வழங்கப்பட வேண்டும்.

அரசு வேலைவாய்ப்பு பெற விதிக்கப்பட்டுள்ள வயது மற்றும் வருமான உச்சவரம்பை நீக்கி, விதவை என்ற நிலை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட வேண்டும். எந்தவித பிணை, நிபந்தனைகளின்றி கல்வி, சிறுதொழில், வணிகம் ஆகியவற்றுக்கு வங்கிகள் கடனுதவி செய்ய முன்வர வேண்டும்.

‘ஆதரவற்ற விதவைச் சான்றிதழ்’ அனைத்து விதவைப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். விதவைப் பெண்கள் அரசு வேலைவாய்ப்பு பெற விதிக்கப்பட்டுள்ள உச்ச வயதுவரம்பை நீக்க வேண்டும்.

விதவைப் பெண்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.’

- இந்தக் கோரிக்கைகளை விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் (நாகப்பட்டினம்), சுவாதி பெண்கள் இயக்கம் (கரூர்) உள்ளிட்ட 18 பெண்கள் அமைப்புகள் முன்னெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. கணவனை இழந்த, தனித்து வாழும் பெண்களின் வாழ்வுரிமைக்கான இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பெண்களுக்கான அமைப்புகளும் கணவனை இழந்த பெண்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை முன்னெடுப்பது இன்றைய சமூகச் சூழலில் மிக முக்கியத் தேவை என்பதையே தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டுரையாளர்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x