

அமெரிக்க வெள்ளையினத்தவர் நிறைந்திருந்த வண்டியில் ஏறிய சோஜர்னர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார். அவரை வண்டியின் முன் பக்கம் செல்லும்படி நடத்துநர் மிரட்டும் தொனியில் கூச்சலிட, சோஜர்னர் சிறிதும் அசரவில்லை. சாவதானமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார். தன்னை அந்த நடத்துநர் சட்டரீதியாக எதுவும் செய்துவிட முடியாது என்கிற துணிவு தந்த நிமிர்வு அது.
ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் அந்தக் காலத்தில் ‘ஜிம் குரோ’ வண்டிகள் தனியாக விடப்பட்டன. ஆனால், அவற்றிலும் அமெரிக்க வெள்ளையின மக்களே அமர்ந்து செல்ல, ஆப்ரிக்க அமெரிக்கர்களோ வண்டியின் முன் பக்கம் அல்லது வண்டியின் கூரையின் மீது அமரும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். இதை அறிந்த சோஜர்னர் ட்ரூத், வாகனங்கள் ஓடும் ரயில்பாதை நிர்வாகத் தலைவருக்கு இது குறித்துப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து வாகனங்களில் நிறப் பாகுபாடு கடைப்பிடிக்கப்படக் கூடாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு தந்த துணிவில்தான் சோஜர்னர் தன் இருக்கையில் இருந்து எழவில்லை. இதற்கும் அவர் மீது வழக்குத் தொடரப் பட்டது. அந்த வழக்கிலும் இறுதிவரை போராடி வென்றார் சோஜர்னர்.
நில உரிமை வேண்டும்
சோஜர்னரின் போராட்டங்களில் நில உரிமைப் போராட்டமும் முக்கிய மானது. இன்றைக்கும் உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்டோரிடமும் பெண்களிடமும் இருக்கும் சொத்து களின் மதிப்பே அந்தப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தும். அமெரிக்க உள்நாட்டுப் போரில் பங்கேற்ற ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு நிலம் வேண்டும் என்று 1860களின் பின் பகுதியில் சோஜர்னர் கோரிக்கை வைத்தார். காரணம், நில உரிமை என்பதுதான் மனிதர்களை அடிமைத்தனத்தில் இருந்தும் அண்டிப் பிழைப்பதில் இருந்தும் விடுவிக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆப்ரிக்க அமெரிக்கர்கள் நாள் முழுக்க வயலில் உழைத்தாலும் அதன் பலனை எல்லாம் உரிமையாளர்களே அனுபவிப்பதன் அரசியலை அறிந்திருந்தார். தன் மக்கள் வெறும் கூலிகளாகவும் உதிரிகளாகவும் வாழ்ந்து மடியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக ஆயிரக்கணக்கானோரிடம் கையெழுத்து பெற்று மனு அளித்தார். ஆனால், அவர் வாழ்ந்த காலம்வரை அந்தக் கனவு கைகூடவே இல்லை.
தப்பித்து ஓடவில்லை
சோஜர்னருக்குப் படிப்பறிவும் எழுத்தறிவும் இல்லை. ஆனால், அவரது சொற்கள் அம்பைப் போலக் கூர்மையானவை. இலக்கைத் தாக்கத் தவறாதவை. இந்தச் சம்பவமும் அதற்கு உதாரணம். தான் வேலை செய்துவந்த வீட்டிலிருந்து வெளியேறிய சோஜர்னரைத் தேடி அவரை விலைகொடுத்து வாங்கிய ‘எஜமானர்’ வந்துவிட்டார். “ஏன் தப்பியோடினாய்?” என அவர் கேட்க, “நான் இருளில் பதுங்கி ஓடவில்லை. சூரிய ஒளியில் நடந்துதான் சென்றேன்” எனக் குரலில் சிறிதும் பிசிறின்றிப் பதில் அளித்தார் சோஜர்னர். ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்ட சோஜர்னர் உரையாற்றுகையில் கூட்டம் மொத்த மும் இமைக்க மறந்து கேட்கும். ஒரு கூட்டத்தில், “இறைவன் படைத்த முதல் பெண்தான் உலகைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாள் என்று வைத்துக்கொண்டால் அதை நேர் செய்யும் திறமையும் அவளுக்கு உண்டு. ஆண்களே, நீங்கள் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளுங்கள்” என்று ஆணாதிக்கவாதிகளுக்குக் குட்டுவைத்தார்.
உரிமைச் சுடர்
ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டிருந்த சோஜர்னர், தன் சொற்பொழிவுகளிலும் அதை வெளிப் படுத்தினார். “உங்களது தோலைச் சிவப்பாகப் படைத்த கடவுள்தான் என் தோலைக் கறுப்பாகப் படைத்தார். கறுப்பாகப் பிறந்ததில் என் தவறு என்ன? கடவுள் நிறத்தைக் கொண்டா தன் அன்பை வெளிப்படுத்தினார். அனைத்து மக்களுக்காகவும்தானே அவர் உயிர் நீத்தார்?” என்கிற அவரது கேள்வி அன்றைக்குப் பலரையும் நிறவேற்றுமை குறித்துச் சிந்திக்கத் தூண்டியது. பக்திப் பாடல்களோடு விடுதலைக்கான பாடல்களையும் சோஜர்னர் பாடினார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அவர் எழுதிய ‘தி வேலியன்ட் சோல்ஜர்ஸ்’ பாடல் புகழ் வாய்ந்தது. “உங்களைப் போலவே எங்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு. ஒரு வேளை உரிமைகள் மறுக்கப்படும்பட்சத்தில் நாங்கள் அவற்றைப் பெறுவதை நீங்கள் தடுக்க முடியாது” என்று சோஜர்னர் அன்றைக்கு ஏற்றிய உரிமைச் சுடர் அவரது மறைவுக்குப் பிறகும் அணையவில்லை.