

என் வாசிப்புப் பயணம் பொறாமையின் விளைவாகத் தொடங்கியது. நான் முதுகலை முதலாம் ஆண்டு படித்துவருகிறேன். இளங்கலையில் முதல் இரண்டு ஆண்டுகள் பாடத்தை மனப்பாடம் செய்து அதை அப்படியே தேர்வுத்தாளில் எழுதுவதுதான் என் கல்விமுறையாக இருந்தது. ஒருநாள் என் வகுப்பில் என்னுடன் பயிலும் சக மாணவி ஒருவர், பாடநூல்களைத் தாண்டிப் படித்த இலக்கியங்களைப் பற்றிப் பேசினார். ஆசிரியர் அவளைப் பாராட்டினார். அந்த மாணவியின் செயல், எனக்குள் பொறாமையையும் புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தையும் ஒருசேர உருவாக்கியது.
படிப்பது என்று முடிவு எடுத்துவிட்டேன்; ஆனால் எதில் ஆரம்பிப்பது, என்ன படிப்பது என்று தெரியவில்லை. நாவல், சிறுகதை, புதுக்கவிதை போன்ற நவீன இலக்கிய வகைமைகளின் பெயர்களை மட்டுமே நான் அறிவேன். அவற்றின் தன்மையோ உருவமோ அவ்வளவாகத் தெரியாது. அப்போதுதான் என் பேராசிரியர் புத்தக அறிமுக வகுப்பில் கவிப்பித்தனின் ‘ஈமம்’ நாவலை அறிமுகப்படுத்தினார். அந்நாவலை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன். தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மட்டுமே கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த என் கண்களில் நீர் வழியக் கண்டேன். இறந்த ஒருவன் மீண்டும் பிழைத்தபோது அவன் இச்சமூகத்தால் எவ்வாறெல்லாம் ஒதுக்கப்படுகிறான் என்பதை இந்நாவல் துல்லியமாக வெளிப்படுத்தியது. உடல் மீதான பற்றை இந்நாவல் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. அறநூல்கள் அளிக்காத உறுதிப்பொருளை இந்நாவல் கொடுத்ததாக உணர்ந்தேன்.
இதைத் தொடர்ந்து மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஆடுஜீவிதம்’ நாவலை வாசித்தேன். வேறொருவன் அனுபவிக்க வேண்டிய துயரத்தைத் தான் ஏற்றுக்கொண்டு அனுபவித்த நஜீபின் பாலைவன வாழ்க்கையை இந்நாவல் பேசியது. உண்மைச் சம்பவத்தை அற்புதமான புனைவாக மாற்றித்தந்த பென்யாமின் எனக்கு நெருக்கமான எழுத்தாளரானார். இந்நாவல், பெருந்துயரத்தையும் கடக்கத் துணியும் தன்னம்பிக்கையை அளித்தது.
முதலில் படிக்கத் தொடங்கியிருக்க வேண்டிய புதுமைப்பித்தன் கதைகளை ‘ஆடுஜீவிதம்’ நாவலுக்குப் பிறகுதான் படிக்கத் தொடங்கினேன். ‘ஒரு நாள் கழிந்தது’, ‘பால்வண்ணம் பிள்ளை’, ‘செல்லம்மாள்’ உள்ளிட்ட அவரது சிறுகதைகள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் மொழியில் விவரிக்க இயலாதவை. தொடர்ந்து ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா. என என் வாசிப்பின் எல்லை விரிவடைந்தது.
இந்த ஆண்டு தமிழக அரசு நடத்திய ‘இளைஞர் இலக்கியத் திருவிழா’ நிகழ்வில், புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதையை மிகச் சிறப்பாக விமர்சனம் செய்ததாக நடுவர் குழு எனக்கு மூவாயிரம் ரூபாய் பரிசு வழங்கிப் பாராட்டியது. நவீன இலக்கிய வாசிப்புதான் இத்தகைய இடத்தை எனக்கு அளித்தது. தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் அளிக்காத மன ஆசுவாசத்தை இலக்கியங்களே எனக்கு அளித்தன. இந்தச் சமூகத்தை இலக்கிய வாசிப்பின் வழியாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன். வாசிப்புதான் இதைச் சாத்தியப்படுத்தும் என்றும் நம்புகிறேன்.