Last Updated : 13 May, 2018 11:02 AM

Published : 13 May 2018 11:02 AM
Last Updated : 13 May 2018 11:02 AM

பாலசரஸ்வதி நூற்றாண்டு: அவர் ஓர் அபிநய சரஸ்வதி

பாலசரஸ்வதியின் மாணவிகளுக்குக் கோடை விடுமுறை என்றால் பிடித்தமானது. எல்லாக் குழந்தைகளுக்கும் பிரியமான அத்தையாக பாலசரஸ்வதி மாறிவிடுவார். பூக்கடை பஜாரிலிருந்து கூடை கூடையாக மல்லிகைப் பூக்களை வாங்கிவரச் சொல்வார். காலை வகுப்பு முடிந்தவுடன் சித்ராண்ணம் வழங்கப்படும். பாலாவும் அவருடைய தாயாரும் குழந்தைகளை உட்காரவைத்து சடையில் பூ வைத்துத் தைப்பார்கள். குழந்தைகளுக்கு மதியத் தூக்கம் வரும். சடை நசுங்காமல் தூங்குவதற்கும் அனுமதிப்பார்.

குழந்தைகள் சந்தோஷமாக பாலாவின் வீட்டுக்கூடத்தில் உறங்குவார்கள். மாணவிகள் மட்டுமல்லாமல், வட இந்தியாவில் புகழ்பெற்ற பெரிய இசைக் கலைஞர்களும் அவர் வீட்டுக்கு வந்து ரயிலேறும்வரை தங்கி உணவுண்டு விவாதித்துப் போவது பாட்டி வீணை தனம்மாள் காலத்திலிருந்து வழக்கமாக இருந்தது. பாலசரஸ்வதியின் சமகாலக் கலைஞர்களான சம்பு மகராஜ், பிர்ஜூ மகராஜ், பண்டிட் ரவிஷங்கர் ஆகியோருடன் சிறுவயது முதலே நட்பும் ஆத்மார்த்தமும் கொண்டிருந்தார்.

13CHLRD_BALASARASWATI.1right

பாலாவுக்குப் பிடித்த சேலைக் கடை, சென்னை மவுண்ட் ரோடில் உள்ள ரோஷன்லால். நடன நிகழ்ச்சிக்கு முன்னர் ஐந்து ஜதிகளை மட்டும் விவாதித்துக்கொள்வார். நிகழ்ச்சிக்காக வெளியூர், வெளிநாடு செல்லும்போதெல்லாம் அங்குள்ள பொம்மைகளை வாங்கிச் சேகரித்தார். அவரது வீட்டில் அந்தப் பொம்மைகளுக்கு பெருமைக்குரிய இடமும் இருந்தது.

சிவாஜி ரசித்த பாலா

பாலசரஸ்வதியும் நடிகர் சிவாஜி கணேசனும் பரஸ்பரம் பெரும் மரியாதை வைத்திருந்தனர். சென்னையிலுள்ள மியூசிக் அகாடமியில் அவரது நிகழ்ச்சி இருக்கும்போதெல்லாம், முன்வரிசையில் சிவாஜிக்கும் கமலா அம்மாவுக்கும் ஒரு சோபா போடப்படும். அப்படி ஒரு நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் நேரடியாக கிரீன் ரூமுக்குச் சென்று பாலாவை அணைத்துத் தனது பாராட்டைத் தெரிவித்ததை பாலசரஸ்வதி தனது முக்கியமான பரிசுகளில் ஒன்றாகக் கருதினார். “பாலா, உனக்கும் எனக்கும் சின்னக் கண்கள்.

ஆனால், அவைதான் எத்தனை ‘பாவ’ங்களை வெளிப்படுத்துபவை” என்று பாராட்டினார். பாலசரஸ்வதி தனது வாழ்வின் பின்னாட்களில் பார்த்த திரைப்படங்களில் ஒன்று ‘சலங்கை ஒலி’. கமல்ஹாசனின் நடிப்பும் நடனமும் அவருக்குப் பிடித்திருந்தன. அடுத்த நாள் நடந்த வகுப்பில் தனது மாணவிகளிடம், “நீங்கள் அந்தப் படத்தைக் கட்டாயம் பாருங்கள். அந்தப் பையன் நன்றாகச் செய்திருக்கிறான்” என்றார்.

