வானவில் பெண்கள்: பார்வையை மாற்றிய போர்

வானவில் பெண்கள்: பார்வையை மாற்றிய போர்

Published on

உக்ரைனில் கால்நடை மருத்துவம் படிப்பதற்குச் சென்று, போர்ச்சூழலால் நாடு திரும்பியிருக்கிறார் திருநங்கை கர்த்தா. அதுவரை செய்திகளில் மட்டுமே பார்த்தறிந்த போரை மிக அருகில் இருந்து பார்த்தது வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியதாகச் சொல்கிறார். அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து பத்து வீடுகள் தாண்டி இருந்த குடியிருப்புகள் குண்டுகளால் தரைமட்டமான போது போரின் தீவிரமும் கொடூரமும் கர்த்தாவுக்குப் புரிந்தது.

“போர் என்றால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் மட்டுமே நடக்கும் என்று நினைத்தேன். அதிகம் போனால், ராணுவத் தளவாடங்கள், ராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று நினைத்தேன். ஆனால், குடிமக்களின் வாழ்விடங்களின் மீதும் குடிமக்களின் உயிர் காக்கும் மருத்துவமனைகளின் மீதும் தாக்குவார்கள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உணவு, நீர், மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல் சுரங்கத்தினுள்ளேயே ஸ்லோவாகியா எல்லைவரை சென்று, அங்கிருந்து இந்திய அரசின் உதவியால் இந்தியா திரும்பும்வரை உயிர் என்னிடத்தில் இல்லை” என்று கர்த்தா சொல்கிறபோது அந்நாளின் படபடப்பு அவரது வார்த்தைகளில் தெரிகிறது.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே தன்னைப் பெண்ணாக உணர்ந்தவர் தன்னுடைய பதினைந்தாவது வயதில் தன்னுடைய பெண்ணுடலுக்கான பெயர் ‘கர்த்தா’ என்றுதான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார். ஆண்களுக்கான பள்ளியில் படித்த இவர் சக மாணவர்கள் சிலரிடமிருந்தும் ஆண் ஆசிரியர்கள் சிலரிடமிருந்துமே பாலியல் சீண்டல்களைச் சந்தித்தார்.

“பள்ளி இறுதிவரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக்கொண்டேன். பொறுமையை இழந்திருந்தால் என்னுடைய படிப்பு போயிருக்கும்” என்கிறார் கர்த்தா.

ஐந்து வயதிலிருந்தே கர்த்தாவின் தனிமையைப் போக்குவதற்கு உதவியாகப் புழு, பூச்சிகள், தெருவில் திரியும் மாடுகள், பூனை, நாய் இவைகளே இருந்தன. சிறுவயதில் பூச்சிக்கடியால் தோல் ஒவ்வாமை ஏற்பட்டு எட்டு மாதங்கள் வரை அவதிப்பட்டிருக்கிறார்.

“உடலின் மீது போர்த்திய போர்வையோடு சதை பிய்ந்துவரும் நிலைக்குச் சென்றபோதும் வலி, வேதனையைப் பொறுத்துக்கொண்டு மருத்துவத்தின் துணையோடு இதிலிருந்து மீண்டு வருவேன் என்னும் உறுதி அந்த வயதிலேயே எனக்கு ஏற்பட்டது. இந்த வலி, என்னுடைய பாலினம் சார்ந்த முடிவை எடுப்பதற்கும் உதவியாக இருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததுமே கால்நடை மருத்துவம்தான் படிப்பேன், அதுவும் உக்ரைன் நாட்டில்தான் படிப்பேன் என்று பிடிவாதமாக அங்கே சென்றேன். ரஷ்யா, ஐரோப்பா போன்ற பரபரப்பான நாடுகளுக்கு இடையில் அமைதியான நாடாகத் திகழ்ந்ததுதான் உக்ரைனை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம். அங்கிருக்கும் மக்கள் அடுத்தவரின் வாழ்க்கையில் அநாவசியமாகத் தலையிட மாட்டார்கள். அங்கே ஆறு ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். படித்துக்கொண்டே, கால்சென்டர் பணியில் ஈடுபட்டேன். அங்கேயே பால்மாற்று அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துகொண்டேன். ஆனால், நான் படித்த பல்கலைக்கழக ஆவணங்களில் என்னுடைய பெயரை இன்னும் மாற்றவில்லை. போர்ச்சூழலால் தற்போது நான்காம் ஆண்டு படிப்பை ஐரோப்பிய நாடுகள் ஏதாவது ஒன்றில் தொடர இருக்கிறேன்.

நான் முழுக்க முழுக்க என்னை ஒரு சராசரி பெண்ணாகவே உணர்கிறேன். என்னுடைய பாலினத்தைக் கொண்டு என்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. சமூகத்துக்கு என்னால் முடிந்த நல்ல விஷயங்களைச் செய்வதன் மூலமாகவே நான் அறியப்படவேண்டும். அப்படி நடக்கும் நல்ல விஷயங்களுக்கு காரணகர்த்தாவாக நான் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பெயருக்கான நோக்கம்” என்னும் கர்த்தா, தற்போது தனியார் கால்நடை மருத்துவமனையில் பணிபுரிகிறார். நடனம், நடிப்பு, ஊடகம் சார்ந்த பணிகளிலும் எதிர்காலத்தில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்துவதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in