அனார்
அனார்

பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 10: கவிதையின் சமூக மனம்

Published on

இலங்கைத் தமிழ்க் கவிதைகளின் பெரும்போக்கிலிருந்து குறிப்பிடத்தக்க சில கவிஞர்கள் விலகித் தனித்தன்மையுடன் கவிதைகள் படைக்கத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் கவிஞர் அனார். 90களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவரை அந்தக் காலக்கட்டத்தில் தமிழில் எழுந்த கவிதை மறுமலர்ச்சிக் காலத்தின் தொடர்ச்சி எனலாம்.

சமூகநிலையின் பிரதிபலிப்பு

இந்தியத் தமிழ் தீவிரக் கவிதை என்று அழைக்கப்படும் ஒரு கவிதை மரபு, இருண்மையை ஓர் அம்சமாகச் சுவீகரித்துக்கொண்டது. இந்தத் தன்மையைப் பின்பற்றிக் கவிதைகள் எழுதிவருபவர் என அனாரை மதிப்பிடலாம். அனாரின் கவிதைகள் தன்னிலையை முன்னிறுத்தி எழுதப்பட்டவை. இதில் பெண் என்கிற அடையாளத்தில் இருந்து எழுதும்போது அந்தக் கவிதையை ஒரு சமூகநிலையின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் கருதலாம்.

அனாரின் கவிதைகள் வீட்டு வாசலுக்குள் ஒடுங்கிவிடுபவை அல்ல. பொது விஷயங்களுக்காக அவர் தன் கவிதைகளைத் தெருவில் இறக்கியும் விடுகிறார். அவை காற்றைப் போல் சுதந்திரத்துடன் முன்னேறிச் செல்கின்றன. பத்திரிகையாளரும் கவிஞருமான சந்திரபோஸ் சுதாகர் சுட்டுக்கொல்லப்பட்டது அனாரைப் பாதித்துள்ளது. அதைப் பற்றி அவர் தன் கவிதையில் பதிவுசெய்துள்ளார். நீதி மறுக்கப்படுவதை, நீதி என்றால் என்ன என நீதியைப் பல வகைகளில் அனார் தன் கவிதைகள்வழி கேள்விக்கு உள்படுத்துகிறார். ‘தீர்ப்பெழுதுகின்றவர்களின் மொழி/ஓநாயின் கண்களைப்போல் திகிலூட்டுகின்றன’ என்கிற அவரது ஒரு வரியில் அதை உணரலாம்.

கவிஞர் அனார்
கவிஞர் அனார்

உயிர்விட்ட நீதி

ஒரு கொலையைப் பின்தொடர்ந்து விசாரிக்கும் அவரது ‘நிருபரின் அறிக்கை’ விசேஷமானது. மூங்கில் புதருக்குள் ஒருவன் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறான். கவிதை முதலில் அந்தச் சடலம் கிடக்கும் இடத்தைத் திருத்தமாகச் சித்தரிக்கிறது. கவிதையே அது திட்டமிட்ட கொலைதான் என முடிவெடுக்கிறது. கொலைசெய்தவன் எங்கே இருப்பான் என அவனைப் பின்தொடர்கிறது. சிரமம் எடுத்துச் செய்த கொலையால் அவன் களைத்து பீர் அருந்திக்கொண்டிருக்கலாம் என்கிறது அந்தக் கவிதை. இதில் ‘உயிரோடிக்கின்றது குற்றம்/உயிர்விட்டிருக்கின்றது நீதி’ என்று எழுதுகிறார் அனார்.