13CHLRD_VYJAYANTHIMALA_BALI.1

சாதாரண ஆசிர்வாதமா அது? - வைஜயந்தி மாலா பாலி

பாலாவின் பரத நாட்டியம், மரபார்ந்த பயிற்சியின் உயர்ந்த தரமும் அதிகபட்ச சுத்தியும் கொண்டது. சிருங்காரம்தான் அவரது பலம். பக்தி சிருங்கார மரபை நடனத்தில் சித்தரிக்கும் அவரது கலை அசாத்தியமானது. கடவுளோடு இணைய விழையும் ஆன்மாவின் தவிப்பைக் காதல் ரசம் தோய்ந்த பாடல்களின் வழியாக அழகியல், கவுரவ மீறல் இல்லாமல் வெளிப்படுத்தியவர்.

அவரது நடனத்தைப் பார்த்தவர்களிடம் அவரால் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது. தன் பார்வையாளர்களை மகத்துவமான ஒரு அனுபவ உயரத்துக்கு அவரால் அழைத்துச் செல்ல முடியும்.

பாலாம்மா எனது நடனத்தைப் பற்றி ஒருமுறை என்னிடம் பேசியது மறக்க முடியாதது. எனது நடனம் அருமையாக இருக்கிறதென்றும், ஆன்மிக அனுபவத்தைத் தருவதாகவும் கூறினார். அத்துடன் ஒருபோதும் நான் நடனம் ஆடுவதை நிறுத்தவே கூடாது என்றும் சொன்னார். அவர் சொன்னது சரஸ்வதியே நேரில் வந்து சொன்னதுபோல இருந்தது. அது சாதாரண ஆசிர்வாதமா?

 

இப்படித்தான் மேதைகள் இருக்கிறார்கள் - அருணா சாய்ராம்

அது 1969-ம் ஆண்டு. மும்பை பட்கர் ஹால் அரங்கில் பார்வையாளர்களில் ஒருத்தியாக இணையற்ற பாலா அம்மாவின் நிகழ்ச்சியைப் பார்த்ததிலிருந்து எனது முதல் நினைவு தொடங்கியது. பணக்காரப் புரவலர்களான பாபுபாய் ராஜா ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்க, இன்னொரு பக்கத்திலோ அக்காலத்தில் பெரும் புகழ்பெற்றிருந்த இசை, நடன உலகப் பிரபலங்கள் இருந்தனர்.

இந்துஸ்தானி இசை மேதைகள் அமிர் கான், ஹிராபாய் பரோடேகர், முகுந்த் கோஸ்வாமி போன்றோரெல்லாம் அமர்ந்திருந்தனர். ஒன்று, ஒரு லட்சத்துக்கு சமானம் என்று சொல்வார்களே, அதைப் போல, வந்திருந்த அனைவருமே உயர்தரப் பார்வையாளர்கள்.

13CHLRD_ARUNA_SAIRAMright

பாலாம்மாவைக் கவுரவித்து பெரிய பணமுடிப்பைக் கொடுப்பதற்காகவே அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என் பெற்றோர் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பொறுப்புகளில் பங்குபெற்றிருந்தனர்.

மேடையில் திரை உயர்ந்தது. குறைந்தபட்ச நகைகளுடன் சம்பிரதாய சேலையில் அவரைப் பார்த்த காட்சி இன்னமும் நினைவில் உள்ளது. பக்கவாத்தியக் குழுவினருக்குக் கண்களால் ஜாடை காட்டியதுதான் அவர் முதலில் செய்தது. ஜதி தொடங்கும்வரை அத்தனை சாவகாசத்துடன் தெரிந்தார்.

