

உடல் பருமனால் தொந்தரவுக்கு உள்ளானவர்களால் அதிகம் கேட்கப்பட்ட வாசகம், ‘நீ எந்தக் கடையில அரிசி வாங்குற?’ என்பதாகத்தான் இருக்கும். எடை அதிகமாக இருப்பவர்கள் அதிகம் தின்பார்கள், அதுவும் அரிசி சாப்பிடுவதால்தான் எடை கூடுகிறது என்கிற அரிய தத்துவங்களைக் கண்டறிந்து முனைவர் பட்டம் பெற்றவர்களால் உருவாக்கப்பட்டதே இந்த வசனம்.
வருடக்கணக்கில் எண்ண முடியாத உதடுகளால் இந்த வசனம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் செல்கையில் எதிரில் வந்த ஒருவன், “எந்தக் கடையில அரிசி வாங்குற?” எனச் சொல்லிவிட்டுப் போனபோது உலகமே இடிந்து விழுந்துவிட்டது போலத் துவண்டுபோன நினைவு அப்படியே ஈரம் மாறாமல் இருக்கிறது. யார் யாரையோ சொல்லிக் கேள்விப்பட்டிருந்த நம்மை, இப்படி ஒருவன் சொல்லிவிட்டானே எனத் தாங்க முடியாமல் அன்று முழுவதும் அழுதேன். வாழவே தகுதி இல்லை என்கிற ரீதியில் அந்த எண்ணம் நீண்டுகொண்டே போனது. உடன் பழகியவர்கள் எல்லாம் தோற்றத்தில் ஒல்லியாக இருக்க நான் மட்டுமே ஏன் இப்படி எனக் கோயிலுக்குச் சென்று முறையிட்டுப் பிரார்த்தித்துப் புலம்பினேன்.
தொடரும் கேலி
சராசரியைவிடச் சற்றுக் கூடுதல் பருமன், அவ்வளவே. அதற்கே அப்படி. பத்தாம் வகுப்பிலும் இதே அரிசிக் கடை கேலியைக் கண்ணில் நீர் கரைகட்டக் கடந்திருக்கிறேன். பதினோராம் வகுப்பு படிக்கும்போது தெற்கு வாசல் அருகில் தட்டச்சுத் தேர்வு முடிந்து பேருந்துக்காக நடந்து வந்துகொண்டிருந்தேன். மிதிவண்டியில் வந்த ஒருவன், “எந்தக் கடையில அரிசி வாங்குறே?” எனக் கேட்டான். அவன் திருமுகத்தைச் சில நொடிகள் பார்த்தேன். “முட்டக் கண்ணன் கடையிலதான் வாங்குறேன்” என முதன் முறையாக எதிர்த்துச் சொன்னேன். அடுத்த கணத்தில், “ஏய்” எனச் சத்தமிட்டபடி வண்டியை அழுத்திச் சென்றான். அதன் பின் எத்தனையோ முறை கேலி செய்பவர்களிடம் இதே ரீதியில் பளிச்செனத் தெரியும் ஏதோ ஒன்றைப் பதிலுக்குச் சொல்லாமல் இருந்ததில்லை. அது அன்றைய நாள்களில் பெரும் ஆசுவாசம் தந்தது. கல்லூரி சென்ற பின் பதிலுக்கு அந்த முட்டாள்கள் செய்வதைப் போல ஒன்றையே நாமும் பதிலாகச் சொல்வதாக உறுத்தத் தொடங்கியது.
இதே ரகத்தில் நாற்பது, ஐம்பது சம்பவங்களைக் கடந்திருப்பேன். யாரிடமும் புகார் அளித்ததில்லை. ஆனால், உள்ளுக்குள் மறுகி இருக்கிறேன். கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க வருவதற்கு முன்னான எதிர் சேவையன்று, ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில் பின்புறம் பொருள்காட்சிக்குரிய அம்சங்களோடு களைகட்டி இருக்கும். கூட்டமும் தாறுமாறாக இருக்கும்.
டில்லி அப்பளத்தைத் தின்றுகொண்டிருந்த என்னிடம், “கொஞ்சம் எடையைக் குறைக்கிறது” எனச் சொல்லிய ஒருவனிடம், “இன்னும் கொஞ்சம் வளர்றது” என்றேன். உடனே அவன், “நான் ஒண்ணும் உன்னைக் கல்யாணம் செய்துக்கப் போறதில்ல” என எகிற, “அதேதான் உனக்கும் ” எனப் பேசி மல்லுக்கட்டிய நினைவு இருக்கிறது.
