

சுபலட்சுமியின் திருமணத் துக்கு வரன் தேடியபோது இருவீட்டாரும் ஜாதகங்களைப் பரிமாறிக்கொண் டார்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத மகிழ்ச்சியான பெருவாழ்வும் எதிர்காலமும் மணமகளுக்கு அமையும் எனச் சோதிடர் கணித்துச் சொன்னதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்கு மாப்பிள்ளையைப் போலவே ஆயுள் குறைவு என்பது வெகுவிரைவிலேயே அந்தக் குடும்பத்துக்குப் புரிந்தது.
கைம்மை நிலையின் கொடுமை சுபலட்சுமியின் சித்தி அறியாதது அல்ல. மழிக்கப்பட்ட தலையும் வெளிறிய கைத்தறிப் புடவையால் முக்காடிட்ட முகமுமாகச் சமையலறைக்குள்ளேயே முடிந்துபோகிற கொடுவாழ்வு அது என்பதை அனுபவித்துக் கொண்டி ருப்பவர்தானே அவர். நாவின் சுவை அரும்புகள் தங்கள் வேலையை மறந்துவிடுகிற அளவுக்கு உணவுக் கட்டுப்பாடும் உண்டு. ஊறுகாயும் வெற்றிலைப்பாக்கும்கூட அவர்கள் தொட முடியாத உயரத்தில் இருந்தன.
கொடுங்கனவின் முடிவு
காலம் முழுக்கப் பெற்றோர் வீட்டிலும் அவர்களது மறைவுக்குப் பிறகு உடன்பிறந்தவர்கள் வீட்டிலும் ஓயாமல் வேலைசெய்து காலத்தை நெட்டித்தள்ளும் நிலை சுபலட்சுமிக்கு வேண்டாம் எனச் சித்தியும் சுபலட்சுமி யின் பெற்றோரும் முடிவுசெய்தனர். திருமணப் பட்டுப் புடவையைத் தவிர தன் திருமணம் குறித்த வேறெந்த நினைவும் இல்லாத சிறுமி சுபலட்சுமி அந்தப் புடவையை மீண்டும் அணிய விருப்பப்பட, அம்மாவோ எதுவும் சொல்லவில்லை. அந்தப் புடவையைக் கிழித்து இரண்டு பாவாடைகளாகத் தைத்துவிட்டார். சுபலட்சுமியின் வாழ்க்கையில் நிகழ்ந்த கொடுங்கனவின் நினைவாக இருந்த ஒரே அடையாளமான புடவையும் அன்றைக்கு உருமாறிப்போனது!
முடங்கிய கல்வி
அந்த ஆண்டுக் கோடை விடுமுறை யில் சுபலட்சுமிக்கு நல்ல செய்தி காத்திருந்தது. அவருக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தர தந்தை முடிவுசெய்தார். ஆங்கிலத்தோடு சம்ஸ்கிருதம், கணிதம், வரலாறு, புவியியல் என அனைத்தையும் மிகச் சில மாதங்களிலேயே சுபலட்சுமி கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டவருக்கு எழும்பூர் பிரசிடென்சி உயர்நிலை பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைத்தது. அந்நாளில் சைதாப்பேட்டையில் இருந்து மதராஸின் மையப்பகுதியான எழும்பூருக்கு ஒருவர் தினமும் சென்று வருவது சுலபம் அல்ல. அதுவும் கைம்பெண்ணான சிறுகுழந்தை எப்படிச் சென்றுவருவாள் என்று பதறினார் சுபலட்சுமி யின் அம்மாவழிப் பாட்டி. அதனால், சுபலட்சுமிக்கும் அவருடைய தந்தையோடு சைதாப்பேட்டை வேளாண்மைக் கல்லூரியில் பணி புரிந்தவரின் மகள் மேரிக்கும் ஜட்கா வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் பள்ளி முடிந்து இரண்டு சிறுமிகளும் வீடு திரும்பினர். ஜட்கா வண்டியிலிருந்து குதித்து இறங்கிய பேத்தியிடம் இனி பள்ளிக்குச் செல்லக் கூடாது எனப் பாட்டி கட்டளையிட்டார். மாமியாரின் பேச்சை மருமகனால் தட்ட முடியவில்லை. மீண்டும் சுபலட்சுமி வீட்டுக்குள் முடங்கினார்.