தொடங்கியதுதான் தாமதம், திடீரென்று மாற்றம் ஏற்பட்டு மந்திரத்துக்கு இணையான ஒன்று மேடையில் நிகழத் தொடங்கியது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்த மாயம் நிகழ்வதற்குக் காரணம் அவரது ஈடுபாடு, புரிதல், தனது குழுவினரையும் சேர்த்து அழைத்துச் செல்லும் ஆர்வம் ஆகியவையும் காரணமென்பதை அவரது நடனங்களைத் தொடர்ந்து பார்த்தறிந்த பின்னரே தெரிந்துகொண்டேன்.

அன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பாலாம்மா, பைரவி வர்ணத்தில் அமைந்த பிரபலமான ‘மோகமான’ பாடலுக்கும், ராகமாலிகையில் ஒரு சப்தத்துக்கும், யமுனா கல்யாணி ராகத்தில் அமைந்த ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ’வுக்கும் ஆடினார். அவரது இசையா அவரது அபிநயமா, எது என்னை நெகிழ்த்தியது என்று சொல்லத் தெரியவில்லை. அவர் மீதான வியப்பில் மெய்மறந்து போனது மட்டும் ஞாபகத்தில் உள்ளது.

என் பெற்றோர் இசை, நடனக் கலைகளுக்குப் பெரும் விசிறிகள். சிறு குழந்தையிலிருந்தே அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சிகளுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த நிகழ்ச்சி முடிந்தபோது, என் அம்மா கண்ணில் நீர் வழிய பாலாம்மாவை அணைத்துக்கொண்டார். பாலாம்மா அவரிடம், “ராஜம்மா, எனக்கு ரொம்ப பசிக்கிறது. நீ உன் வீட்டிலே, எனக்குப் பிடிச்ச பொங்கல் - கொத்சு பண்ணிடு. நான் இப்போ வரேன்” என்று சொன்னார். உடனடியாக, அங்கே அருகில் நின்றுகொண்டிருந்த அமிர் கான் சாஹிப்பும், “பாலா, நீ போனால் நானும் வருகிறேன்” என்றார்.

மேதைகளின் சங்கமம்

என் அம்மா சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்தபோது, ஆன்மாவுக்கான விருந்து வரவேற்பறையில் எங்கள் விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டது. பாலா, கிருஷ்ண கானாம்ருதங்களைப் பாடினார். அமிர்கான் பாட, பாலா நடனமாடினார். அந்த இரவில் நான் ராசலீலாவை அனுபவித்தேன். இரண்டு அழகிய கலை வடிவங்களுக்கு இடையிலான நேச சங்கமத்தை அந்த அழகிய இரவில் பார்த்தது, எனக்கு இன்னும் தெளிவான காட்சியாக மனதில் தங்கியுள்ளது.

பாலாம்மாவின் பாட்டி வீணை தனம்மாள், பாலா நடனம் கற்றுக்கொள்வதை ஆரம்பத்தில் விரும்பவில்லை. ஆனால், மயிலாப்பூர் கவுரி அம்மா மூலம் அவர் பயிற்சியைத் தொடங்கினார். அந்தப் பெண்ணின் ஆர்வத்தைப் பார்த்து தனம்மாள் பின்னர் ஒப்புக்கொண்டார். பாலாவின் அம்மா ஜெயம்மாள் அவருக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள், தமிழ், தெலுங்கு இலக்கியங்களை ஆசிரியர்களைக் கொண்டு கற்பித்தார். அதனாலேயே பாலாவால் அத்தனை சுத்தமாக சுப்ரமணிய புஜங்கத்தைப் பாட முடிந்தது.

அப்போது நான் சிறுமியாக இருந்தாலும் பின்னால் என்னால் நினைவுகூர முடிவது இது. பாலாம்மாவால், மதம், பிராந்தியத் தடைகளைக் கடக்க முடிந்தது. அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கலைஞர்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடியவராக இருந்தார். அமெரிக்க நடனக்கலைஞரும் நடன அமைப்பாளருமான மார்த்தா கிரஹாம் சென்னை வரும்போதெல்லாம் பாலசரஸ்வதியின் நடனத்தைப் பார்ப்பதற்கென்று சிறிது நேரம் ஒதுக்குவார். கடைசியில் அது இரண்டு மணி நேரத்துக்கும் மேல் சென்று முடியும். இதுதான் உண்மையான கலை.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x