என் பாதையில்: இந்தப் புன்னகை என்ன விலை?

என் பாதையில்: இந்தப் புன்னகை என்ன விலை?
Updated on
2 min read

அன்றும் வழக்கமான ஒருநாள்தான். அலுவலகத்துக்குப் புறநகர் ரயிலில் சென்றுகொண்டிருந்தேன். பெரும்பாலான நாள்கள் மூவர் இருக்கையில் நான்கு பேர் நெருக்கியடித்து அமர்ந்து செல்லும்படி இருக்கும். அன்றைக்கு அப்போதுதான் ஒரு ரயில் சென்றிருக்கும்போல. இருக்கைகள் காலியாக இருந்தன. பலரும் செல்போனைப் பார்த்தபடியும் போனில் பேசியபடியும் இருந்தனர். கிண்டியில் என் பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்தார். பருமனான உடல்வாகுடன் ஐம்பதை நெருங்கும் தோற்றம். இளம்பெண் ஒருவர் பக்கத்து இருக்கைப் பெண்ணை இடித்தபடி சென்றதோடு இவரை ஏதோ சொல்லித் திட்டினார்.

இந்தப் பெண்மணிக்குக் கோபம் வந்துவிட்டது. “இறங்குறதா இருந்தா சொல்லணும். அதை விட்டுட்டு வழியை மறிச்சிக்கிட்டு போனையே பார்த்துக்கிட்டு இருந்தா இப்படித்தான்” என்றார். அதற்கு அந்தப் பெண்ணும் சண்டை போடும் தொனியில் ஏதோ சொல்ல, இவரும் விடாப்பிடியாக அந்தப் பெண்ணைத் திட்டினார். தவறு இளம்பெண் மீதுதான். ஆனாலும் அந்தப் பெண், “எனக்கு வேலை இருக்கு.. சே” என்று முகம் சுளித்தபடி கடந்து சென்றார். என் பக்கத்து இருக்கைப் பெண்ணின் வயதைக் கருதியாவது அந்த இளம்பெண் கொஞ்சம் மரியாதையாகப் பேசியிருக்கலாம் எனத் தோன்றியது.

சிறிது நேரத்தில் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. “இது எந்த ஸ்டேஷன்?” என என் பக்கத்து இருக்கைப் பெண் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. நான் “கோடம்பாக்கம்” என்றேன். அவர் என்னைப் பார்த்தார். நான் லேசாகப் புன்னகைத்தேன். உடனே அவர், “ரொம்ப தேங்க்ஸ்” என்றார். ஏன் என்கிற தொனியில் அவரைப் பார்த்தேன். “இல்லை, காலையில் வேலைக்குப் போகும் அவசரத்தில் யாரும் யாரையும் பார்த்துச் சிரிப்பதுகூட இல்லை. எதைக் கேட்டாலும் கோபம் வந்துவிடுகிறது. எரிந்துவிழுகிறார்கள். நீங்கள் சிரித்தீர்களே அந்தச் சிரிப்புக்குத்தான் தேங்க்ஸ்” என்று அவரும் சிரித்தார். இதைக் கேட்டு எனக்குப் பின்னால் நின்றிருந்த பெண் சிரிக்க அவருக்கும் ‘தேங்க்ஸ்’ கிடைத்தது. எங்களைச் சுற்றியிருந்தவர்களும் சிரிக்க, சட்டென்று அந்தச் சூழலே மாறிவிட்டது.

யாருக்குத்தான் வீட்டில் பிரச்சினை இல்லை? ஆயிரமாயிரம் சங்கடங்களுக்கு இடையேதான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறோம். எப்போதும் எல்லாவற்றையும் தூக்கிச் சுமந்துகொண்டிருக்க முடியுமா? அந்த மனச்சுமைகளை எல்லாம் வீட்டுக்குள்ளேயே மூட்டைகட்டி வைத்துவிட்டு வந்தால் என்ன இந்தப் பெண்ணைப் போல எனத் தோன்றியது. இறங்கிய பிறகு அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கையசைத்தேன். புன்னகை படர்ந்த முகமும் சிரிக்கும் கண்களும் அந்த நாளின் ஒளியைக் கூட்டிவிட்டன.

- தேவி, சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in