

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 31 வயது மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9 அன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். பணியின் போது மருத்துவமனைக்குள் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலரான சஞ்சய் ராய் என்பவர் இந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட மருத்துவரின் உடலில் உள்ள காயங்களை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கொலையை ஒருவர் மட்டுமே செய்திருக்க முடியாது எனவும் இந்தக் கொலையில் தீவிர விசாரணை வேண்டும் எனவும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மருத்துவரின் கொடூர மரணத்தையொட்டி நாடு முழுவதும் மருத்துவப் பணியாளார்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவச் சங்கமும் 24 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது. மருத்துவரின் கொலை தொடர்பான விசாரணையில் மாநில அரசின் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே குற்றச் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் வேலையும் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்காமல் குற்றாவாளிகளைக் கண்டறிந்து தண்டனையளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்கத்தா மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் ஆகஸ்ட் 14 அன்று இரவு பணி முடிந்து தன் வாகனத்தை எடுப்பதற்காக வாகனங்கள் நிறுத்துமிடத்துக்குச் சென்றார். அப்போது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மயாங்க் என்பவர் மருத்துவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றார். அந்த நபரைத் தள்ளிவிட்டு அருகில் உள்ள விடுதிக்குத் தப்பியோடிய மருத்துவர், நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார். இந்தத் தகவல் மருத்துவமனை காவலாளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு அந்த நபர் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மருத்துவர்களுக்குப் பணியிடப் பாதுகாப்பு வேண்டும் எனப் பயிற்சி மருத்துவர்களும் முதுகலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து உத்தராகண்டைச் சேர்ந்த செவிலி ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஜூலை 30 அன்று கொலை நிகழ்ந்த நிலையில் ஆகஸ்ட் 8 அன்று அவரது சடலம் உத்தரப் பிரதேசத்தின் கிராமம் ஒன்றின் பொட்டல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மேந்திர குமார் என்பவர் இந்தக் கொலையைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இந்தியச் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு இடையே அடுத்தடுத்து நடைபெற்ற இந்த மூன்று சம்பவங்களும் பெண்களின் பாதுகாப்பைத் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.