ஒளிந்திருக்கும் பெண்களின் பிளாஸ்டிக் வாழ்க்கை | உரையாடும் மழைத்துளி - 2

ஒளிந்திருக்கும் பெண்களின் பிளாஸ்டிக் வாழ்க்கை | உரையாடும் மழைத்துளி - 2
Updated on
2 min read

நம் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு பாரம்பரியமான சித்திரம் ஒன்று உண்டு. குறிப்பாக, அதில் கதாபாத்திரங்களாக வரக்கூடிய பெண்கள் சம்பந்தமானதுதான் அது. தமிழ் சினிமாவில் உள்ள பெண்கள் எல்லாருமே திருமணத்திற்குப் பின்பு சேலை அணிபவர்களாகவும் அதற்கு முன்பாக அவர்கள் மாடர்ன் உடைகளை அணிபவர்களாகவும் காட்டப்படுவார்கள். அதே போல அவர்கள் மெல்லிய குரலில் பேசி குடும்பத்தில் ஒரு தியாகியாகவே வலம்வருவார்கள்.

பெண்கள் பொதுவாகவே மென்மை யானவர்கள், காதலன் அல்லது கணவன் சத்தம் போடும்போது அழுவார்கள் அல்லது அமைதியாக இருப்பார்கள். தங்கள் குடும்ப கௌரவத்தை நினைத்துச் சமூகத்தில் மிகக் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். காதலால் கசிந்துருகுவார்கள்... இவை எல்லாமேதான் இங்கு தமிழ்ப் பெண்களுக்கான அடையாளம்.

நாயகிகள் முதல் துணை கதாபாத்திரங்கள் வரை எல்லாப் பெண்களுக்கும் தமிழ் சினிமாவில் ஒரே மன உலகம்தான் இருந்து வருகிறது.

இதையெல்லாம் தமிழ்ச் சமூகத்தில் முதல்முறையாக உடைத்தவை பா.இரஞ்சித்தின் பெண் கதாபாத்திரங் கள் என்று நினைக்கிறேன். ‘இப்ப என்ன, என்னைக் கட்டிக்கிறீயா?’ என்று சத்தமாகப் பேசும் ஒரு பெண்ணை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் பார்த்தபோது முதல் முறையாக மனதில் சிறு அதிர்வு வரத்தான் செய்தது. ஒவ்வொரு பெண்ணும் சத்தமாகப் பேச முடியாத, சத்தமாகச் சிரிக்க முடியாத ஒரு சமூகத்தில் ஒரு பெண் சத்தமாக ‘என்னைக் கட்டிக்கோ’ என்று சொல்வது மிக அழகான விஷயமாகக் கொண்டாடப்பட்டது. எது கலையில் கொண்டாடப்படுகிறதோ அது சமூகத் தில் மெல்ல, மெல்ல ஊடுருவும் என்று மிகத் தீர்மானமாக நம்புகிறேன்.

உரத்துப் பேசும் நாயகி

பா.இரஞ்சித் திரைப்படங்களில் வரும் பெண்கள் உறுதியானவர்கள். மன பலம் கொண்டவர்கள். தனக்கெனப் பிரத்யேகமான அடையாளம் கொண்ட வர்கள். அவர்கள் யாரைச் சார்ந்தும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்கள். இதுவே அவருடைய கதாபாத்திரங்களில் பெண்களை மிகவும் வித்தியாசமானதாகக் காட்டியது. குறிப்பாக. அவற்றின் உடல்மொழியை வேறு எந்த படத்திலும் இதுவரை நான் காணவில்லை. ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பெண் கதாபாத்திரங்களும் மிக முக்கியமானவை. யசோதை என்கிற கதாபாத்திரத்தில் வரும் அந்தப் பெண் வீட்டை விட்டுச் சிறு வயதிலேயே ஓடி வந்து சாதி கடந்து திருமணம் புரிந்துகொண்டவள். அந்தப் பெண்ணின் அம்மா அவளுடைய மாமியாரிடம், “எங்க வீட்ல எல்லாம் தண்ணி குடிப்பீங்களா?” என்று கேட்கும்போது நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் இயக்குநர் தமிழரசன் மிக அற்புதமாக அதை உணர்த்தியிருப்பார். அந்தப் பெண் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு காலத்தைக் கழிக்கும் தன் கணவனைச் சமாளிக்கக் காட்டும் இறுக்கமும் பார்வையில் இருக்கும் காதலும் தமிழ்த் திரைக்கு மிகப் புதிதான விஷயங்கள்.

