என் பாதையில்: உறவுகளைப் புரிந்துகொள்வோம்

என் பாதையில்: உறவுகளைப் புரிந்துகொள்வோம்
Updated on
2 min read

சில வாரங்களுக்கு முன் கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்தேன். 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார். பகல் நேரப் பயணம் என்பதால், பெரும்பான்மை நேரம் தூங்குவதற்கு வாய்ப்பில்லை. அதனால் நான் புத்தகத்தோடும் அந்த அம்மா போன் பேச்சோடும் பயண நேரத்தைக் கடக்க வேண்டியிருந்தது.

எதிரெதிர் இருக்கை என்பதால் எவ்வளவு மெதுவாகப் பேசினாலும் அவர் பேசியது எனக்குத் தெளிவாகக் கேட்டது. அவருடைய மகளுடன் பேசிக்கொண்டிருந்தார் போல. இவர் தொடர்ந்து ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தார். அவ்வப்போது அறிவுரையும். “கொஞ்சம் பொறுத்துக்கோம்மா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. குழந்தை பிறந்தாச்சு. மத்தவங்க குணத்தை நாம முழுசா மாத்த முடியாது. உன்னால முடிஞ்சத நீ செஞ்சிட்டு உன் வேலைய அமைதியா பாரு. இதையெல்லாம் பெருசா மனசுல எடுத்துக்காதே” என்று தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தார்.

நான் நிமிர்ந்தவுடன் என்னிடம் பேசத் தொடங்கினார். அந்த அம்மாவின் கணவர்மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சென்னையில் சொந்தமாக இரண்டு வீடுகள் இருக்கின்றன. இவரது செலவுகளுக்குக் கணவரின் ஓய்வூதியம் வருகிறது. அதனால் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை எழவில்லை. இரண்டு பெண்பிள்ளைகள். முதல் பெண் சென்னையிலும் இரண்டாவது பெண் கோவையிலும் வசிக்கின்றனர். இரண்டாவது பெண் எம்.பி.ஏ. பட்டதாரி. ஏழு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டார்.

காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டவர். மாமியார், மாமனார், நாத்தனாரோடு கூட்டுக் குடும்பத்தில்தான் வாழ்கிறார். இந்தப் பெண் தன் கையில் இருந்த நகை முதற்கொண்டு வைத்து ஒரு வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டில்தான் அனைவரும் வாழ்கிறார்கள். ஆனாலும், அந்த வீட்டில் இரண்டு சமையல். மாமியாருக்கும் நாத்தனாருக்கும் மருமகள் செய்கிற சமையல் பிடிக்காது. மருமகன் நல்ல குணமாக இருந்தாலும் அவரது அம்மாவை அவரால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை. தன் மகளுக்காகவும் பேரக் குழந்தைக்காகவும் இந்த அம்மா தன் சக்திக்கு மீறி வாங்கிக் கொடுத்தாலும் அவர்கள் அதை அன்போடு ஏற்பதில்லை. ஏதேனும் ஒரு குறையைச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். மகளுக்குப் பதிலாக இந்த அம்மா சமைத்தால் அதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். தனக்காக காபி போடச் சமையலறைக்குச் சென்றால் சம்பந்தி அம்மாள் வந்து வேறு எதையாவது அடுப்பில் வைத்துவிட்டுப் பாலைக் கீழே வைத்துவிட்டுச் செல்வாராம். அவர்கள் வருகிற நேரத்தில் சமையலறைக்குச் செல்ல வேண்டாம் என்று வேறு நேரத்தில் சமைக்கச் சென்றாலும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இந்த அம்மாவுக்கு இடையூறு கொடுத்துக்கொண்டே இருப்பார்களாம். தன் மகளது நிலையும் இதுதான் எனப் புலம்பினார். அதை நினைத்து அழுதுகொண்டே பேசினார். எவ்வளவு படித்திருந்தாலும் வீட்டுக்கு ஏற்றாற்போல் அனுசரித்து நடந்து கொண்டாலும்கூடப் புதிதாக வருகிற பெண்ணை அலட்சியப்படுத்துகிற மனோபாவம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது எனத் தோன்றியது.

அங்கீகாரம் பெண்ணுக்கு மறுக்கப் படுவதோடு மட்டுமல்லாமல், பெண்ணைச் சார்ந்தவர்கள் அனைவருமேஉணர்வு ரீதியாகத் துயரப்படுகிறார்கள். ஏதோ சின்னதிரை சீரியல் பார்ப்பதுபோல இருந்தது. இதில் கணவன் தலையிட்டால் அதுவும் பிரச்சினையாகிவிடுகிறது. அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்கிற அச்சத்தில் பெண்ணைப் பெற்றோரும் பெண்ணுடன் சேர்ந்து போராடுகிறார்கள்.

அலுவலகம் விட்டு வருகிற கணவன்தான் காபி போட்டுத் தர வேண்டும் என்று அடம் பிடிக்கிற பெண்கள், ஹோட்டல்களை நம்பியே வாழ்கிற பெண்கள், தன்னுடைய அம்மாவிடம் அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டு கணவர் வீட்டை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கிற பெண்கள் எனத் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளின் ரியாலிட்டி ஷோக்களில் காட்டப்படுகிற பெண்கள் நிஜ வாழ்க்கையில் இல்லை.

வேலைக்குச் சென்று, வீட்டையும் பார்த்துக்கொண்டு தன்னுடைய வீட்டையும், தன் கணவர் வீட்டையும் கணவன் மீதுகொண்ட காதலுக்காக பேலன்ஸ் செய்து இந்தப் போராட்டங் களை அமைதியாக எதிர்கொள்கிற பெண்கள்தான் இன்றைக்கும் அதிகம்.கடைசியாக, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த அம்மா ஒன்று சொன்னார்: “நாளைக்கு என் வீட்டுக்குப் போன பிறகு முதல்ல நிம்மதியா காபி போட்டுக் குடிப்பேம்மா.” மாமியார் - மருமகள் பிரச்சினையில் இருந்து பெண்களுக்கு விடுதலை எப்போது?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in