

இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் விசேஷமானவர் ஃபஹீமா ஜஹான்.
இலங்கையின் வடமேற்குப் பகுதியான மெல்சிரிபுரவில் பிறந்தவர். கணித ஆசிரியர். இலங்கைப் போர்ச் சூழல் அங்குள்ள படைப்புகளில் அதிகம் பாதிப்பை விளைவித்தது. பெரும்பாலும் கவிதை, புனைகதைகள் இதன் நேரடி, மறைமுக விளைவுகளாக வெளிப்பட்டன. ஃபஹீமாவின் கவிதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இவரது கவிதைகள் பெரும்பாலும் பெண் என்கிற நிலையில் அகவயமாக உறவுச் சிக்கல்களைப் பேசுவதில் விருப்பம் கொள்ளும் அம்சத்தில், மற்ற இலங்கைக் கவிதைகளில் ஃபஹீமாவைத் தனித்துவப்படுத்திப் பார்க்கலாம்.
இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் பொதுவாக வெளிப்படும் மொழிப் பிரக்ஞை ஃபஹீமாவின் கவிதைகளிலும் இருக்கிறது. அந்தப் பிரக்ஞையில் தான் நவீன கவிதையில் தமிழ்ச் செவ்வியல் தன்மையுடனான பாடலை இந்தக் கவிதைகள் வழி ஃபஹீமா உருவாக்குகிறார். இயற்கை அம்சங் களின் துணை கொண்டு இதைக் கவிதைக்குள் அவர் நிகழ்த்திக் காட்டுகிறார். சூரியனும் நிலவும் ஓடைகளும் மரங்களும் பறவைகளும் ஆதிக் காலத்திலிருந்து பறந்து ஃபஹீமாவின் கவிதைகளுக்குள் அவரது கவிதைப் பொருளை உணர்த்தக் கூடுவிட்டு கூடு பாய்கின்றன.
தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண், அவளது துயரம், வேதனை இவை எல்லாவற்றையும் ஒரு பாதி நிலவைக் கொண்டு சித்தரிக்கும் ஃபஹீமாவின் கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு பெண் அந்திப் பொழுதில் கிணற்றில் நீர் மொண்டு வரப் போகிறாள். அவளோடு பாதி நிலா வருகிறது. ‘அவளைப் போலவே தேய்ந்து/அவளது ஆன்மாவைப் போல் ஒளிர்விடும்/பாதி நிலவு’ என்கிறார் அவர். அவள் நீர் அள்ளும் கிணற்றுக்குள் அந்த நிலவு அவளுக்காக ஒளி பாய்ச்சுகிறது. கூடவே நடந்து வீட்டுக்குள் வருகிறது. அவள் பானைக்குள் விழுந்து துடிக்கிறது என அந்தக் கவிதை முன்னேறிச் செல்கிறது. அந்தக் கவிதை ரத்தம் கன்றிப் போன கரங்களை, காயங்களின் வலி ஒற்றிக்கொடுப்பதாக எழுதுகிறார். நுட்பமான கவிதை. வேதனை தரும் ஒத்தாசையைத்தான் இதில் சொல்ல முற்பட்டுள்ளார் எனப் புரிந்துகொள்ளலாம்.
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களைப் பெரும்பாலான பெண் கவிஞர்களின் கவிதைகளில் பார்க்க முடியும். ஃபஹீமாவின் கவிதைகள் இந்த உறவுச் சிக்கல்களுக்குள் உழலாமல் தீர்வை நோக்கி அந்தச் சிக்கலை நகர்த்துகின்றன. அது உறவிலிருந்து விடுதலையை நோக்கிய அழைப்பாக இருக்கிறது. இந்த வகைக் கவிதைகள் நேரடியாக எதிர்முனையை நோக்கிக் கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு கதையின் அம்சத்துடன் வெளிப்படும் இந்தக் கவிதைகளில் பெண்ணியம் என்கிற நிலையைத் தாண்டி சாமானியப் பெண்தான் கோபத்துடனும் தவிப்புடனும் வெளிப்படுகிறாள். அந்தப் பெண்ணே ஒரு தீர்க்கமான முடிவை நோக்கிச் செல்பவளாகவும் கேள்விகளால் உரைப்பவளாகவும் வெளிப்படுகிறாள்.
ஃபஹீமாவின் கவிதைகளில் இலங்கையின் அரசியல் சூழலும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த வர்களின் கற்பிதங்களுக்கு இலங்கையின் நிலையைப் பதிலாகக் கூறுகிறார் ஃபஹீமா. புவியியல் ரீதியில் இலங்கை ஓர் அழகான தீவு. இதைத் தன் கவிதைகளில் அடிக்கடிச் சொல்லிக் கொள்கிறார் ஃபஹீமா. அதன் அரசியல் சூழலில் அந்த அழகான தீவின் அமைதி, பறிபோனதைத்தான் இதன் வழி அவர் சொல்ல விழைகிறார் எனலாம். ‘கண்ணீர் வற்றாத தீவு’ என ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ‘வெயில்’ என்கிற கவிதையில் வெயிலை உதாரணமாக்கி இலங்கையின் அரசியல் நிலையைச் சொல்கிறார். அதில் ஃபஹீமா கையாண் டுள்ள உருவகம் அவரது கவித் திறனுக்கான சாட்சி. ‘வெட்டியகற்றப்பட்ட மரம்/விட்டுச் சென்ற வெளியில்/அதிரடியாக இறங்கிக் கொண்டிருக்கிறது வெயில்’ எனத் தொடங்குகிறது அந்தக் கவிதை. வெயில் அந்தத் தீவின் நீர்வளத்தை உறிஞ்சிக் கொள்வது பல கவிதைகளில் வெளிப்படுகிறது. வெயில் ஓர் அச்சமூட்டும் விலங்காக இந்தக் கவிதைகளில் உலவுவதையும் பார்க்க முடிகிறது. இந்தத் தீவின் நீரை உறிஞ்சிவிட்டு ரத்தக் கறைகளை அப்படியே விட்டுவிட்டு வெயில் வெளியேறுவதாக ஃபஹீமா எழுதுகிறார். வெயில் மறைந்த பிறகு பெருவனம் தன் கூந்தலை அவிழ்த்துப் போட்டு பதுங்கியிருந்த மிருகங்களையெல்லாம் தன்னோடு அழைத்துத் தெருவெங்கும் அலைவதாக இந்தக் கவிதை முடிகிறது. இலங்கைப் போர்ச் சூழலுடன் வாசிக்கப்பட வேண்டிய துயர்மிகு கவிதை இது. ‘கண்ணீர் வற்றாத தீவு’, ‘கண்ணீர் வற்றிப் போன உறவு’ ஆகிய இந்த இரண்டு பிரயோகங்களை வைத்து ஃபஹீமாவின் கவிதை உலகை வரையறுக்கலாம். ஒன்றை அரசியலுக்கும் மற்றொன்றைக் காதலுக்குமாகக் கொள்ளலாம்.