

வறுமையில் உழன்று அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராட வேண்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல மினர்வா மிரபல். அவருக்கும் அவருடைய சகோதரிகளுக்கும் கல்லூரிக் கல்வி எளிதாக வாய்த்தது. கண் நிறைந்த கணவன், குழந்தைகள் என மழையை ரசித்தபடி தேநீர் பருகும் அளவுக்குச் சித்திரம் போன்ற வாழ்க்கை. ஆனால், எது அவர்களைப் போராட்டத்தின் பக்கம் திருப்பியது? அமெரிக்காவுக்கு அருகே உள்ள கரீபியத் தீவு நாடு டொமினிகன். அதன் கொடுங்கோல் அதிபர் ரஃபேல் ட்ருஹியோவின் எதேச்சதிகாரமும் ஒடுக்குமுறையும்தான் அவர்களுக்குள் கனன்று கொண்டிருந்த போராட்டக் கங்குகளைப் பற்றி எரிய வைத்தன.
முதலில் மினர்வா மட்டும்தான் அதிபருக்குஎதிரான போராட்ட அமைப்பில் இணைந்தார். அதற்கும் காரணம் இருக்கிறது. மினர்வா அப்போது சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கிராமத்துப் பெண்களை, குறிப்பாகச் சிறுமிகளைத் தனக்காக அழைத்து வரவும் மறுத்தால் கடத்திக்கொண்டு வரவும் ‘பியூட்டி ஸ்கவுட்ஸ்’ எனப்படும் ஏவல் படையை ட்ருஹியோ வைத்திருந்தார்.
ஆணவத்துக்குக் கிடைத்த அறை
சட்டக் கல்லூரி மாணவியான மினர்வாவின் குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தித் தனி விருந்து ஒன்றுக்கு ட்ருஹியோ அழைத்தார். தன்னைத்தான் அவர் குறிவைத்திருக்கிறார் என்பது மினர்வாவுக்குப் புரிந்துவிட்டது. அதிபரின் வேண்டுகோளை மறுத்தார்.அதிபரோ மினர்வாவைக் கட்டாயப்படுத்தினார். ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்று குவிக்கும் கொடுங்கோல் அதிபரை எதிர்த்து நின்றால் என்னவாகுமோ என மினர்வா மிரளவில்லை. அச்சமும் தயக்கமும் இன்றி அதிபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். சுற்றியிருந்த அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
ஊரையே அடித்து உலையில் போடுகிறவர், சிறு பெண்ணால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறுத்துக்கொள்வாரா? மினர்வாவின் தந்தை கைதுசெய்யப்பட்டார். மிகக் கொடூரமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக விடுவிக்கப்பட்டார். சில நாள்களிலேயே இறந்தும் போனார். ஒரு முறை மினர்வாவும் அவருடைய அம்மாவும் அருகில் இருந்த நகரத்துக்குச் சென்றிருந்தபோது அவர்களை அங்கிருந்த விடுதியில் ட்ருஹியோ சிறைவைத்தார். தனது ஆசைக்கு இணங்கினால் விடுதலை என நிபந்தனையும் விதித்தார். அதை ஏற்க மறுத்த மினர்வா, அங்கிருந்து அம்மாவுடன் தப்பித்து வெளியேறினார்.
மறுக்கப்பட்ட அங்கீகாரம்
அதிபரை நேரடியாக எதிர்த்த மினர்வாவுக்கு எல்லா இடங்களிலும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயில அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. தன்னைக் கன்னத்தில் அறைந்த மினர்வாவைத் தன்னைப் புகழ்ந்து பேசச் சொல்லி நிர்பந்தித்தார். அப்போதுதான் படிப்பைத் தொடர முடியும் என்கிற நிலை. வேறு வழியின்றி மினர்வா அதைச் செய்தார். அந்த நாட்டில் சட்டத் துறையில் பட்டம் பெற்ற முதல் பெண் என்கிற பெருமை கிடைத்தபோதும் அதனால் எந்தப் பயனும் இல்லாமல் போனது. வழக்காடுவதற்கான அரசு அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்பட்டது.
தன்னைச் சுற்றியிருந்தவர்களால் ‘ஆடு’ என்று அழைக்கப்பட்ட ட்ருஹியோவின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஆட்சி அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் தன் நாட்டு மக்களையே வேட்டையாடினார். தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் மினர்வாவைக் கொதித்தெழ வைத்தன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ட்ருஹியோவுக்கு எதிரான கிளர்ச்சி அமைப்பு ஒன்றில் இணைந்தார். மினர்வாவைப் பார்த்து அவருடைய சகோதரிகள் பாட்ரியா, மரிய தெரசா இருவரும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட னர். இவர்கள் மூவரும் ‘மிரபல் சகோதரிகள்’ என அறியப்பட்டனர். இவர்களுடைய கணவர்களும் புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து கொடுங்கோலாட்சிக்கு எதிராகச் செயல்பட்டனர்.