குற்றவுணர்வால் குறைந்த எடை
எதிர்த்துப் பேசினாலும் அந்தக் காலக்கட்டத்தில் சுத்தமாக அரிசி உணவை எடுத்துக்கொள்ளாமல், ஒரு நாளில் ஒரே ஒரு முறை மட்டும் சப்பாத்தி சாப்பிடுவது, உப்பு, சர்க்கரையைத் துறப்பது எனச் சுயமாகத் தயாரித்த உணவு அட்டவணைத் திட்டத்தைப் பின்பற்றி மூன்று மாதங்களில் பத்து கிலோ வரை எடை குறைந்தேன் (அதனால் உண்டான பக்க விளைவுகளைத் தனிப் பட்டியல் இட வேண்டும்). வீட்டில் என்ன சொன்னாலும் எதிர் கேள்வியின்றி நான் போடுகிற கத்தலுக்குப் பயந்து எப்படிக் கேட்கிறேனோ அதை மட்டுமே சமைத்துத் தருவார்கள். கல்லூரி முடித்த வருடத்தில் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் கன்னம் எல்லாம் ஒட்டி வேறு யாரோ போல இருந்தது. எடையைக் குறைத்தது சுத்தமாக எனக்குப் பொருந்தவில்லை.
பொதுவாகக் கேலி செய்வதன் மூலம் தங்களை ‘எல்லாம் அறிந்தவர்களாக’ சிலர் நினைத்துக்கொள்கின்றனர். அதிலும் தனி ஆளாக இருக்கும் போது கேலி செய்வது, வம்பு இழுப்பது அரிது. அருகில் ஒருவர் அல்லது ஒரு பட்டாளம் இருந்தால் உடனடியாகக் கவனத்தை ஈர்க்க வேண்டும். நல்ல செயல் செய்து ஈர்க்க நாள் ஆகும். தடாலடியாக முத்துகளை உதிர்த்தால் யார் இது எனத் திரும்பிப் பார்ப்பர்.
எது நகைச்சுவை?
தனித்திறமை இருந்தால் கவர்வதற்காக அதைப் பிரயோகிக்கலாம். வெறும் வாயை வைத்து மட்டுமே முழம்போட முடிபவர்களுக்கு, உருவக் கேலி என்பது வெகு சுளுவான ஒன்றாகிறது. அதைக் கேட்டு கைதட்டிச் சிரித்து ஆரவாரமிட்டு மகிழும் நண்பர் கூட்டம் எவ்வளவு சீழ்பிடித்துள்ளது என்பது பாவம் அவர்களுக்கே புரிவதில்லை. விடலைப் பருவத்தில் இதை எல்லாம் கடந்துதான் வர முடியும், சரி தொலைகிறது என விடலாம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக்கொள்ளும்போது, அந்தப் பால்ய புத்தி வெளிப்பட்டு அவர்களைக் காட்டிக்கொடுத்து விடுகிறது. கேட்டால் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக எனச் சொல்லக்கூடும். யார் ரிலாக்ஸ் செய்ய யார் காது மீது அமிலத்தை வீசுகிறார்கள்?
கேலி செய்தல் என்பது தவறு எனச் சொல்கிறவர்கள்கூடத் திரையில் ஹீரோ, காமெடியனை மகா மட்டமாகத் திட்டுவதை ‘நகைச்சுவை’ என்கிற பெயரில் ரசிக்கும் கொடுமையையும் மறுப்பதற்கில்லை. இதைப் பார்த்து வளரும் பிள்ளைகள் அப்படியான சொற்களைத் தங்கள் வட்டத்தில் பயன்படுத்தி சிரிக்கவைக்க முயல்கின்றனர். நகைச்சுவை என்றால் உருவக் கேலி அல்ல என்பது ஒட்டுமொத்த சமூகத்துக்கு என்றைக்குப் புரியும்? உருவக் கேலி செய்தல் என்பதைத் தவிர்த்த நகைச்சுவையை நாம் ரசிக்கத் தொடங்கும்போது, அடுத்த தலைமுறையும் அதன் வழியொட்டி நடக்க முயலும்.