

ஆய கலைகள் 64 என்பார்கள். தாமரைச்செல்விக்கோ உலகத்தில் உள்ள அத்தனை கலைகளையும் கற்றுத்தேர வேண்டும் என்று விருப்பம். சென்னையைச் சேர்ந்த இவர் தற்போது 265 கலைகளைக் கற்றறிந்திருப்பதோடு அவற்றில் பலவற்றைப் பிறருக்குக் கற்றும் தருகிறார்.
சிறு வயது முதலே குறைவில்லா வாழ்க்கையை அனுபவித்த தாமரைச்செல்வியை 16 வயதில் அவருடைய தந்தையின் மரணம் உலுக்கியது. சேலத்தில் வசித்தவர்கள், தந்தையின் மறைவுக்குப் பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்தனர். தாமரைச்செல்விக்குப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்தது. எதையும் செய்யப் பிடிக்காமல் இருந்தவரை அவருடைய அம்மாதான் பள்ளிப் படிப்பு தவிர வேறு ஏதாவது பயிலும்படி சொல்லியிருக்கிறார். அதனால், அழகுக் கலைப் பயிற்சி வகுப்புக்கு தாமரைச்செல்வி சென்றார். காலையில் அங்கே படித்ததை மாலையில் வீட்டுக்கு வந்து பிறருக்குக் கற்றுத்தந்தார். இப்படித் தொடங்கிய பயிற்சி பின்னாளில் தஞ்சாவூர் ஓவியம், எண்ணெய் ஓவியம், கைவினைக் கலை, ஃபேஷன் நகைகள், சமையல் கலை, பூங்கொத்து தயாரித்தல் என அடுத்தடுத்த உயரங்களை நோக்கிச் சென்றது. “இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் புடவை கட்டுதல், புருவ முடி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் கற்றுக்கொண்டேன். கைவினைக்கலைகளைத் தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று பயிற்சி அளித்திருக்கிறேன். ஒரே நாளில் 600 பேருக்குப் பயிற்சி அளித்த நாள்களும் உண்டு” எனப் புன்னகைக்கிறார் தாமரைச்செல்வி.
சாதிக்கத் தூண்டிய வைராக்கியம்
இதுபோன்ற கலைகள் தவிர கராத்தே, ஸ்கூபா டைவிங் போன்றவற்றையும் கற்றுக்கொண்டார். “நான் விவரம் புரியாத வயதில் இருந்தபோது அப்பா இறந்தது என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது. இந்தச் சமூகத்தை எதிர்கொள்வதில் பெரும் மனத்தடை இருந்தது. பெண்ணாக இருப்பதால்தான் நம்மை ஒடுக்குகிறார்களோ என அந்த வயதில் நினைத்திருக்கிறேன் போல. அதனால்தான், ஆண்களுக்கானவை எனச் சொல்லப்படும் பைக், புல்லட் போன்றவற்றை ஓட்டக் கற்றுக்கொண்டேன். நிறைய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தால்தான் 200க்கும் மேற்பட்ட கலைகளைக் கற்றுக்கொண்டேன்” என்று சொல்கிறவரின் முகத்தில் அவ்வளவு பெருமிதம்!
தாமரைச்செல்வி அதுவரை கற்றுவைத்திருந்த கலைகளுக்கு எல்லாம் திருமணத்துக்குப் பிறகு செயல்வடிவம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் தன் கணவர்தான் தனக்கு எல்லாமே என்கிறார் அவர். “அவர் இல்லையென்றால் இந்த வெற்றி சாத்தியம் இல்லை. ஓவியக் கண்காட்சி தொடங்கி ஏராளமான தொழில் பயிற்சிகள், தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை வகுப்புகள், ஆளுமை மேம்பாட்டு வகுப்புகள் எனப் பலவற்றைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறேன். பல தொழில்களையும் தொடங்கி நடத்திவருகிறேன். இதுவரை எவ்வளவு வருமானம், எவ்வளவு நஷ்டம் என என் கணவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்டதில்லை. ஏதாவது புதிதாக ஒரு விஷயம் குறித்துச் சொன்னால், ‘நீ பண்ணு. உன்னால முடியும்’னு உற்சாகப்படுத்துவார். சவால்களைச் சமாளிக்க அந்த ஒரு வார்த்தை போதாதா?” எனக் கேட்கும் தாமரைச்செல்வி அந்தக் கேள்விக்கான பதிலாகத் தன் வெற்றிகளை முன்வைக்கிறார்.
சொந்தக்காலில் நிற்க வேண்டும்
பொழுதுபோக்குவதற்கான கலைகளைக் கற்றுத்தருவதில் தாமரைச்செல்விக்கு உடன்பாடு இல்லை. வருமானம் தருகிறவற்றுக்கே முன்னுரிமை அளிக்கிறார். “பெண்கள் பொழுதைப் போக்கி என்ன பயன்? வருமானம் ஈட்டித் தங்கள் சொந்தக் காலில் நிற்பதுதானே பெருமை? அதனால்தான் பெண்களுக்குத் தொழிற்பயிற்சிகளை அளித்துவருகிறேன். ஐந்து ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாய் வரைக்கும் என்னிடம் தொழில் ஆலோசனை இருக்கிறது. எங்கள் வீட்டில் வேலை செய்த பெண் ரொம்ப கஷ்டமாக இருப்பதாகச் சொன்னார். மாலை நேரத்தில் காய்கறிகளை நறுக்கி பாக்கெட் செய்து அவற்றை ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களிடம் விற்கச் சொன்னேன். அந்தத் தொழிலில் ஈடுபட்ட அவர், கார் வாங்கும் அளவுக்கு முன்னேறினார். மற்றொரு பெண்ணுக்கு ‘மால்ட்’ வகைகள் செய்யும் பயிற்சியை அளித்தோம். அவர் தற்போது சொந்தமாகத் தொழிற்சாலை நடத்திவருகிறார். எங்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் இதுபோல முன்னேறிச் செல்வதைப் பார்ப்பதைவிட வேறென்ன மகிழ்ச்சி இருக்கிறது இந்த வாழ்க்கையில்?” எனப் பொருள் பொதிந்த கேள்வியோடு முடிக்கிறார் தாமரைச்செல்வி.