

“என் தனிப்பட்ட வளர்ச்சி யிலும் ஆன்மிகப் பயணத்திலும் என் மனைவியின் பங்கு முக்கியமானது. நான் கைவிட்டிருந்த இறை நம்பிக்கையை மீண்டும் தொடர அவர் உதவினார்.” - அமெரிக்கத் துணை அதிபர் பதவிக்குக் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் என்கிற ஜே.டி. வான்ஸ், தன் மனைவி உஷா சிலுகுரி குறித்துக் கூறிய வரிகள் இவை.
நேர்காணலில் தன் கணவர் தன்னைப் பற்றிப் பேசுவதைச் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த உஷா, “ஆன்மிகச் சிந்தனைகள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தவள் நான். என் பெற்றோர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நல்ல பெற்றோராகவும் நல்ல மனிதர்களாகவும் இருக்க அதுவும் ஒரு காரணம். அதை நான் உணர்ந்திருக்கிறேன்” எனத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடுபிடித்திருக்கும் நிலையில் ஜே.டி.வான்ஸ், உஷா சிலுகுரி இருவரும் தேர்தல் களத்தில் முக்கியப் பேசுபொருளாகியிருக்கின்றனர். காரணம், உஷாவின் குடும்ப, கலாச் சாரப் பின்னணி. உஷாவின் பெற்றோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அறிவியல் குடும்பம்
இவரது குடும்பத்தில் கிட்டத்தட்ட அனைவருமே தேர்ந்த கல்வியாளர்கள். 1959ஆம் ஆண்டு சென்னையில் ஐ.ஐ.டி. நிறுவப்பட்டபோது உஷாவின் தந்தைவழித் தாத்தா ராமசாஸ்திரி சிலுகுரி அதில் இயற்பியல் பேராசிரி யராகப் பணியாற்ற சென்னையில் குடியேறினார். அவரது கல்வித் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இயற்பியலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவரது பெயரால் ‘சிலுகுரி ராமசாஸ்திரி நினைவு விருது’ ஐ.ஐ.டி.யில் வழங்கப்பட்டுவருகிறது. உஷாவின் ஒன்றுவிட்ட பாட்டியான சாந்தம்மா சிலுகுரிக்கு 96 வயது. விசாகப்பட்டினத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியரான இவர், தங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.
உஷாவின் தந்தை ராதா கிருஷ்ணா, தாய் லக்ஷ்மி இருவருமே கல்வியில் சிறந்தவர்கள். 1970களின் இறுதியில் அமெரிக்காவில் குடியேறினர். லக்ஷ்மி, மூலக்கூறு உயிரியலிலும் உயிர்வேதியியலிலும் தேர்ந்தவர். சாண்டியாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கடல் மூலக்கூறு வேதியியலாளராகவும் உயிர் வேதியியலாளராகவும் சிறந்து விளங்கிய இவர், கடல் உயிரியலையும் கற்றுத் தேர்ந்தார். உஷாவின் தந்தை ராதாகிருஷ்ணா, விண்வெளிப் பொறியாளர். விண்வெளி நிறுவனம் ஒன்றில் ஏரோடைனமிக்ஸ் நிபுணராகப் பணியில் சேர்ந்தவர், தன் திறமையால் அந்நிறுவனத்தின் மேலாளராக உயர்ந்தார். பிறகு ‘காலின்ஸ் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவி வகித்தார். உஷாவின் அறிவுப் பயணம் சிறக்க அவருடைய பெற்றோரின் இந்த அறிவு வீச்சும் ஒரு காரணம்.
யேல் பல்கலைக்கழகத்தில் படித்தபோது உஷாவும் வான்ஸும் நண்பர்கள் ஆனார்கள். இருவரது குடும்பங்களும் இருவேறு துருவங்கள். அதுவே தனது எதிர்பார்ப்பை அதிகரித்ததாக வான்ஸ் குறிப்பிடுகிறார். ஒருவரை இன்னொருவர் புரிந்துகொண்ட பிறகு 2014இல் மணந்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். வான்ஸ் சிறுவனாக இருந்தபோதே அவருடைய பெற்றோர் பிரிந்துவிட்டனர். அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த வான்ஸுக்கு இளமைப் பருவம் கொடுமையானதாக இருந்தது. வறுமையும் தனிமையும் ஆட்டிப்படைக்க, அம்மாவழிப் பாட்டிதான் வான்ஸை அன்போடு அரவணைத்திருக்கிறார்.
மனைவி சொல்லே மந்திரம்
வான்ஸின் குடும்பச்சூழலை உஷா நன்கு புரிந்துகொண்டு பல்வேறு விஷயங்களில் அவருக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். “வறுமையும் போதைப் பழக்கமும் ஆட்டிப் படைக்க, குடும்பத் தைக் கரைசேர்க்கப் போராடிய ஒற்றைப் பெற்றோரின் மகன் நான். ஆனால், என் அம்மா தன் போராட்டத்தை ஒருபோதும் கைவிடவில்லை” என வான்ஸ் தன் அறிமுக உரையில் கூறினார்.
உஷாவை வான்ஸ் சந்தித்தபோது அவருக்கு 1,20,000 அமெரிக்க டாலர் கடன் இருந்ததாம். அந்த நிலையில் இருந்து இன்று அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளராகத் தான் உயர்ந்ததில் உஷாவின் பங்கு அளவிட முடியாதது என வான்ஸ் குறிப்பிடுகிறார். கல்லூரி முடித்ததும் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நேர்காணலின் போது எப்படிச் சாப்பிடுவது என்பது தொடங்கி, சுயதரிசனத்துக்கான ஆன்மிகப் பயணம் வரை அனைத்திலும் உஷா, தன் கணவர் வான்ஸுக்குத் துணையாக இருந்திருக்கிறார். தன் வாழ்க்கை குறித்து ‘Hillbilly Elegy’ என்கிற தலைப்பில் 2016இல் புத்தகமாக வான்ஸ் வெளியிட்டார். அந்த ஆண்டின் ‘பெஸ்ட் செல்லர்’ என்கிற மதிப்பை அது பெற்றது. அது, 2020இல் படமாக ‘நெட்ஃபிளிக்ஸ்’இல் வெளியானது.
வேட்பாளர் அறிமுகத்தின்போது, “சிறந்த கணவராக, தந்தையாக இருப்பதோடு தான் கனவு கண்ட குடும்பத்தைக் கட்டமைப்பதுதான் வான்ஸின் குறிக்கோளாக இருந்தது. என்னைப் பார்த்து அவரும் சைவ உணவுக்கு மாறினார். சைவ உணவைச் சமைக்க என் அம்மாவிடம் கற்றுக்கொண்டார். அவர் எளிய குடும்பத்தில் சிரமங்களுக்கு நடுவே வளர்ந்தார். வேலைக்குச் சென்றால்தான் வாழ்க்கை என்கிற நிலையில் இருக்கிற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்” என்று தன் கணவர் குறித்துப் பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டார் உஷா சிலுகுரி. அதை வழிமொழிவதுபோல் தன் மனைவியை அணைத்துக்கொண்டார் வான்ஸ். குடும்ப உறவுகள் சிதைந்துபோன சமூகமாக மேற்கத்திய நாடுகள் உள்ள நிலையில், குடும்ப உறவில் மதிப்பும் புரிதலும் இருந்தால் எவ்வளவு உயரத்தையும் அடைய முடியும் என்பதை இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
- க்ருஷ்ணி