

நான் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். எங்கள் அலுவலகத்தில் நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் இருக்கிறோம். என்னதான் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்று சொன்னாலும் பெண்கள் மீது திணிக்கப்படும் உழைப்புச் சுரண்டல் கொஞ்சம் நஞ்சம் இல்லை. வீட்டின் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு, குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்தை நோக்கி விரைந்து ஓடும் கால்கள்.
அலுவலகத்தில் நுழைந்ததுமே அன்றைய நாளுக்கான வேலை ஒதுக்கப்படும். அனைத்து வேலைகளையும் வேகமாக முடித்தால்தான் மாலை வீட்டுக்குச் சென்று இரவு உணவு தயார் செய்ய முடியும், குழந்தைகளைக் கவனிக்க முடியும். இதை மனதில் வைத்தே நாள் முழுவதும் வேலை பார்ப்பேன். வேகமாக வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுப் புறப்படலாம் என நினைக்கும்போது அடுத்த வேலை தரப்படும். அதையும் வேகமாக முடித்துவிட்டுப் புறப்பட வேண்டும். ஆனால், பதவி உயர்விலும் ஊதிய உயர்விலும் ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது.
வேலை ஒருபுறம் இருக்க, விடுப்பு கேட்டாலே பெண்களிடம் மட்டும் முகச்சுளிப்பு. அந்த விடுப்புகூட நம் தனிப்பட்ட தேவைக்காக இருக்காது. கணவருக்காக, குழந்தைக்காக, வீட்டுத் தேவைக்காக எனக் காரணங்கள் நீளும். அலுவலகம், வீடு என இரண்டு இடங்களிலும் பெண்ணுக்கே நெருக்கடி. வேலை முடிந்து வீட்டுக்குப் போய் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும், சமைக்க வேண்டும் என்கிற மன நெருக்கடி ஆணுக்கு இல்லை. பொறுமையாகப் புறப்பட்டுச் செல்லலாம். ஆனால், பெண்ணுக்கு அப்படியல்ல. மாலை ஐந்து மணி ஆனதுமே குடும்பப் பொறுப்புகளும் காத்திருக்கும் வேலைகளும் மூளையை ஆக்கிரமித்துவிடும். இதையெல்லாம் பலரும் கருத்தில்கொள்வதே இல்லை. வீட்டு பெண்களின் உழைப்பை ஆண்கள் புறக்கணிப்பதைப் போலவே பெரும்பாலான அலுவலகங்களும் பெண்களின் உழைப்பை இரண்டம்பட்சமாகத்தான் கருதுகின்றன. இந்தச் சூழ்நிலை மாற வேண்டுமென்றால் நம் வீட்டில் உள்ள ஆண்களிடமும் அலுவலகத்தில் உயர் பதவியில் உள்ள ஆண்களிடமும் புரிதல் ஏற்பட வேண்டும்.
- கலா மோகன், திண்டுக்கல்.