பார்வை: பெண்களின் நட்பை எது தடுக்கிறது?
இலக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விடை பெறும்போது பத்திரிகை துறை சார்ந்த நண்பர் ஒருவர் பேசினார். “சக இலக்கியவாதி என்கிற முறையில் கேட்கிறேன். நவீனத்தில் தற்போது நீங்கள் தொடர்பில் இருக்கும் பெண் எழுத்தாளர்கள் யார், யார்? உங்கள் படைப்புகள் குறித்து சக படைப்பாளிகள் முன்வைக்கும் கருத்து என்ன? இல்லை நீங்கள் தீவிரமாக வாசித்துப் பாராட்டிய பெண் எழுத்தாளர்கள் யாரோடெல்லாம் நட்பில் இருக்கிறீர்கள்? அப்படியே ஒரு இலக்கிய அரங்கு ஏற்பாடு செய்தால் ஒருவருக்கு இன்னொருவர் உண்மையான மனநிலையில் ஏற்றுக்கொண்டு பாராட்டு தெரிவிப்பீர்களா?” என அடுக்கிக்கொண்டே போனார். அவர் கேட்டபோதுதான் எனக்கும் பல கேள்விகள் முளைத்தன. இப்படி யொரு கேள்வியை ஆண்களிடம் கேட்பாரா எனத் தெரியவில்லை.
கடந்த பத்து வருடங்களாக இலக்கிய உலகில் வலம்வந்து கொண்டிருக்கிறேன். இதுவரைக்கும் யாரோடு என்னை இணைத்துக்கொண்டு வருகிறேன்? அவர் கேட்டதுபோல் எத்தனை பெண் படைப்பாளர்களின் தொடர்பு எண்கள் இருக்கின்றன? இல்லை, என்னை நினைவு வைத்து என்னோடு பேசும் பெண் படைப்பாளர்கள் யார், யார்? அவ்வளவு வெளிச்சமான பதில் இல்லாமல்தான் வந்தேன்.
நட்பு உலகத்தின் விசாலங்கள் அதிகரித்துப்போன காலமிது. பத்து வயதுப் பிள்ளைகளும் நட்பு வட்டாரங்களை அலைபேசி குழுக்களில் வைத்திருக்கிறார்கள். ஆண் - ஆண் நட்பைவிட, பெண் - பெண் நட்பைவிட ஆண் - பெண் நட்புகள் மிக எளிதாகக் கிடைக்கும் காலமும் இது. பத்திரிகை நண்பர் கேட்டதுபோல் இலக்கியப் பார்வையை, சமூகப் பார்வையை ஓர் ஆணிடமிருந்து தேடுவதுபோல் பெண்களிடமிருந்து தேடுகிறோமா, பேசுகிறோமா? ஏன் இந்தச் சிக்கல்? எதிர்பாலினத்தவர் மீதான ஈர்ப்பு ரசனையானதாக இணைத்துப் போடுவது இயல்புதான். ஆனாலும், பெண்கள் பெண்களோடு கொள்ளும் தோழமை என்பது மிகவும் ஆரோக்கியமானதாகவே இருக்கிறது.
துணைநிற்கும் தோழிகள்
கிராமப்புற வாழ்க்கையில் வளர்ந்த என்னைச் சுற்றி பத்திருபது தோழிகள் இருந்தார்கள். நாங்கள் எல்லாரும் சேர்ந்து குளிக்கப் போவது, கிணறுகளில் தண்ணீர் எடுக்கப் போவது, கோயிலுக்குப் போவது, கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது என்று ஒருவருக்கு கொருவரான இதயங்களில் வாழ்ந்த அழகான காலமது. இன்ப, துன்பங்களை ஒளிவின்றிப் பகிர்ந்த தோழிகளால் நிறைந்த ஒரு வாழ்க்கை இருந்தது. பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களை யாரும் தனியாகச் சந்தித்திருக்கவில்லை. ஆறு, குளங்களில் கச்சை கட்டி குளிக்கையில் எங்களைக் கடந்து போகும் ஆண்களின் பார்வையும் விகாரமாகப் படிந்ததில்லை. அப்படியே யாரேனும் எல்லை மீறத் துணிந்தால் கூட்டாகக் கூடி எதிர்த்தார்கள் பெண்கள். ஒருத்திக்கு ஒரு பிரச்சினையென்றால் அது பொதுப் பிரச்சினையாகி ஆளாளுக்குக் களத்தில் இறங்கினார்கள்.