நான் - நீ

அனாரின் கவிதைகளில் இயற்கை பலவாறு தொழிற்பட்டுள்ளது. ‘வெளுத்து முளைக்கின்றது/மழை நின்ற பிறகான வானம்’ என்கிற சொற்கள் உணர்த்தும் காட்சி வாசகரின் மனதை லகுவாக்கக்கூடியது. ‘நமக்கிடையே மழைக்காடுகளென/நிசப்தம் வளர்கிறது’ என்கிற உருவகம் வசீகரம் கொள்ளச்செய்கிறது. இதுபோன்று புறக்காட்சிகள், மனநிலையின் வெளிப்பாடாகக் கவிதைக்குள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அனாரின் தொடக்க காலக் கவிதைகளில் பெண் என்கிற நிலையில், அதன் மீதான சமூகக் கட்டுப்பாடுகளைப் பேசின. ‘கண்ணுக்கு மையிடுகிறாயா/சற்றுப் பொறு/அதை நிறுத்து ஏனெனில்/எல்லா நேரங்களிலும் க(பெ)ண்/கண்ணீர்விடவேண்டிய வஸ்து’ என்கிறது அவரது ஒரு கவிதை. பிற்காலக் கவிதைகள் பெண் என்கிற நிலையை, உறவு நிலையை ஆராய்வதாக மாற்றம் பெற்றன. அனாரின் கவிதைக்குள் திடமாக ஒரு ‘நான்’ உண்டு. இந்தத் தன்மையால் அவர் கவிதைகளில் சமூக மனம் இல்லை எனக் கொள்ள முடியாது. என்றாலும் அவை ஒரு ‘நீ’யை நோக்கி எழுதப்பட்டவையாக இருக்கின்றன.

கவிதையின் மர்மம்

அனார் தன் கவிதைக்கான மொழியாகக் கையாண்டுள்ள மொழி, சற்றே இறுக்கமான மொழி. ஆனால், அவர் தாராளமாகப் பயன்படுத்தும் உவமையும் உருவகமும் அந்த இறுக்கத்தைத் தளர்த்துகின்றன. சில கவிதைகளில் இந்தப் பண்புகள் கவிதையை அதன் தளத்துக்குச் சற்றே மேலே பறக்கவைக்கின்றன. இந்த இருண்மை பல கவிதைகளில், நவீன கவிதைக்குத் தேவையான மர்மமாகவும் மறைபொருளாகவும் வெளிப்பட்டுள்ளது. ஆண்-பெண் உறவுநிலைக் கவிதைகளில் ஒன்றான ‘நீலமுத்த’த்தை அனாரின் இந்தத் தன்மைக்கான உதாரணமாகச் சொல்லலாம். முத்தம் ஒரு நீலப்பறவையாக அலைகிறது எனத் தொடங்கும் இந்தக் கவிதையில், ‘எனது முத்தம் சீரான மழையென/பயிற்சிகளைப் பூரணப்படுத்தியிருக்கும்/சிப்பாய்களைப் போல/மிடுக்கும் ஒழுங்குமாக/ஆயத்தங்களுடனிருக்கின்றன’ என்கிறார். முத்தத்தைச் சீராகப் பெய்யும் மழை என்கிறார். அதைச் சொல்லிவிட்டு இன்னும் அதை ஒழுங்குபடுத்திக் காட்ட வேண்டும் என்கிற தவிப்பு கவிதைக்கு இருக்கிறது. அதனால், அதைச் சமீபத்தில் பயிற்சி முடித்த ஒரு சிப்பாயாக உவமைப்படுத்துகிறார். சிப்பாய் வந்தவுடன் அந்த முத்தம், ஒழுங்கு என்பதைத் தாண்டி எந்த நேரமும் தாக்கத் தயாராக இருக்கும் உறுதி வந்துசேர்ந்துவிடுகிறது. ‘கம்பீரமாக/பளபளப்பாக/கூர்மையான வாள்/என் உறையிலிருக்கிறது/அச்சங்கள் எதுவுமற்று’ என முடியும் இடத்தில் கவிதைக்குரிய இருண்மையைச் சொல்லலாம். இதை விநோதம் எனலாம். சதைகளால் பெருகும் விருட்சத்தில் ஒரு கனி பழுத்திருக்கிறது என மூர்க்கத்துடன் முன்னேறும் கவிதை இப்படி முடிகிறது. இதில் கவிதை என்ன சொல்கிறது என்பதுதான் மர்மம். மேலே குறிப்பிட்ட கடைசி வரி அந்த மர்மத்தை விளக்கக்கூடியது. ஆனால், அது பொதுப் பண்பு அல்ல. பன்முகம் கொண்டது. இந்த மர்மத்தின், விநோதத்தின், இருண்மையின் இன்னொரு விசேஷம் இதுதான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in