

ஜெர்மனியில் மோட்டார் தொழிலுக்குப் பெயர்போன டசல்டார்ஃப் நகரில் சுமார் 500 தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களைப் போல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் நூல்கள் கிடைப்பதில்லை. யாராவது கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் இருந்து அதிக செலவு செய்து தபாலில் பெற வேண்டும். வெளிநாடுகளில் தமிழ் நூல்களுக்கு எனத் தனியாகப் புத்தகக் காட்சிகள் நடைபெறுவதில்லை.
இச்சூழலில் சென்னையைச் சேர்ந்த பாரதி யுவராஜ், மதுரையைச் சேர்ந்த பூமாதேவி அய்யப்ப ராஜா ஆகிய இருவரும் ஜெர்மனியில் முதன்முறையாகத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை நடத்தி பலருக்கும் முன்னுதாரணமாகி விட்டனர்.
மிகவும் சிறிய அளவிலான இந்தப் புத்தகக் காட்சி குறித்து இருவரும் உற்சாகமாகப் பேசினர். “ஜெர்மனியில் ஐந்து வருடங்களாக குடும்பத் துடன் வாழ்ந்துவருகிறேன். இங்கே மிகச் சிறிய குழந்தைகளிடம்கூட வாசிப்புப் பழக்கம் உண்டு. படிக்கத் தெரியாவிட்டாலும் படங்களுடனான நூல்கள் அவர்களது வாசிப்பை வளர்க்கின்றன. இதனால், ஜெர்மனியின் புத்தக் கடைகளில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். எனினும், இவற்றில் தமிழ் நூல்கள் கிடைக்காது. இதற்காகத் தமிழகத்திலிருந்து நூல்களை வரவழைத்து ஒரு புத்தகக் காட்சி நடத்த வேண்டும் என்பது எங்கள் நீண்டநாள் கனவு. இதற்காக நானும் பூமாதேவியும் ஆலோசித்தோம். டசல்டாஃர்ப் வாழ் தமிழர்களில் பலரும் எதிர்பாராத அளவில் ஆர்வம் காட்டினர். இப்போது, ஜெர்மனியின் இதர நகரங்களில் வாழும் தமிழர் உள்ளிட்ட வேற்று மொழிக்காரர்களும் எங்களைப் போல் புத்தகக் காட்சி நடத்தத் திட்டமிடுகின்றனர்” என மகிழ்ந்தார் பாரதி.
தமிழரான பாரதி ஐ.டி. துறையில் பணியாற்றியவர். தன் கணவரது ஜெர்மனி வாய்ப்பால் பணியைத் துறந்து ஜெர்மன்வாழ் தமிழராகிவிட்டார் பாரதி. இவரைப் போல், பெங்களூருவின் ஐ.டி. நிறுவனங் களில் பணியாற்றியவர் பூமாதேவி. இவரும் தன் கணவருடன் 8 வருடங்களுக்கு முன் ஜெர்மனிவாசியானவர். தற்போது அருகில் உள்ள நகரத்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பாரதியைப் போல் பூமாதேவிக்கும் இருந்த வாசிப்பு ஆர்வம், இந்தப் புத்தகக் காட்சியை நடத்திச் சாதிக்க வைத்துவிட்டது.
“புத்தகக் காட்சிக்காக நிறைய நூல்களை இங்கே வரவழைப்பது சிரமம். எனவே, யாருக்கு என்ன நூல் தேவை என்கிற பட்டியலைத் தோராயமாகச் சேகரித்தோம். எங்களுக்கு உதவியாக இருந்த கணவன்மார்கள் அளித்த உற்சாகம் எங்களைக் களம் அமைக்கச் செய்தது. புத்தகக் காட்சிக்குத் தேவைப்பட்ட இடத்தை அளிக்க டசல்டாஃர்பின் ஒரு சமூகக் கல்வி சார்ந்த ஜெர்மனிய கிளப் முன்வந்தது. இவர்களது கிளப்பில் இருந்த புல்வெளியில் இடமளித்தனர். புத்தகக் காட்சிக்கு வந்தவர்கள் இந்த கிளப்பிலும் உறுப்பினராகிக் கூடுதல் பலன் கிடைத்தது.
இந்தப் புத்தகக் காட்சியில் மிஞ்சும் நூல்களால் எங்களுக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒரிரு நூல்கள் மட்டுமே மிஞ்சி எங்களுக்கு லாபம், நட்டம் எதுவும் இல்லை என்கிற நிலை ஏற்பட்டது. டசல்டார்ஃபுடன் அருகிலிருந்த கொலோன் வாழ் தமிழர்களும் வந்திருந்தனர். தகவலறிந்த சில இலங்கைத் தமிழர்களும் வந்து ஆர்வத்துடன் நூல்களை வாங்கினர். தாமதமாக வந்த சிலருக்கு நூல்கள் கிடைக்காததால் வருத்தத்தோடு திரும்பினர்” என்றார் பூமாதேவி.
ஜெர்மனியில் எந்த நாட்டினராக இருப்பினும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கிடைக் கிறது. புத்தகக் காட்சி நடைபெற்ற கிளப்பில் வாரம் ஒருமுறை டசல்டோர்ஃப் தமிழர்களுக்காகத் தமிழ் வகுப்பு நடைபெறுவது கூடுதல் சிறப்பு. இதுபோன்ற புத்தகக் காட்சியைத் தமிழக அரசே வெளிநாடுகளில் நடத்தினால் தமிழர்கள் பயன் பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை முயற்சித் தால் அதற்கு உதவ ஐரோப்பிய நாடுகளின் தமிழ்ச் சங்கங்களும் தயாராக உள்ளன.