பெண்களின் திறமை

பெண்களின் திறமை என்பது தமிழ்ச் சமூகத்தில் மிக மலிவான ஒரு விஷயம், அதை யாரும் நம்புவதும் இல்லை, அதற்கு யாரும் ஆதரவுக் கரம் நீட்டுவதும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறு பெண் தங்களுடைய டீமில் கிரிக்கெட் விளையாட வருகிறார் என்று தெரிந்தவுடன் நாங்கள் விளையாட மாட்டோம் என்று இருவர் அந்த அணியை விட்டு வெளியேறுகின்றனர். அப்போது ஹரீஷ் கல்யாண் ஒரு வசனம் பேசுகிறார்: ‘சாதித் திமிரை எதுக்குறோம் இல்ல. அப்டினா இது ஆம்பள என்கிற திமிரு இல்லயா?’ என்று அர்த்தப்படும் அந்தக் குறிப்பிட்ட வசனம் தமிழ்ச் சமூகத்தின் கோர முகத்தை அப்படியே கிழித்துப் போடுவதாக அமைகிறது.

பெண்கள் கிரிக்கெட் விளையாடு வார்கள் என்பதுகூடச் சமூகத்தில் பலருக்கு மிக ஆச்சரியமான, அதிசய மான விஷயமாகத்தான் இன்றுவரை இருந்துவருகிறது. பெண்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கு வாய்ப்பு வேண்டும். அந்த வாய்ப் பைத் தேடி ஒரு வேட்டை நாய் மாதிரி வாழ்க்கை பூராவும் இந்தச் சமூகத்தில் ஒரு பெண் ஓடிக்கொண்டே இருப்பது தான் கலை சார்ந்த ஒரு பெண்ணுடைய பரிதாபமான நிலையாக இருக்கிறது.

நம்பிக்கை தரும் படைப்பு

இன்னொரு காட்சியில் அந்த நாயகி, நாயகனை விட்டுப் பிரிந்து அம்மா வீட்டிற்குப் போகிறாள். அவளுடைய மாமியார், அவளுடைய வீட்டிற்கு வந்து அவளைச் சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டி வருவார். அந்த நாயகியின் கணவன் தினமும் அவளது புடவைகளை விரித்து அதன் மீது உறங்கியிருப்பதை வீட்டுக்குப் போனதும் அவள் அறிந்து கொள்வாள். அந்தப் புடவைகளை எல்லாம் மடித்துக் கொண்டிருப்பாள். உள்ளே நுழையும் கணவனிடம், “ஒரு புடவைய விரிச்சி நீ படுக்க மாட்டியா? இத்தனை புடவையை விரிச்சுப் போட்டு இருக்க?” என்று அவள் பேச அவன் அழுதபடி அவளை அணைத்துக் கொள்வான். இப்படி ஒரு காட்சியை நாம் ‘ரோல் ரிவர்சல்’ ஆகத்தான் ஒவ்வொரு தமிழ் சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். பிரிந்த மனைவி அழுதுகொண்டு கணவனிடம் வந்து பேசும் காட்சிகள் இங்கு வெகு பிரபலம். அதையெல்லாம் மாற்றிப்போடும் விதமாக ஒரு திரைப்படம் பிரச்சார நெடியின்றி இயல்பான வாழ்க்கை நிலைப்பாடுகளில் இருந்து பெண்ணின் மன பலத்தைக் காட்டி இருப்பது பாராட்டுக்குரியது. இந்தச் சமூகத்தின் கலைப்படைப்புகளில் பெண்களுக் கான இடத்தை முதல் முறையாக அழுத்தமாகச் சொல்லியிருப்பதை நம்பிக்கையோடுதான் நாம் பார்க்க வேண்டும்.

(உரையாடுவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in