ஏன் இந்த முரண்?
ஆதரவு வேண்டி ஆண் நட்புகளின் இறகுகளில் நுழைவது இருக்கட்டும். சக பெண்களின் தோள்களில் இடம் இருக்கிறதா? நாம் கொடுக்கிறோமா? ஒரு முறை வெளியூர் பயணம் போய் வருகையில் இரவு வேளையில் கட்டணக் கழிப்பறைக்குப் போகும் சூழல் வந்தது. அங்கே காசு வாங்கிப் போடும் இடத்தில் பெண்கள் இருந்தார்கள். துப்பரவுக்கும் பெண்கள் தெரிந்தார்கள். உறக்கமற்ற விழிகளோடு கழிவறையில் உழைக்கும் பெண்களிடம் எங்களோடு பேருந்தில் பயணித்த நாகரிகமான பெண் ஒருவர் அதீத உச்சக் குரலில் கத்தினார். அவரின் கத்தல் அவருக்கு ஒருவேளை நியாயமாக இருக்கலாம். “மேனர்ஸ் வேணாமா?” உள்ளே போகையில் எதிர்ப்பட்ட துப்புரவுத் தொழிலாளியின் உராய்வு அவருக்குப் பிடிக்கவில்லை. தான் கத்துவது அடிமட்ட தொழில் புரிய நிர்பந்திக்கப்பட்ட பெண்ணிடம் என்கிற உணர்வுகெட்டவரை என்னவென்று சொல்ல? ஆண்களிடம் அழுது மாய்ந்து, தன் பலவீனத்தின் இடிபாடுகளைப் பகிரும் அளவுக்குச் சக பெண்களிடம் புன்னகைக்கக்கூடச் சிலரால் முடிவதில்லை.
போலிகளை ஒதுக்குவோம்
கீரை வியாபாரியோடு, சாலையோர காய்கறி வியாபாரியோடு, குப்பை சேகரிப்பவரோடு தன் நியாயத்தை எடுத்து வீசிவிட்டு ஆண் நட்பின் உச்சம் பேசும் பலரைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். ஆண் நட்பு நல்லதுதான், வலிமையானதுதான். ஆனால், சக பெண்ணைத் தனக்கான நிலையில் ஏற்றுக்கொள்ளும் பேறு சிறந்த பேறு. பேருந்துப் பயணங்களில், வங்கிக்குப் போகையில் எல்லாம் அங்கே இருக்கும் எதோவோர் ஆண் வெளிப்படுத்தும் அனுசரணையைப் பெண்கள் பெண்களுக்குக் காட்டுவதில்லை. கர்ப்பிணி பஸ் ஏறும்போது அமர இடம் இல்லையென்றால், ஆண் எழுந்து இடம் கொடுப்பார். படிவம் நிரப்பும் இடங்களில் வங்கியில் இருக்கும் ஓர் ஆண் அதிகாரி காட்டும் இரக்கத்தைச் சக பெண் ஊழியர்கள் பல இடங்களில் செய்வதில்லை. இதைப் பல இடங்களில் நான் அனுபவித்திருக்கிறேன். பெண்ணாக இருப்பதால் இரங்குகிறேன் என்று ஓர் ஆண் சொல்வதற்கு முன்,பெண்கள் பெண்களைத் தூக்கிவிடும் வளர்ச்சி தேவையாக இருக்கிறது. சொந்த வீடுகளில், அலுவலகங்களில், பொதுத் தளங்களில் அழகு, படிப்பு, பணம், நாகரிகம் என்கிற பல நிலைகளில் பெண்கள் பெண்களுக்குள் பிரிந்துபோய் கிடக்கிறார்கள். பெண், பெண்ணை ஏற்றுக்கொள்ளும் ஒரு விடிவு காலம் வரும்போது பெண்களுக்காக இரங்கும் ஆணாதிக்க வலைகள் கிழிந்துபோகும்.
- கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: malarvathi26@gmail.com