பாட்டியின் ஒப்புதல்
மகளின் வாடிய முகம் பார்த்துக் கலங்கிய சுப்பிரமணி அவரை எப்படியாவது பள்ளிக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதற்காகப் பள்ளியின் எதிரிலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பார்த்தார். அதில் சுபலட்சுமியும் அவருடைய சித்தியும் தங்கிக்கொள்ள ஏற்பாடு. பாட்டிக்கு இதுவும் பிடிக்கவில்லை. பருவமடைவதற்கு முன்பே கணவனை இழந்த தன் மகளும் பேத்தியும் தனியாகத் தங்குவதற்கு அவர் சம்மதிக்கவில்லை. சுப்பிரமணிய ஐயர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாமியார் கேட்பதாக இல்லை. அவர்களது குடும்பம் மதிக்கும் கணித வாத்தியார் ஒருவர் மூலமாகப் பாட்டி ஓர் ஏற்பாட்டுக்கு உடன்பட்டார். அதன்படி மொத்தக் குடும்பமும் எழும்பூர் வீட்டுக்குச் சென்று தங்கியது. சுபலட்சுமி பள்ளிக்குப் புறப்பட்டதை சன்னல் பின்னால் அமர்ந்தபடி பாட்டி கண்காணித்தார். பள்ளி முடிந்து மாலை சுபலட்சுமி வீடு திரும்பும்வரை அந்த இடத்தை விட்டுப் பாட்டி அகலவே இல்லை. அவர் பார்த்த வரைக்கும் அந்தப் பள்ளியில் ஆண்கள் யாரும் இல்லை என்பதால் பேத்தி தொடர்ந்து படிக்க பச்சைக்கொடி காட்டினார்.
1900இல் நடத்தப்பட்ட தேர்வில் மதராஸ் மாகாணத்தில் மூன்றாவ தாகத் தேறிய சுபலட்சுமி, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் தேர்வு என்பதால் இதைப் பதற்றத்தோடு எதிர்கொண்டவர், இறுதித் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஹானர்ஸில் தேறினார். இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளியானபோது மாபெரும் மோசடி நடந்துவிட்டதாகப் பலர் பேசினர். சுபலட்சுமியுடன் படித்த 12 மாணவர்களில் 11 பேர் தோல்வியுற, ஒரு பெண் எப்படி வெற்றி பெறலாம் என விவாதித்தனர். விடைத்தாள் திருத்துவோருக்கு சுபலட்சுமியின் தந்தை லஞ்சம் கொடுத்திருக்கலாம் என்கிற வதந்தியைச் சிலர் பரப்பினர். பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டதே என்கிற கவலையில் இருந்த சுபலட்சுமியை இவை எதுவுமே பாதிக்கவில்லை.
படிப்பது பாவமா?
ஆசிரியர் படிப்பு படிக்க வேண்டும் என்பது சுபலட்சுமியின் விருப்பம். ஆனால், மகளை மேற்கொண்டு படிக்க வைக்க விசாலாட்சிக்கு விருப்பம் இல்லை. தவிர, அந்நாளில் பெண் களுக்கென்று தனிக் கல்லூரியும் இல்லை. ‘கறுப்பர் நகரம்’ என அழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுனில் இருந்த பிரசன்டேஷன் கான்வென்ட்டில் படிப்பதாக முடிவானது. அங்கிருந்த கன்னியாஸ்திரிகளுக்கு சுபலட்சுமியின் பெயர் வாயில் நுழையவில்லை. முதல் நாளே அவரது பெயரை ‘சைபில்’ என மாற்றியதில் அவருக்கு வருத்தம். ஆனால், பாடம் கற்பித்த மூன்று கன்னியாஸ்திரிகள் சுபலட்சுமியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்களாகிவிட்டனர். இரண்டு தங்கப் பதக்கங்களோடு படிப்பை முடித்தவர் வேறு வழியே இல்லாமல் ஆண்களும் பயிலும் மாநிலக் கல்லூரியில் சேர வேண்டியதானது. இந்த முறை ஜட்கா வண்டிக்குப் பதில் ரிக்ஷா வண்டி. குடைபிடித்தபடி ரிக்ஷாவில் கல்லூரிக்குச் சென்றவரை அண்டை வீட்டுத் திண்ணைகளில் இருந்த வர்கள் வசைபாட, கல்லூரி வாசலிலோ மாணவர் கூட்டம் கேலிபேசியது. எதற்குமே கலங்காத சுபலட்சுமி மனிதர்களின் அநாகரிகப் பேச்சை நினைத்து அன்றைக்கு முதல் முறையாகக் கலங்கினார். கணவன் இழந்த பெண் ஒருவர் படிப்பதற்காகக் கல்லூரிக்குச் செல்வது அவ்வளவு இழிவானதா? கைம்பெண்களுக்கு பிறரைப் போல் வாழும் உரிமை இல்லையா? இந்தக் கேள்விகள் அவரை வேறொரு முடிவுக்கு அழைத்துச் சென்றன.
(தொடரும்)