

நாற்பது வயதுக்கு மேல் நம் வாழ்வில் பெரிதாக என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று நினைக்கிறவர்களுக்குப் பதில் சொல்வதுபோல் இருக்கிறது ஸ்ரீதேவியின் வாழ்க்கை. அரங்கக் கலையான நடிப்பை 42 வயதில் கற்றுக்கொண்ட இவர், தற்போது பள்ளி மாணவியருக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.
ஸ்ரீதேவி திருச்சியில், வளர்ந்தவர். மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்துவிட்டு மருத்துவமனை ஒன்றில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்களும் நெருக்கடிகளும் அதிகரித்த போது குடும்பத்துடன் 2004இல் சென்னைக்குக் குடியேறினார். நிலையான வேலையில்லாமல் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். திமுக, அதிமுக என இரண்டு பெரிய கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன என்பது மட்டுமே ஸ்ரீதேவியின் அதிகபட்ச அரசியல் அறிவாக அன்றைக்கு இருந்தது. வேலைக்குச் சென்றுவெளி மனிதர்களுடன் பழகியபோது கூடத் தனது சமூகப் பார்வை விசாலமடையவில்லை எனச் சிரிக்கிறார்.
பெண்களின் அரசியல்
வீட்டில் இருந்தவர்கள் முற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் என்கிறபோதும் அதைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இவருக்கு இருக்கவில்லை. பெண்கள் குழு ஒன்று சென்னையில் நடத்திய ‘அரசியல் பேசலாம் வாங்க’ என்கிற நிகழ்ச்சி, ஸ்ரீதேவியின் வாழ்க்கைத் திசையை மாற்றிப்போட்டது.
“பொதுவா ஆண்கள்தானே அரசியல் பேசுவார்கள்? பெண் கள் என்ன பேசிவிட முடியும் என்கிற நினைப்போடுதான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கே பெண்கள் பேசியதைக் கேட்ட பிறகுதான் கிணற்றுத் தவளையாகவே காலத்தைக் கழித்துவிட்டது புரிந்தது. அந்த நேரத்தில்தான் சபரிமலை நுழைவுப் போராட்டம், நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதாவின் தற்கொலை என்று பலவும் நடந்தன. அவ்வளவு நாள்களாக வெறும் செய்தியாகக்கூட நான் கவனிக்காத பல சம்பவங்களின் அரசியல் பின்னணி எனக்குப் புரியத்தொடங்கியது. அப்போது ‘பரீக்ஷா’ நாடகக்குழு சார்பாக நடத்தப்பட்ட நாடகம் ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இரண்டு வரி வசனத்தைச் சொல் வதற்குப் படாத பாடு பட்டேன் அன்றைக்கு” எனப் புன்னகைக்கிறார் ஸ்ரீதேவி.
முதல் வாய்ப்பு
இவர் நாடகத் துறைக் குள் நுழைவதற்கான நுழைவுச் சீட்டாகவும் அந்த நாடகம் அமைந்தது. ஸ்ரீதேவியின் தோழி ஒருவர் ‘கூத்துப்பட்டறை’யில் நடைபெற்ற ‘காலம் கால மாக’ என்கிற நாடகத்தைப் பார்க்க இவரை அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தத் தோழியின் பரிந்துரையின் பேரில் கூத்துப்பட்டறையில் நாடகப் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நான்கு ஆண்டுகள் பயிற்சியும் நடிப்புமாகக் கழிந்தன.
“கூத்துப்பட்டறை என்னைச் செழுமைப் படுத்தியது. வாயில்லாப் பூச்சியாக இருந்த என்னை நடிப்பும் அது சார்ந்த தேடலும் உறுதி மிக்கவளாக மாற்றின. கூத்துப்பட்டறை சார்பில் நான் முதன்முதலில் நடித்த ‘அப்பாவும் பிள்ளையும்’ நாடகத்தில் நாடக ஆளுமை ந.முத்துசாமியின் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு. அதன் பிறகு நாடக ஆசிரியர்கள் கருணா பிரசாத், வெளி ரங்கராஜன் போன்றவர் களது இயக்கத்திலும் நடித்தேன்” என்று சொல்லும் ஸ்ரீதேவி ஓராள் நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பே கருவி
கவிஞர் ச.விஜயலட்சுமியின் ‘லண்டாய்’ தொகுப்பில் உள்ள ஒரு கவிதையை நாடக ஆசிரியர் ஜானகி இயக்கத்தில் ஓராள் நாடகமாக ஸ்ரீதேவி நடித்தார். “பெண்ணின் உரிமையைப் பேசும் அந்த நாடகத்தை சென்னை புழல் சிறையில் ஆண் கைதிகள் மத்தியில் நடித்ததை மறக்க முடியாது. கவிஞர் சுகிர்தராணியின் ‘பிணங்களின் அரசியல்’ கவிதையை சாரதி இயக்கத்தில் ஓராள் நாடகமாக நடித்திருக்கிறேன். மகாபாரதக் கதாபாத்திரமான ‘மாத்ரி’யை ஓராள் நாடகமாக அரங்கேற்றியதிலும் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் ஸ்ரீதேவி.
சிறு அரங்கத்தில் குறைவான பார்வையாளர் மத்தியில் அரங்கேற்றப்படும் நாடத்தை ‘மிகை நடிப்பு’ எனப் பலர் விமர்சிப்பதை மறுக்கும் ஸ்ரீதேவி, “நாடகக் கலையில் பல வகை உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான நடிப்பு முறை உண்டு. எவ்வளவோ அரசியல் மாற்றங்களையும் மக்கள் எழுச்சியையும் நாடகக் கலையின் மூலம் நிகழ்த்திய இடத்தில் இருந்துகொண்டு இப்படிப் பேசலாமா? நாடகம், காலத்துக்கு ஏற்ப நவீனமயமாகியிருக்கிறது” என்று சொல்லும் ஸ்ரீதேவி, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்துக்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வீதி நாடகத்தில் நடித்திருக்கிறார். சின்னத்திரையைத் தொடர்ந்து தற்போது வலைத்தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.
“நம்மைச் சுற்றி நடக்கிற அநீதிகளுக்கு எதிராக நாம் குறைந்தபட்சமாவது எதிர்வினையாற்ற வேண்டும். அதற்கான கருவியாகவும் நான் நாடகத்தைத் தேர்ந்தெடுத்தேன்” என்பவரது சொற்களில் துளியும் நடிப்பில்லை.