அதிபரின் சதி
ட்ருஹியோவால் நாடுகடத்தப்பட்டவர்களை வைத்து மினர்வா குடும்பத்தினர் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தனர். அது தோல்வியடைந்தது. அப்போது கொடுங் கோலாட்சி அதன் வன்முறையின் உச்சத்தில் இருந்தது. எங்கெல்லாம் பன்மைத் துவம் அழிந்து ஒற்றைக்குரல் மேலோங்குகிறதோ அங்கெல்லாம் நாட்டு மக்கள் ஒடுக்கப்படுவார்கள் என்பதற்கான சாட்சியாக மிரபல் சகோதரிகளின் குடும்பம் சூறையாடப்பட்டது. அதிபரின் உத்தரவின் பேரில் பலர் காரணம் ஏதுமின்றிக் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். அப்படிக் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை அச்சடித்து அதை மக்கள் மத்தியில் இந்தச் சகோதரிகளும் அவர்களது கணவர்களும் விநியோகித்தனர். அது ட்ருஹியோவின் கோபத்தைத் தூண்டியது. மிரபல் சகோதரிகள் மூவருடன் அவர்களது கணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார். ட்ருஹியோவின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் வேறு வழியின்றி பாட்ரியா, மினர்வா, மரிய தெரசா ஆகிய மூவர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.
தனது வீழ்ச்சிக்குத் தான் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளே காரணம் என்பதைக்கூட உணர முடியாத அதிகார மமதையில் ட்ருஹியோ இருந்தார். அவரது கோபம் முழுவதும் மிரபல் சகோதரிகள் மீது திரும்பியது. அவர்களைக் கொல்ல முடிவெடுத்தார். மிரபல் சகோதரிகளின் கணவர்களைத் தொலைதூரச் சிறைக்கு மாற்றினார். கடினமான மலைப்பகுதி யைக் கடந்துதான் அங்கே செல்ல வேண்டும். அதிபரின் திட்டத்தைப் புரிந்துகொண்டதால் தங்கள் கணவரைப் பார்க்கச் சிறைக்குப் புறப்பட்ட மிரபல் சகோதரிகளை அவர்களது நண்பர்களும் உறவினர்களும் தடுத்தனர். அஞ்சிக்கொண்டே இருந்தால் அந்த வாழ்க்கைக்குப் பொருளேது என நினைத்த சகோதரிகள் துணிவோடு புறப்பட்டனர். சிறையில் இருந்து திரும்பும் வழியில் 1960 நவம்பர் 25 அன்று ட்ருஹியோவின் காவல் படையினர் மிரபல் சகோதரிகளை அடித்துக் கொன்றனர்.
வன்முறைக்கு எதிரான குரல்
மூவரது சடலங்களும் அவர்களுக்குச் சொந்தமான வாகனத்தில் திணிக்கப்பட்டு அது விபத்து போலச் சித்தரிக்கப் பட்டது. இந்த மூன்று சகோதரிகளின் மரணம் நாட்டையே உலுக்கியது. ட்ருஹியோவின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் வலுத்தன. அடுத்த ஆறு மாதங்களில் தனது முன்னாள் ராணுவ நண்பர்களால் அவர் கொல்லப்பட்டார்.
அரச அதிகாரத்தால் கொல்லப்பட்ட மூன்று பெண்களும் ஜனநாயக உரிமையின், பெண்ணுரிமையின் அடையாளமாக மாறினர். இவர்களை மக்கள் ‘வண்ணத்துப்பூச்சிகள்’ என அன்போடு அழைத்தனர். இந்த வண்ணத்துப் பூச்சிகளின் மற்றுமொரு சகோதரியான டீடி, தன் சகோதரிகளின் வீரம் விளைந்த வரலாற்றைப் பரப்பியதோடு, அவர்கள் கண்ட கனவை முன்னெடுத்துச் செல்லும் பணியையும் செய்தார்.
போர்க்குணம் மிக்க இந்தச் சகோதரிகளின் கதையை ‘In the time of Butterfiles’ என்கிற தலைப்பில் 1994இல் வரலாற்றுப் புனைவாக எழுதினார் ஆங்கில எழுத்தாளர் ஜுலியா ஆல்வரெஸ். இதே பெயரில் இதைப் படமாக இயக்கினார் ஸ்பானிய இயக்குநர் மரியானோ பராஸோ.
மிரபல் சகோதரிகள் கொல்லப்பட்ட நாளான நவம்பர் 25ஆம் தேதியைப் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக 1999இல் ஐ.நா. அறிவித்தது. அடக்குமுறைகளைச் சகித்துக்கொண்டு வாழக் கூடாது; அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்கிற செய்தியை இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு இவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள். குடும்பங்களிலும் பொதுவெளியிலும் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகளுக்கு எதிராக நாம் குரல்கொடுக்க வேண்டும் என்பதால்தான் அவர்கள் கொல்லப்பட்ட நாள் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
தான் கொல்லப்படுவோம் என்பதை அறிந்த மினர்வா மிரபல் சொன்ன வார்த்தைகள் இவை: “என்னைக் கொன்று புதைத்தாலும் அந்தக் கல்லறையில் இருந்தும் என் கரங்கள் உயரும். அப்போதும் இதே பலத்துடன் நான் இருப்பேன்.”
(தொடரும்)