தலைவாழை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

தலைவாழை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
Updated on
2 min read

அலுப்பூட்டும் வாழ்க்கைக்குச் சுவாரசியம் கூட்டுபவை பண்டிகைகள். பலகாரங்களும் படையலுமாக வீடே அமர்க்களப்படும் நாளுக்காகக் காத்திருக்காதவர்கள் குறைவு. முழுமுதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டையையும் சுண்டலையும் விநாயகர் சதுர்த்தியன்று படையலிடுவது பலரது வழக்கம். காலத்துக்கு ஏற்ப அதில் புதுமைகளைப் புகுத்துவோரும் உண்டு. விநாயகர் சதுர்த்தியன்று செய்யக்கூடிய பலகாரங்களில் சில இவை:

உப்புக் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

உளுந்து - அரை டம்ளர்

துவரம் பருப்பு - கால் டம்ளர்

மிளகாய் வற்றல் - 5

பச்சை மிளகாய் - 2

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

இஞ்சி - சிறு துண்டு

தேங்காய்த் துருவல் - 1 கரண்டி

கடுகு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

உளுந்தையும் துவரம் பருப்பையும் ஊறவையுங்கள். ஊறியதும் அவற்றுடன் பெருங்காயம், உப்பு, இஞ்சி, மிளகாய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதைக் கறிவேப்பிலை சேர்த்து ஆவியில் வேகவையுங்கள். ஆறியதும் உதிர்த்து அதனுடன் தேங்காய்த் துருவல், கடுகு தாளித்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். கொழுக்கட்டைக்குச் செய்வதுபோல் மேல் மாவு தயாரித்து அதில் பருப்புப் பூரணம் வைத்துக் கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் வேகவையுங்கள்.

அப்பம்

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம், உளுந்து - தலா அரை டீஸ்பூன்

ஏலக்காய் - 2

கோதுமை மாவு - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை ஊறவைத்து மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துக் கல், மண் போக வடிகட்டுங்கள். அரிசி மாவுக் கலவை, கோதுமை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை அதில் சேர்த்துக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கரைத்த மாவைக் கரண்டியில் அள்ளி அப்பமாக ஊற்றுங்கள். சிறு தீயாக இருந்தால் அப்பம் கருகாமல் பொன்னிறமாக வரும். விரும்பினால் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மாவில் கலந்து அப்பம் செய்யலாம்.

எள் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

வெல்லம், எள் - தலா 100 கிராம்

ஏலக்காய் - 4

அரிசி மாவு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

எள்ளை ஊறவைத்துத் தேய்த்து, கல், மண் நீக்கி வடிகட்டுங்கள். படபடவென்று வெடிக்கும்வரை வறுத்து, ஏலப் பொடி சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றியெடுங்கள்.

அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, சொப்பு போலச் செய்து அதனுள் எள் பூரணத்தை வைத்து மூடுங்கள். இவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்தால் எளிமையான எள் கொழுக்கட்டை தயார்.

காரச் சுண்டல்

என்னென்ன தேவை?

கொண்டைக்கடலை - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டுக் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, வேகவைத்த கொண்டைக்கடலையை அதில் சேர்த்துக் கிளறுங்கள். தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிச் சேருங்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in