பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 8: தணிவுடன் பூக்கும் கவிதைகள்

பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 8: தணிவுடன் பூக்கும் கவிதைகள்
Updated on
2 min read

தமிழில் அதிகம் கவனம் பெற்ற உலகக் கவிஞர்களில் ஒருவர் எமிலி டிக்கன்சன். அன்றாடத்துக்குள் பெண் என்கிற நிலையில் அவர் அந்த அன்றாட உலகத்துக்குள் இருந்தபடி எல்லாவற்றையும் பார்த்தார். அதற்குள் நுழையும் அஃறிணைகளையும் உயர்திணைகளையும் கருத்துகளையும் குறுக்கீடு செய்தார். தமிழில் எமிலிக்கு இணையாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியவர் உமா மகேஸ்வரி.

தமிழ்ப் புனைவுலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் இவர். கதைகளும் நாவல்களும் இவரது பங்களிப்புகள். ஆனால், கவிதைகள் வழியே தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்தார். தான் அதுவரை புழங்கிய வீட்டையே கருப்பொருளாகக் கையிலேந்தி கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவை இவரது வீட்டுக்குள் கிடக்கும் ஒரு நாய்க்குட்டியைப் போலவோ வெயில் காணாத மணிப்ளான்ட் போலவோ அல்லாமல் தங்கள் கைகளை வெளியே நீட்டிப் பார்க்கின்றன. அதுவரை தன் அம்மாவும் முன்னோர்களும் கடைப்பிடித்த விழுமியங்கள் சரிதானா எனக் குழந்தைமையுடன் கேள்வி எழுப்பிப் பார்க்கின்றன.

தமிழில் பெண் குரல்களைத் திருத்தமாக அதன் தன்மைகளுடன் வெளிப்படுத்தியவர் அம்பை என முன்னிறுத்தலாம். அவரது ‘காட்டில் ஒரு மான்’ கதை, தங்கம் அத்தை என்கிற பாத்திரத்தை உதாரணப் பெண்ணாகக் கொண்டது. இதில் கதைசொல்லி, குட்டிப் பெண்ணாக வருகிறாள். அத்தை பூக்காத ஒரு பெண். அவளுக்கு மாதச்சுழற்சி வரவே இல்லை. கதைசொல்லியைப் போன்ற குட்டிப் பெண்களுக்கு இது விளங்கவே இல்லை. வயதுக்கு வந்த மூத்த குட்டிப் பெண், வெட்டிக் கீழே விழுந்த பட்டுப்போன மரத்தைக் காட்டி விளக்க முயல்கிறாள். அந்த மரம் உள்ளீடற்று இருக்கிறது. “அதுதான் பொக்கை” என்கிறாள் அவள். ஆனால், அத்தையின் மினுக்கு மேனியை இந்தப் பொக்கை மரத்துடன் அவளால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘எந்த ரகசியத்தை அந்த மேனி ஒளித்திருந்தது, அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது?’ எனக் கேட்கிறாள்.

இதே கதையை நினைவுபடுத்தும் உமாவின் ஒரு கவிதை உண்டு. இந்த இடத்தில் அம்பையின் தொடர்ச்சி என உமாவை முன்னிறுத்தலாம். அந்தக் கவிதையின் தலைப்பு ‘பூத்தல்’. சிறுமியாக இருக்கும்போது மாதச்சுழற்சி இன்னும் வரவில்லையே என வீட்டில் அம்மாவுக்குப் பதற்றம். அம்மாவுக்குத்தான் அதிகமாக இருக்கும். பெரியவளாகி வாழ்க்கைப்பட்ட பின் இன்னும் நிற்கவில்லையே என்கிற பதற்றம். ‘காட்டுத் தீ மரமோ/பருவங்களைக் கவனியாது/பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்’ என்கிற ஒரு வரியை எழுதியிருக்கிறார். இது அவரது தனித்துவமான எள்ளல் பிரயோகம். இம்மாதிரியான எள்ளல் உமாவின் கவிதைகளில் பல இடங்களில் வெளிப்படுகிறது. அது கவிதையைச் சுவாரசியமாக வைத்திருக்கிறது.

இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்காகப் பெண்களை விமர்சிப்பதும் ஒதுக்குவதும் முறையானது அல்ல என்கிற ஒரு தொனியை இந்தக் கவிதை வழியாக அவர் சொல்கிறார். ‘மஞ்சளில் ஆரம்பித்து/ஆரஞ்சில் ஆழ்ந்து/குருதிச் சிவப்பிற்கே திரும்புகிறது/உபயோகித்த சானிடரி நாப்கின்களைக்/கொளுத்திய தீ’ என இந்தக் கவிதையை ஒரு சிறுமியின் விளையாட்டுப் பேச்சாகவே முடிக்கிறார். அம்பையின் ‘வெளிப்பாடு’ கதையில் நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள் சுட்டிருக்கும் ஒரு பெண் கதாபாத்திரம் சித்தரிக்கப் பட்டிருக்கும். அதுபோல் ஒரு தோசைக் கவிதையையும் உமா எழுதியிருக்கிறார்.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

உமாவின் கவிதைகள் ஆண்-பெண் உறவு சார்ந்த பிரச்சினைகளையும் பேசுகின்றன. ஆனால், பெண் என்கிற ஒரு நிலையிலிருந்து ஆணை விமர்சிக்கும் பாங்கு இவரது கவிதைகளில் இல்லை. ஆண்டாளைப் போல் சரணடைதல் தன்மை இவரது கவிதைகளில் வெளிப்படுகிறது. இவரது கவிதை ஒன்று, காதலின் உன்மத்தத்தில் ஓர் ஆணை நெஞ்சோடு அணைத்துக் கண்ணீர் சிந்தத் தவிக்கிறது. குழந்தைகளும் இந்தக் கவிதைகளுக்குள் வருகிறார்கள். அவர்களும் அன்பின் வெளிப்பாடாக வருகிறார்கள். மிகுந்த உணர்ச்சி மிக்க ஒரு மகன் இந்தக் கவிதைக்குள் இருக்கிறான். இதன் வழி உமாவுக்குத் தன் கவிதைகளுடன் நெருக்கம் புலனாகிறது. அந்நியப் பொருள்களைத் தன் கவிதைக்குள் இழுத்து வர முயல்வதே இல்லை. ஒருவகையில் இந்தத் தன்மை அவரது கவிதைகளை உணர்ச்சிமிக்கதாக ஆக்குகிறது.

கற்பிதமான இந்த நூற்றாண்டின் வாழ்க்கையைக் கேள்விக்கு உள்ளாக்கும் அவரது கவிதை அன்றாடத்துக்குள் இருந்து அவர் செய்யும் சமூக விமர்சனம் எனலாம். ‘இன்றிரவும் விடியும்/மறுபடி/சாப்பிட்டுத் தூங்கி/தூங்கிச் சாப்பிடும்/வாழ்க்கைக்கு/லட்சியமோர் கெட்ட வார்த்தை’ என்கிறார். அன்றாடத்துக்குள் நுழையும் காக்கையை ஒரு தொட்டி நீராக மாறி சிநேகிக்கும் அவரது கவிதை அவரது வெள்ளந்தி மனத்தின் வெளிப்பாடு எனலாம். ‘களிப்பும் சிரிப்புமற்று/சும்மா கிடக்கும்/தொட்டி நீர்’ இந்த இடத்தில் கவிஞரின் அன்றாடத்தைப் பொருத்திப் பார்க்கலாம். அந்தத் தொட்டி நீர் சுவர்களில் சாந்து பாசியைப் படரச் செய்கிறது. அந்தத் தனிமையான தொட்டி நீருக்குள் மத்தியான வெய்யில் வந்து கால் பதிக்கிறது. ஒரு காகம் வந்து இறகை நனைக்கிறது. தண்ணீர் குடித்துவிட்டுப் பறந்து சென்றுவிடுகிறது. அந்த அதிர்வில் கிடக்கும் அந்தத் தொட்டி, காகம் திரும்ப வருமா எனக் கிடக்கிறது. பெண் கவிதைகள் உக்கிரமாக வெளிப்பட்ட காலத்தில் உமாவின் இந்தத் தணிவு கவனிக்க வேண்டியது. அது வாசகரைக் கவிதைக்கு நெருக்கத்தில் வைக்கிறது; கவிதை எழுப்பும் உணர்வைப் புரிந்துகொள்ளவும் வைக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in