Published : 24 Aug 2014 11:23 am

Updated : 24 Aug 2014 12:53 pm

 

Published : 24 Aug 2014 11:23 AM
Last Updated : 24 Aug 2014 12:53 PM

முகம் நூறு: தள்ளாத வயதிலும் தளராத யோகா

94 வயது பாட்டியைக் குறித்த நம் பொதுவான சித்திரம் என்ன? உடல் தளர்ந்து, தோல் சுருங்கி, தள்ளாட்டத்துடனோ, கம்பு ஊன்றியோ நடப்பார் என்றுதானே நினைப்போம். ஆனால் கோயம்புத்தூரைச் சேர்ந்த நானம்மாள் பாட்டி தன் உடம்பை நாணில் இருந்து புறப்படுகிற அம்புபோல உறுதியுடன் வைத்திருக்கிறார். கைகள் இரண்டையும் தரையில் ஊன்றியபடி முழங்கால்களை மடித்து அந்தரத்தில் நிற்கிறார். தலையும் முதுகும் தரையில் தாங்க, இடுப்பையும் காலையும் மேலே உயர்த்திப் பல நிமிடங்கள் மூச்சைப் பிடித்து இவர் சர்வாங்காசனம் செய்வதைப் பார்க்கும்போதே மெய் சிலிர்க்கிறது. ஹாலாசனம், சிரசாசனம், பத்மாசனம், பாதஹஸ்தாசனம் என்று 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களை இப்போதும் தொடர்ந்து செய்துவருகிறார்.

யோகா குடும்பம்


கோவை கணபதி பகுதியில் குடியிருக்கும் நானம்மாள் பாட்டியின் சொந்த ஊர் பொள்ளாச்சி காளியாபுரம். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதால் நடைபழகிய வயதில் இருந்தே நானம்மாள் யோகாவையும் பயின்றார். பிறந்த வீட்டில் பயின்ற கலையை, புகுந்த வீட்டுக்குச் சீதனமாக எடுத்துவந்தார். சித்த வைத்தியக் குடும்பத்தைச் சேர்ந்த தன் கணவருக்கும் யோகாவைக் கற்றுத்தர, அவரும் மனைவியுடன் இணைந்து மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்.

நானம்மாள் பாட்டியின் மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் அனைவருமே யோகா ஆசிரியர்கள். அவரவர் வசிக்கும் ஊரில் யோகா பயிற்சி மையங்கள் வைத்து நடத்திவருகிறார்கள். பாட்டியுடன் சேர்ந்து இவர்களும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று யோகாவில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்களும், சாம்பியன்ஷிப் கோப்பைகளும் வாங்கிவந்துள்ளனர். இந்த யோகா பாட்டியிடம் யோகா கற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடுகிறது.

சித்தமும் யோகமும்

இப்போதும் தன் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சியை அளித்துவருகிறார். தள்ளாடும் வயதிலும் இப்படித் தளராமல் இருக்க எப்படி இந்த மூதாட்டியால் முடிகிறது?

‘‘எனக்குப் படிப்பு எதுவும் இல்லீங்க. ஒண்ணாங் கிளாஸ் போனதோட சரி. அதுகூட எனக்கு ஞாபகம் இல்லை. சின்னப்புள்ளையில எங்க தாத்தா, பாட்டி யோகா பண்ணும்போது நானும் பண்ண ஆரம்பிச்சுடுவேன்னு எங்க அப்பா, அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன். யோகா மட்டுமில்லை. கிராமத்து வைத்தியத்துல எங்க குடும்பம்தான் ஊருக்குள்ளே அந்தக் காலத்துல முன்னுக்கு இருந்தது” என்று சொல்லும் நானம்மாள் பாட்டியின் வீட்டில் ஒருவரும் ஊசி, மருந்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டது இல்லையாம். தன் குடும்பத்தில் அனைவருக்கும் சுகப் பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறார் நானம்மாள்.

“என் வீட்டுக்காரர் குடும்பம் சித்த வைத்தியத்துல பிரமாதமா இருந்ததால அவர் ரெண்டும் கலந்து சனங்களுக்கு நல்லது செஞ்சார். சித்தமும் யோகமும் ஒண்ணுதான்னு அந்தக் காலத்துல சொல்லுவாங்க. என் சின்னம்மா 103 வயசு வரைக்கும் இருந்தா. நான் யோகா செஞ்சிட்டிருக்கும்போது குழந்தைகளும் செய்ய ஆரம்பிச்சிரும். அப்படித்தான் இப்ப எங்க குடும்பமே யோகாவிலேயே நெறைஞ்சு நிற்குது!’’ என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்ளும் நானம்மாளுக்கு இன்றுவரை மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவே இல்லை. ஊசியில் நூல் கோத்து, துணி தைக்கிற அளவு பார்வைத் திறன் இருக்கிறது. காது நன்றாகக் கேட்கிறது. சிறு பிள்ளை போல் குடுகுடுவென மாடி ஏறுகிறார். இவரது கை, கால் வீச்சு, மூட்டுக்கள் வளைப்பிற்குச் சிறுமிகளாலேயேகூட ஈடுகொடுக்க முடிவதில்லை.

வீடு முழுக்க பதக்கங்களும், கோப்பைகளுமாக நிறைந்து கிடக்கிறது. ஒவ்வொன்றையும் எங்கே எப்போது வாங்கியது என்பதை நினைவில் நிறுத்திச் சொல்கிறார் நானம்மாள்.

வெளிநாட்டிலும் வெற்றி

திருப்பூரில் இன்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் சார்பாக 2012-ல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார். அதில் வெற்றிபெற்றதன் மூலம் அந்தமான் சென்றிருக்கிறார். பிறகு 2013 பிப்ரவரியில் அந்தமானில் 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

“இந்த வயசுல ஏரோப்ளான் ஏறிப் போக முடியுமான்னு சோதனை போடறதுக்காக வீட்டுக்கே டாக்டருங்க, அதிகாரிங்க எல்லாம் வந்துட்டாங்க. எல்லாம் செக்-அப் பண்ணி பார்த்துட்டு ஏரோப்ளான்லயும் ஏத்தி விட்டுட்டாங்க. ஏரோப்ளான் சொய்ய்...ன்னு பறக்குது. எனக்கு ஒண்ணுமே ஆகலை. எங்கூட வந்த சின்னஞ்சிறுசுக எல்லாம் காதுக்குள்ளே அடைக்குது. காது வலிக்குதுன்னு சொல்லுதுக. சிலது அழுதுடுச்சு. அதுகளை பயப்பட வேண்டாம். அஞ்சு தடவை வாயை நல்லா திறந்து மூச்சுவிட்டு மூடுங்கன்னு சொன்னேன். அதுகளுக்கு வலி போயிடுச்சு!’’ என்று தன் அனுபவத்தைச் சொல்லிச் சிரிக்கிறார் பாட்டி.

மகனின் பெருமிதம்

இவருடன் இணைந்து வீட்டில் யோகா மையத்தை நடத்திவரும் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன், “என் அம்மா 50 முக்கியமான ஆசனங்களை இந்த வயதிலும் செய்கிறார். பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமாகத்தான் இருக்கும். யு-டியூபில் யோகா லேடி என்று குறிப்பிட்டால் முதலில் ஒரு அமெரிக்கப் பெண்மணியின் பெயர் வரும். அடுத்ததாக அம்மாவின் பெயர்தான் வருகிறது. அம்மாவின் யு-டியூப் வீடியோவை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது!’’ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

படங்கள்: ஜெ. மனோகரன்


தள்ளாத வயதுதளராத யோகாநானம்மாள் பாட்டி94 வயது

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x