

தமிழகத்தைச் சேர்ந்த ரோஹிணி, சுகன்யா இருவரும் பழங்குடி மக்களின் கனவுகளுக்கு நம்பிக்கை நாயகிகளாக மாறியிருக்கிறார்கள்.
தமிழக அரசின் உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற இவ்விரு மாணவியரும் பொறியியல் கல்லூரிச் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ) தேர்ச்சி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக் கிறார்கள். 60 ஆண்டுகால வரலாற்றில் திருச்சி என்.ஐ.டி.யில் பொறியியல் பயிலச் செல்லும் முதல் பழங்குடி மாணவர்கள் என்கிற பெருமையும் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
வேலைக்கு இடையே படிப்பு: திருச்சி மாவட்டம் பச்சைமலையை ஒட்டிய சின்ன இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹிணி. விவசாயிகளான ரோஹிணியின் பெற்றோர் கேரளத்தில் கூலி வேலை செய்து வருகிறார்கள். பெற்றோர் வெளிமாநிலத்தில் இருப்பதால் சகோதரரின் அரவணைப்பில்தான் ரோஹிணி வளர்ந்தார்.
பள்ளி முடித்து வீட்டுக்கு வரும் ரோஹிணி வீட்டு வேலைகளை முடித்து விட்டு விவசாயப் பணிக்குத் தயாராகி விடுவார். வேலைக்குப் பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில்தான் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளில் ரோஹிணி ஈடுபட்டார்.
வயலில் வேலை செய்தபடியே ரோஹிணி நம்மிடம் பேசினார்: “மருத்துவத்துக்கும் பொறியிய லுக்கும் நீட், ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகள் இருப்பதே கடந்த ஜனவரி மாதம்தான் எனக்குத் தெரிந்தது. எங்கள் பள்ளி ஆசிரியர்கள்தான் அவை குறித்த முழுமையான விவரங்களை எடுத்துக் கூறி எங்களைத் தேர்வெழுத உற்சாகப்படுத்தினார்கள்.
என்னைப் போன்ற பழங்குடி மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசின் வழிகாட்டுதலில் பள்ளி ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சியை வழங்கினார்கள். இதன் மூலமே ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற முடிந்தது”.
பெரிய கல்லூரியில் படிக்க வேண்டும் என்கிற தனது சிறு வயது கனவு தற்போது நனவாகிவிட்ட மகிழ்ச்சியில் ரோஹிணி இருக்கிறார்.
கல்வியே பாதுகாப்பு: சேலம் மாவட்டம் கல்வராயன் மலையின் வேலம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த சுகன்யா, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் தினக்கூலிகள். நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதே தங்கள் குடும்பத்தின் வறுமைச் சூழலை மாற்றும் என்பதை உணர்ந்தே சுகன்யா படித்திருக்கிறார்.
சுகன்யாவின் வீட்டிலி ருந்து அவரது பள்ளி 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக் கிறது. பள்ளிக்குச் செல்லப் போக்குவரத்து வசதி இல்லாததால் தினமும் நடந்தே பள்ளிக்குச் சென்றி ருக்கிறார்.
காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் போட்டித் தேர்வுக்காக ஆசிரியர்கள் அளித்த பயிற்சி வகுப்புகளில் தவறாமல் பங்கெடுத்த சுகன்யாவுக்கு, தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆசிரியர்கள் வழங்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
“பழங்குடிகளில் பெரும்பாலானவர்கள் படித்திருக்க மாட்டார்கள், கல்வியின் முக்கியத் துவம் அவர்களுக்குப் புரிவதில்லை. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணத்தை நடத்தி விடுவார்கள்” எனும் சுகன்யா தன்னுடைய குடும்பம் இவற்றி லிருந்து விதிவிலக்காக இருக் கிறது எனத் தெரிவித்தார். கல்வி சார்ந்து சுகன்யாவை அவருடைய பெற்றோர் அனைத்துவிதங்களிலும் ஊக்கப்படுத்தினர்.
“பொருளாதார அளவில் பழங்குடி மக்கள் பின்தங்கியே இருக்கிறார்கள். பணத்தை ஈட்டுவதிலே பழங்குடிகளின் நாள் முடிந்துவிடும். இந்த நிலை மாற வேண்டும். கல்வி நமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதைப் பழங்குடிப் பெற்றோர் உணர்ந்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அதேநேரம் பழங்குடி மாணவர்களும் கல்வியின் பயனை உணர்ந்து நன்கு படிக்க வேண்டும். கல்வியே நம்மைப் பாதுகாக்கும் என்பதைப் பழங்குடிகள் நம்ப வேண்டும்” என்கிறார் சுகன்யா.
வேலம்பட்டு கிராமத்தில் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படும் சூழல் நிலவுகிறது. அதனால், போக்குவரத்து வசதியையும் பள்ளி மாணவர்களுக்கான நூலக வசதியையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற கோரிக்கை யையும் சுகன்யா முன் வைத்தார்.
அடிப்படை வசதிகள்கூட இல்லாத படிக்கு வறுமை வாட்டி யெடுத்தபோதும் கல்வி மீது கொண்ட வைராக்கியத்தால் ரோஹிணியும் சுகன்யாவும் சாதித்திருக்கிறார்கள். சாதிக்க எதுவும் தடையில்லை என்பதை இவர்கள் தங்களது இந்த வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.