வாசிப்பை நேசிப்போம்: காதலி மனைவியாகும்போது...

வாசிப்பை நேசிப்போம்: காதலி மனைவியாகும்போது...
Updated on
2 min read

நான் அண்மையில் படித்த புனைகதைகளில் அடர்த்தியும் செறிவும் கொண்டதாக, நிறைய கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்க வைத்த,யோசிக்க வைத்த நாவலாக சாம்ராஜின் ‘கொடை மடம்’ இருக்கிறது. நாவலை இரண்டு பிரிவாகப் பிரித்துக்கொள்ளலாம்.

முதலில் முகுந்தனுக்கும் ஜென்னிக்கும் உள்ள உறவு நாவலின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவது இடதுசாரி பொதுவுடைமை இயக்கங்களின் செயல்பாடுகள். இது நாவலின் ஊடாக உபகதைகளாகச் சொல்லப்படுகிறது.

ஜென்னி ஒரு சராசரிப் பெண்ணாக இல்லாமல் இருப்பதும் கடைசிவரை சுயம் இழக்காமல் இருப்பதும் நாவலின் சிறப்பு. அமைப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டாலும், முற்போக்குச் சிந்தனை கொண்டவனாக முகுந்தன் சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் சொந்த வாழ்க்கை என வரும்போது மிகச் சாதாரண மனநிலையில் முடிவெடுக்கும் நபராக இருக்கிறான். ஜென்னியின் அழகும் அறிவும் அவனுக்குப் பிடித்துப் போகின்றன. வீட்டின் சுத்தமின்மையையும் வளர்ப்புப் பிராணிகளின் தொல்லையையும் சகித்துக்கொள்ள முடிகிறது.

ஜென்னியின் தைரியம், புத்திசாலித்தனம், கொள்கை மீது தீவிரப்பற்று என எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிந்த முகுந்தனால் திருமண வாழ்வு எனும்போது இவையெல்லாம் இரண்டாம்பட்சமாக ஆகி, தினமும் சமைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வது என்கிற புறக் காரணங்களை முன்வைத்து நிராகரிக்க முடிகிறது. காதலி மனைவியாக வரும்போது சராசரி குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும் என விரும்புகிறது ஆணின் மனம்.

ஜெ.ஜெயந்தி
ஜெ.ஜெயந்தி

ஜென்னி எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுபவளாக, தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பவளாக இயக்கத்தின் மீதும் சித்தாந்தத்தின் மீதும் தன் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டவளாக இருக்கிறாள். அமைப்புக் கூட்டங்களில் பங்குகொள்ள, உரையாற்ற நெடும் பயணங்கள் மேற்கொள்கிறாள். விரிவாகத் தன் கருத்தை முன்வைப்பதில் எந்தத் தயக்கமும் அவளுக்கு இல்லை. கோட்பாட்டுக்கு எதிரான எந்தவொரு செயலையும் தயவு தாட்சண்யமின்றிக் கண்டிக்கிறாள். அவ்வாறு செயல் படுபவர்களை நிராகரிக்கிறாள்.

கேரள மாநிலத்தின் பழங்குடி இனப் போராளியான, மனித உரிமைச் செயற்பாட்டாளர் அஜிதாவை நினைவூட்டுகிறார் தோழர் சஜிதா.

உபகதைகளில் ஒன்றான பொன்னம்மாவின் கதை, சமூகக் கட்டுப்பாடு என்கிற பெயரில் நடத்தப்படும் பெண்ணடிமைத்தனத்தை முன்வைக்கிறது. குடிகாரக் கணவனால் வயிற்றில் குத்தப்பட்டு உயிரிழக்கிறார் பொன்னம்மா. அந்தக் கொலை ‘கட்டுப்பாடு’ என்கிற பெயரில் மறைக்கப் பட்டு பொன்னம்மா குலதெய்வமாக்கப் படுகிறார். இப்படித்தான் பெண்களைத் தெய்வமாக்கி, புனிதமாக்கி அடிமைப்படுத்துதல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இது ஓர் உளவியல் உத்தி என்றே சொல்லலாம். உரிமைகளைத் தருவதுபோல் நம்ப வைத்து பெண்ணை அடிமையாக்குவது.

இப்போது இருக்கும் சமூகச் சூழலில் இது போன்ற இயக்கங்களின் மீது விமர்சனங்கள் இருப்பினும் அவற்றின் பங்களிப்பு அவசியம். அவை சுயவிமர்சனத்திற்கு உள்படுத்திக்கொண்டு சீர்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அப்போது தான் உண்மையான, நிலையான சமூக மாற்றத்திற்கு அது உறுதுணையாக இருக்கும். அவ்வகையில் இந்நாவல் ஒரு முக்கியப் பங்களிப்பைத் தந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in