Published : 28 Jan 2018 11:48 AM
Last Updated : 28 Jan 2018 11:48 AM

எசப்பாட்டு 20: பெண்கள் - பேசப்படாத காமம்

இந்தியக் குடும்ப வாழ்க்கையில் முதல் இரவு என்றொரு சடங்கை வைத்திருக்கிறோம். அநேகமாக அது கல்யாணமான அன்றைய இரவாக அமையும். சில உயர்சாதிகளில் சாந்தி முகூர்த்தம் என அதை அன்றைக்கே வைக்காமல் நாள், கோள், நட்சத்திரம் எல்லாம் பார்த்துப் பிறிதொரு நாளில் வைக்கிறவர்களும் உண்டு. எல்லா முதலிரவுகளிலும் பெண்ணுக்கு மறக்காமல் சொல்லி அனுப்பும் வசனம்: “அவர் மனம் கோணாம நடந்துக்கடி”.

கட்டிலில் அவர் மனம் கோணாமல் நடப்பது பெண்ணின் முதல் கடமையாகச் சொல்லி அனுப்பப்படுகிறது. அவர் எடுப்பவராகவும் இவள் கொடுப்பவளாகவும், அவர் வானமாகவும் இவள் பூமியாகவும், இவள் பூவாகவும் அவர் வண்டாகவும், இவள் புத்தகமாகவும் அவர் புரட்டிப் பார்க்கும் புலவராகவும், இவள் வீணையாகவும் அவர் மீட்டும் விரலாகவும் என ஏகப்பட்ட உவமைகள் கட்டமைக்கப்படுகின்றன. எல்லாவற்றிலும் ஆணின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் கடமை உள்ளவளாகத்தான் பெண்ணைச் சித்தரிக்கிறோம். அவளுடைய விருப்பம் ஒருபோதும் கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. பெரும்பாலான வீடுகளில் தாம்பத்திய உறவில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இல்லறத்தில் சமத்துவம்

முன்னே பின்னே பேசிப் பழகியிராத ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்த அன்றே முதலிரவு என்ற சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியாயமா? என்னவோ அதற்காகவே இரண்டு பேரும் இத்தனை ஆண்டுகளும் வளர்க்கப்பட்ட மாடுகளைப் போல நடத்தப்படலாமா? குடும்பமாக இணைகிற ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பல்வேறு உளவியல் பரிமாற்றங்கள் இருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக, இணைப்பாக, உடல் பரிமாற்றம் பின்தொடர்வதே ஆரோக்கியமானதாக இருக்க முடியும்.

“புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம்போலத்தான் அவள்…” என்று அமரர் கு.ப.ராஜகோபாலனின் ‘சிறிது வெளிச்சம்’ கதையில் வரும் பெண் கூறுவாள். மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று இதைப் பழமொழியாகவும் ஆக்கி வைத்திருக்கிறோம். பெண்ணை ஒரு பண்டமாகக் கருதும் நம் பண்பாட்டில் சமத்துவத்துக்கு இடம் எங்கே இருக்கும்?

என் மருத்துவ நண்பரிடம் வந்த ஒரு பெண்ணின் பிரச்சினை நினைவுக்கு வருகிறது. திருமணமாகிச் சில மாதங்களே ஆன நிலையில், “உன் உடம்பை டாக்டரிடம் காட்டிச் சரி பண்ணிக்கிட்டு அப்புறமா வா” என்று கணவன் வீட்டாரால் பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டவள் அவள். இரண்டு, மூணு சுற்றுப் பேச்சுக்குப் பிறகே தாம்பத்திய வாழ்வில் அந்தப் பெண்ணுக்கு ஈடுபாடில்லாமல் இருப்பதை டாக்டர் கண்டுபிடித்தார்.

ஒவ்வாமையின் வெளிப்பாடு

உண்மையில் அவளுக்கு உடல்ரீதியான பிரச்சினை எதுவுமில்லை. புகுந்த வீட்டில் அவளைச் சீக்காளி என்று மீண்டும் மீண்டும் முத்திரை குத்தி அவள் மனநிலையைச் சிதைத்து அனுப்பியிருந்தனர். கணவனுடன் அவளுக்குக் கருத்து மோதலோ சண்டையோ ஏதுமில்லை. தாம்பத்திய உறவில் அவனோடு இசைந்திருக்க முடியாதபடி அவனுடைய உடலோடு ஏதோவோர் ஒவ்வாமை அவளுக்கு இருந்திருக்கிறது. அதன் காரணமாக உறவில் விருப்பமில்லை.

