

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 வயது மாணவி ஒருவர் போலி என்.சி.சி. பயிற்சியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது, பள்ளிகளில்கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மோசமான நிலையைத்தான் காட்டுகிறது. இந்தச் சம்பவம், குழந்தைகளைப் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பும் பெற்றோர் அனைவரையும் ஒருசேர அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளாக்கியுள்ளது.
மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சிவராமன், போலிப் பயிற்சியாளர் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் சிறிய பள்ளிகளில் முகாம்கள் நடத்தி, அந்த ஒளிப்படங்களை வைத்துப் பெரிய பள்ளிகளில் முகாம்கள் நடத்த அனுமதி பெற்றிருக்கிறார். சிவராமன் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டது. பர்கூரில் வேறொரு பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவியை ஜனவரி முதல் வாரத்தில் இதேபோல் போலி என்.சி.சி. முகாம் நடத்திப் பாலியல் துன்புறுத்தலுக்கு சிவராமன் ஆளாக்கியிருக்கிறார். சிவராமனின் மிரட்டலுக்குப் பயந்து அந்த விஷயத்தை அந்த மாணவி யாரிடமும் சொல்லவில்லை. போக்சோ வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட பிறகே அந்த மாணவி ஓரளவுக்குத் துணிவு பெற்று, காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சிவராமன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் மற்றுமொரு புகார் பதிவுசெய்யப்பட்டது.
அரசியல் அடையாளம்
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமன், தற்கொலை முயற்சி காரணமாக உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. சிவராமனின் மரணத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் குறித்து ஒருபுறம் விவாதம் நடக்க, மறுபுறம் சிவராமனின் அரசியல் பின்னணி குறித்தும் விமர்சிக்கப்பட்டது. சிவராமன், ‘நாம் தமிழர் கட்சி’யின் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்திருக்கிறார். பள்ளிகளில் போலியாக முகாம்கள் நடத்த அவரது இந்த அரசியல் அடையாளம் பயன்பட்டிருக்கிறது. தங்கள் கட்சியில் இருக்கும் அனைவரைப் பற்றியும் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை என்கிறபோதும், ஒரு மாவட்டத்துக்கு நிர்வாகியாக நியமிக்கப்படுகிறவரின் நடத்தை, குற்றப் பின்னணி குறித்து ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுப்பதுதான் கட்சிக்கும் அது முன்வைக்கும் கொள்கைக்கும் அழகு. அதைச் செய்யாமல் தங்கள் கட்சியின் நிர்வாகி போக்சோ வழக்கில் சிக்கிக்கொண்ட பிறகு அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு அவரது நடத்தையை விமர்சிப்பது, தேர்தல்கள்தோறும் பெண்களுக்குச் சம வாய்ப்பு அளித்து அதைப் பெருமையாகப் பறைசாற்றும் கட்சியின் நிலைப்பாட்டையே கேள்விக்குள்ளாக்குகிறது. அவர்களைப் பொறுத்தவரை பெண்ணுரிமை என்பதுபேச்சளவில் மட்டும்தான் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. எல்லாக் கட்சிக்கும் இது பொருந்தும். கட்சிகள் தங்கள் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் தொண்டர்களை வழிநடத்துவதிலும் பொறுப்போடு நடந்துகொள்வது அவசியம்.
பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
பர்கூர் பள்ளியில் மேலும் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பள்ளியில் மாணவிகளை உள்ளடக்கிய முகாம் நடத்தும்போது மாணவியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. நடத்தப்பட்டதே போலி என்.சி.சி. முகாம் என்கிற நிலையில் எதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் சிவராமனைப் பள்ளி வளாகத்துக்குள் அனுமதித்தது என்கிற கேள்வியும் எழுகிறது. தங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பள்ளி பொறுப்பேற்கும் என்கிற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். பர்கூரில் நடைபெற்றிருப்பதைப் போன்ற சம்பவங்கள் பெற்றோரின் நம்பிக்கையைச் சிதைப்பதாக இருக்கின்றன. விளையாட்டு உள்ளிட்ட இதர பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கோ வெளியூரில் நடைபெறும் முகாம்களுக்கோ அனுப்ப பெற்றோர் அச்சப்படும் சூழல் ஆரோக்கியமானதல்ல. இது பெண்களின் பொதுவெளிப் பயன்பாட்டைச் சுருக்கிவிடுவதோடு மாணவியரின் கல்விசாரா பிற திறமைகளையும் முடக்கிவிடும்.
மாணவியரின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் இதுபோன்ற பள்ளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் பதிவுபெற்ற அல்லது உரிய அங்கீகாரம்/அனுமதி பெற்ற பயிற்சியாளர்களை மட்டுமே பயிற்சிக்கு அனுமதிப்பது என்பதில் பள்ளிகள் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.