முகங்கள்: அன்புள்ள அப்பாவுக்கு!

முகங்கள்: அன்புள்ள அப்பாவுக்கு!
Updated on
2 min read

அரசுப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிறவர்கள் தகுதியான பணிகளில் நியமிக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கவிருக்கும் துர்காவின் வெற்றியைப் பத்தோடு பதினொன்றாகச் சுருக்கிவிட முடியாது. அது தனித்துவமானது. நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய தன் தந்தையின் கனவை நனவாக்குவதற்காகவே இந்த வெற்றியை அவர் அடைந்திருக்கிறார்.

மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவந்தவர் சேகர். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார். தன்னுடைய ஒரே மகள் துர்கா அரசு அதிகாரியாக உயர வேண்டும் என்பதே சேகரின் கனவு. சேகரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மனைவி வீட்டுவேலை செய்துவருகிறார். துர்கா, மன்னார்குடி அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். பிறகு மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் நிர்மல் என்பவருடன் துர்காவுக்குக் கடந்த 2015இல் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு எட்டு வயதிலும் ஐந்து வயதிலும் இரண்டு மகள்கள்.

திருமணம், குழந்தைகள் என்று ஆண்டுகள் பல கடந்தாலும் தந்தையின் கனவை நிறைவேற்றும் லட்சியத்தை துர்கா கைவிடவில்லை. 2022ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றார். 2023இல் நடைபெற்ற முதன்மைத் தேர்விலும் வெற்றிபெற்று, அண்மையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதிலும் முழு மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்றதன் மூலம், நகராட்சி ஆணையர் பதவிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை துர்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தோள்கொடுத்த குடும்பம்

இது குறித்து துர்கா கூறும்போது, “என் அப்பா மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். சமூகத்தில் நிலவுகிற ஏற்றத் தாழ்வுகள் காரணமாகப் பல்வேறு அவமானங்களை என் அப்பா சந்தித்தார். ஆனால், அவையெல்லாம் தனக்கு நிகழ்ந்த அவமானம் என்று புரிந்துகொள்ளக்கூட முடியாத அளவில்தான் அவரது புரிதல் இருந்தது. இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்தவள் நான். நான் ஒரு அரசு அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் விருப்பம்” என்று சொல்லும் துர்கா, தன் வெற்றிக்குத் திருமண வாழ்க்கை எந்த விதத்திலும் தடையாக இல்லை எனக் குறிப்பிடுகிறார்.

“பெண்களைப் பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் அவர்களுக் கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். அப்பாவைப் போலவே கணவனும் நம்மை ஊக்கப்படுத்தினால் போதும், எத்தகைய உயரத்தையும் நாம் எட்டிப்பிடிக்க முடியும். அந்த வகையில் என் கணவர் நிர்மல் குமார் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நான் தொடர்ச்சி யாக எழுதிய குரூப் 1, குரூப் 4, குரூப் 2 ஆகிய தேர்வுகளின்போது எனக்குப் பக்கபலமாக இருந்தார். தேர்வுக்காகப் படித்த என்னை ஊக்கப்படுத்தியதுடன் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். அதனால்தான் என்னால் குரூப் 2 தேர்வில் வெற்றிபெற முடிந்தது. எனக்கு வெவ்வேறு அரசுத் துறைகளிலும் பணிவாய்ப்பு இருந்தது. ஆனால், நான் நகராட்சி ஆணையர் பதவியைத்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றியபோது என் அப்பா பட்ட அவமானங்களை எனது கல்வியின் மூலம் துடைத்துவிட்டேன் என்கிற நிம்மதி எனக்கு உள்ளது. அப்பா தற்போது உயிருடன் இல்லை என்றாலும், நான் ஆணையர் பதவியில் செய்கிற பணிகள் அனைத்திலும் அவர் நிறைந்து இருப்பார் என நம்புகிறேன்” என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் துர்கா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in