அவனோ நம் சமூகப் பண்பாட்டின்படி பெண்ணின் விருப்பம் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட, ஒவ்வோர் இரவும் அவளுக்கு வலி மிகுந்த இரவுகளாகிவிட்டன. இரண்டு மாதங்களுக்குள் அவன் அருகில் வந்தாலே அஞ்சுபவளாக மாறியிருக்கிறாள் அவள். மன விருப்பமில்லாச் சேர்க்கையின்போது பாலியல் சுரப்பிகள் இயங்காது; அதனால் பெண்ணுக்கு அது வலி மிகுந்த சோதனையாகிவிடும் என்கிறார் மருத்துவர்.

இருவரும் மனம் ஒப்பிய நிலையில் மட்டும்தான் உறவுக்கு உடலும் இணங்கும் என்பது எளிய அறிவியல் என்பதையும் அவர் சொன்னார். எதனால் அவளுக்கு அவன் உடல் மீது ஒவ்வாமை என்பதைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்து அவன் மீது நேசமும் விருப்பமும் உண்டாகும்படி செய்தால் பிரச்சினை தீரும். இது உடல்சார் பிரச்சினை அல்ல, முற்றிலும் மனப் பிரச்சினை என்றார் அவர். அந்தப் பெண்ணின் பிரச்சினை எப்படித் தீர்ந்தது என்பதை அறிய முடியவில்லை.

உதடுகளால் முத்தமிடுகிறோம், உள்ளத்தால் முத்தமிடும் காலம் வருமா என ஏங்குகிற தாம்பத்திய வாழ்க்கை பலருக்கு அமைந்துவிடுகிறது. பெண் மட்டும்தான் இப்படிப் பாதிக்கப்படுகிறாள் என நான் சொல்ல வரவில்லை. பெரும்பாலும் அதுதான் நடக்கிறது என்பதால் அதைப் பற்றி ஆண் கவலைப்பட வேண்டும். இருவருக்கிடையில் ஒத்திசைவு இல்லாததற்கு ஆயிரம் மருத்துவ, உளவியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அது பற்றி இங்கு நாம் பேசவில்லை. நாம் கவலைப்படுவதெல்லாம் தாம்பத்தியத்தில் சமத்துவம் எங்கே என்பது குறித்தே.

வெளிப்படைத் தன்மை வேண்டும்

‘உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு’ என்று சொன்ன நம் சமூகம், ‘காமம் செப்புதல் பெண்டிற்கு அழகல்ல’ என்றும் சொல்லிவைத்துள்ளது. அதனால் காமம் குறித்த பெண் உணர்வின் அசலான வெளிப்பாடுகளை ஆணுலகம் அறிய வாய்ப்பில்லை. ஆணின் உணர்வுகள், ரசனைகள், வேட்கைகள், விழைவுகள், கனவுகள் போன்றவை இலக்கியங்களிலும் பிற வகை எழுத்துக்களிலும் அபரிமிதமாகக் கொட்டிவைக்கப்பட்டுள்ள பின்னணியில், பெண்ணுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்று கண்டறிய தனிப்பேச்சுக்களைத் தவிர வேறெந்தத் தரவுகளும் இல்லை.

இதுவரை பெண்ணுக்குப் பிடிக்கும் என்று வரையப்பட்டுள்ள பெரும்பாலான சித்திரங்கள் ஆணின் கற்பிதங்களே தவிர பெண்ணின் அசலான உணர்வுகள் அல்ல.

ஆனால், உழைப்பாளிப் பெண்களின் மத்தியில் நாட்டுப்புறப் பாடல்களாக அவர்களின் பாலியல் வேட்கைகள் வெளிப்பட்டுள்ளன.

கோவிலுக்குப் போக வேணும்

கொண்டவனும் சாக வேணும்

கொழுந்தனா பையங்கிட்ட குட்டிக்கிளியா

கொம்மாளம் கொட்டலாமே

என்று பாட்டிலும், “அரிக்கிற அரிசியை விட்டுட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம்” என்று சொலவடையிலும் வெளிப்படையாகத் தெறிக்கின்றன. உழைக்கும் மக்களிடம் இருந்த வெளிப்பாட்டுச் சுதந்திரம், பிற மேல் வர்க்கப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை.

வெளிப்பாட்டுக்கே சுதந்திரம் இல்லாத நாட்டில் தாம்பத்தியத்தில் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? அதனால்தான் அது இன்றைக்கும் ஆணின் ஆதிக்க எல்லைக்குள் ஒடுங்கி நிற்கும் ஒன்றாகவே தொடர்கிறது. அதற்கு ஆணின் மனமும் செவியும் திறக்க வேண்டும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x