

ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஆனால், இறுதிப் போட்டியின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப் பட்டார். இதனால் இறுதிப்போட்டியில் அவரால் பங்குபெற முடியவில்லை. இறுதிப் போட்டிக்குத் தேர்வானதால் தனக்கு வெள்ளிப் பதக்கத்தை அளிக்க வேண்டும் என விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் அவர் முறையிட்டார். அவரது கோரிக்கை மனு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுக் கடைசியில் நிராகரிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இறுதிப் போட்டியில் விளையாட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகட் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரது கடைசி நம்பிக்கையான கோரிக்கை மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த படம் அவரது விரக்தி மனநிலையை வெளிப்படுத்தியது.
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் இயல்பு என்கிறபோதும் வினேஷ் போகட்டின் வெற்றி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்பட்டது. காரணம், தேசிய அளவில் பயிற்சிபெற்று வந்த இளம் மல்யுத்த வீராங்கனைகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் சீண்டல் தொடர்பாக இந்திய மல்யுத்தக் கூட்ட மைப்பின் முன்னாள் தலைவரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீதும் மூத்த பயிற்சியாளர்கள் மீதும் வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தனர். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். சக வீராங்கனைகளுக்காக நீதி கேட்டு வினேஷ் போகட் போராடியதால்தான் ஒலிம்பிக் கில் இறுதிச் சுற்றுவரை அவர் முன்னேறியது பேசுபொருளானது. அவரது தகுதியிழப்பு நாடாளுமன்றம் வரைக்கும் விவாதிக்கப்பட்டது.
எடை குறைப்புக்கு வினேஷ் போகட் மட்டுமே காரணம், அதற்கு அவரது பயிற்சியாளாரோ தலைமை மருத்துவ அதிகாரியான தீன்ஷா பர்திவாலாவோ பொறுப்பாக முடியாது என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா தெரிவித்திருந்த கருத்துக்குப் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவ ரான சஞ்சய் சிங், “விளையாட்டுக்குள் அரசியல் நுழைவதுதான் சிக்கலுக்குக் காரணம். மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டங்களால் 16–17 மாதங்களுக்குப் பயிற்சியே நடைபெறவில்லை. இத்தனை மாதங்கள் பயிற்சியில்லையென்றால் ஒலிம்பிக்கில் பதக்கம் எப்படிக் கிடைக்கும்?” எனக் கருத்து தெரிவித்திருந்தது பலரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. வீராங்கனைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலுக்காகப் போராடியதே தோல்விக்குக் காரணம் என்கிற ரீதியில் அமைந்த சஞ்சய் சிங்கின் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்தது. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற மனநிலையோடு இருக்கும் இளம் பெண்களை இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள் சோர்வுறச் செய்யும் என்கிற விமர்சனமும் எழுந்தது.