பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 7: பாசாங்கற்ற பகிர்தல்கள்

ப.கல்பனா
ப.கல்பனா
Updated on
2 min read

தமிழ்க் கவிதையில் பெண் குரல் திடமாக ஒலிக்கத் தொடங்கியது 80களுக்குப் பின்னால்தான். அதற்கு முன்பு அதற்கான தொடக்கம் இருந்தாலும் சுகந்தி சுப்ரமணியத்தை இதன் தொடக்கமாகப் பார்க்கலாம். சுகந்தி சுப்ரமணியத்தின் கவிதைகளில் வெளிப்படும் இயல்பும் வெள்ளந்தித்தனமும் அந்தக் கவிதைகளை வாசகர்களுக்கு நெருக்கமாகவும் உணர்ச்சி மிக்கதாகவும் ஆக்கின. அந்த வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டியவர் ப.கல்பனா.

கல்பனா தன் கவிதைகளில் பெண்கள் பிரச்சினைகள், பெண்ணியம் எனப் பெரும் பரப்பில் வைத்துப் பார்க்கவில்லை. அதைத் தரை இறக்கி வீட்டுக்குள் ஓர் அன்றாடத்தில் நிகழும் பிரச்சினையாக வாசகர்களுக்கு அருகில் வைத்துப் பேசுகிறார். எளிமையான கவிதை விவரிப்புகளுடன் கவிதைக்குள் முன்னேறியிருக்கிறார். வேலைக்குப் போகும் பெண்ணின் அன்றாடம் இந்தக் கவிதைகளுக்குள் பதிவாகியுள்ளது. பெண் தன் உரிமைகளுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்பதைப் பிரச்சாரமாகச் சொல்லாமல், உதாரணச் சம்பவங்களுடன் பெண் எப்படி இந்த அமைப்புக்குள் இருக்கிறாள் என்பதைத் திருத்தமாகச் சித்தரிக்கிறார் கல்பனா.

பெண்ணாக இருப்பதன் அவஸ்தையைப் பல கவிதைகள் உணர்த்துகின்றன. ‘ஒவ்வொரு நேரங்கழித்து வரும் மாலையிலும்/அபத்தமில்லையா, பெண்ணாக இருப்பது?’ என்கிறது ஒரு கவிதை. கல்பனாவின் கவிதைகள் எல்லாவற்றிலும் திடமான காட்சி உண்டு. காட்சிபூர்வமான கவிதைகள் எனலாம். இந்தக் காட்சிக்குள் இருக்கும் பெண் தன் அவஸ்தையைச் சக மனுஷியுடன் பகிர்வதுபோன்ற தொனிதான் இவரது கவிதையின் விவரிப்பு மொழி. இந்த விவரிப்புக்காக யாளியை, வானை, அதன் மேகங்களை என எதையும் துணைக்கு அழைக்கவில்லை. நேரடியாகவே ‘நெற்றி/சுருங்கி/பாதங்கள் ஒலி எழுப்ப/பறந்துவந்தன/அறிவுரையும் ஆத்திரமும்/முகத்தில்/இரண்டு சாணி உருண்டைகளை/விட்டெறியலாம் போலிருந்தது/ஆனால்

சப்பாத்திமாவு பிசைந்து கொண்டிருந்தேன்’ என்கிற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கல்பனாவின் இந்தக் கவிதைகளில் குழந்தைகள், வண்ணத்துப்பூச்சிகள், கிளி எல்லாம் வருகின்றன. இவையும் மற்ற கவிதைகளில் வெளிப்படும் பெண் என்கிற நிலையில் பகிர்தலாகவே வருகின்றன. முந்தைய தலைமுறைக் குழந்தைகளின் இயல்பு இந்தக் குழந்தைகளுக்கு இல்லை. இந்த நவீன வாழ்க்கை அவர்களை ரொம்பவும் தனிமைப்படுத்திவிட்டது. இதைப் பற்றிக் கவலைப்படும் ஒரு கவிதையையும் பெண் பிரச்சினைகளின் தொடர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

பெண்களுக்கான பிரச்சினைகள் வர்க்கம், இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றுதான். நகரத்துப் பெண்களுக்குச் சிறு சுதந்திரம் கிடைத்துவிட்டதான பொதுக் கற்பிதங்களைப் பல கவிதைகள் தகர்க்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் பலர் இந்தக் கவிதைகளுக்குள் இருக்கின்றனர். அவர்களது வாழ்க்கை நகர வாழ்க்கைச் சிக்கலுடன் பெண் என்கிற சமூகக் கற்பிதங்களைத் தூக்கிக் கொண்டு வேலைக்குச் சென்று திரும்புவதைப் பேசுகின்றன.

‘பெண்’ என்கிற கவிதையில் கிராமத்துப் பெண்ணையும் நகரத்துப் பெண்ணையும் படித்த பெண்களையும் படிக்காத பெண்களையும் ஒப்பிட்டுப் பேசுகிறார். பெண்கள் எல்லா இடங்களிலும் சமூக நிலையிலும் பெண்களாகவே இருக்கின்றனர் எனச் சொல்கிறார். ‘மருமகளோ மாமியாரோ/இருவருமே அன்பாய் இருக்கத்தான் நினைக்கிறார்கள்’ என இந்தக் கவிதையில் சொல்கிறார். இந்தக் கவிதையில் ஓர் இடத்தில் கேட்கிறார்: ‘அவளோ இவளோ/என்ன வேற்றுமை கிடக்கிறது?’. வெளிப்படையான கவிதை. எந்தவிதப் பாசாங்கும் உருவகச் சுமைகளும் இல்லை. ஆனால், இந்தக் கவிதையின் பொருளில் கவித்துவம் இருக்கிறது. ‘கிடக்கிறது’ என்பது மாதிரியான சொற்பிரயோகம் கவிதையின் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்தச் சொல்லில் ஓர் அயர்ச்சி வெளிப்படுகிறது. இயற்கையின் அம்சங்கள் பல இந்தக் கவிதைகளுக்குப் பெண்களின் நிலையைச் சொல்லப் பயன்பட்டுள்ளன. ஆனால், பெண்களின் நிலைகளை, சமூக நிதர்சனத்தைக் கூடியவரை எள்ளலுடன் சொல்லவே கல்பனா முயன்றுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in