பெண்கள் 360: விருதுப் பட்டியலில் தலித் பெண் எழுத்தாளர்

பெண்கள் 360: விருதுப் பட்டியலில் தலித் பெண் எழுத்தாளர்
Updated on
2 min read

விருதுப் பட்டியலில் தலித் பெண் எழுத்தாளர்

அமெரிக்கவாழ் இந்திய எழுத்தாளரான மிமி மண்டல் இந்த ஆண்டின் ஹியூகோ விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது அறிவியல் புனைவுகளுக்காக வழங்கப்படும் இலக்கிய விருது. தன்னை தலித் எனப் பெருமிதத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் மிமி மண்டல், கொல்கத்தாவில் பிறந்தவர். இந்தியாவிலும் ஸ்காட்லாந்திலும் படித்த அவர், தற்போது நியூயார்க்கில் வசித்துவருகிறார்.

கவிஞர், எழுத்தாளர், தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அலெக்ஸாண்ட்டிரா பியர்ஸி என்பவருடன் இணைந்து இவர் தொகுத்த ‘லுமினெஸென்ட் த்ரெட்ஸ்’ என்னும் புத்தகத்துக்காக ஹியூகோ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் லோகஸ் விருதுக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க அறிவியல் புனைவு எழுத்தாளரான ஆக்டேவியா இ. பட்லருக்குப் பிற எழுத்தாளர்கள் எழுதிய நாற்பது கடிதங்களை இவர் தொகுத்திருக்கிறார்.

மிருணாளினிக்கு மரியாதை

97 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்த மிருணாளினி சாராபாய், பரதநாட்டியத்தின் அடையாளம். பத்ம பூஷன் விருது பெற்ற அவர் ‘நாட்டியப் பேரொளி’ என்று பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமானவர். நடனத்தைத் தன் வாழ்வின் சுவாசமாகக் கொண்ட அவர் , நடன வடிவமைப்பிலும் முத்திரை பதித்தவர்.

நடனத்தின் மீதான தன் காதலை நடனம் ஆடுவதோடு மட்டும் சுருக்கிக்கொள்ளாமல், பிறருக்கு அதைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் விரிவாக்கிக்கொண்டார். 1949-ல் அவர் தோற்றுவித்த ‘தர்பனா அகாடமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’ எனும் பயிற்சிப் பள்ளியே அதற்குச் சான்று. கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு நூறாவது பிறந்தநாள். அந்த நாளில் அவரைக் கவுரவிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டது.

வெற்றியின் இரண்டு ஆண்டுகள்

நைஜீரியாப் பெண்களில் 25 சதவீதத்தினரின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதாக 2014-ல் வெளியான ஐ.நா. தரவுகள் தெரிவித்திருந்தன. மலட்டுத்தன்மை பேறுகால மரணம் பாலுறவு இன்ப வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும் அந்தக் கொடிய செயலைத் தடைசெய்யக் கோரி பெண்ணிய அமைப்புகள் போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் நடத்திவந்தனர். அதனால் சில மாநிலங்களில் அதற்குத் தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால், அந்தச் செயலைத் தொழிலாகக் கொண்டவர்கள் தடைக்கு எதிராகப் போராடியதால் பெரும்பாலான மாநிலங்களில் பெண்கள் பெருந்துயருக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் போராட்டம் நடத்திய பெண்ணிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், எதிர்ப்பாளர்களின் மறுவாழ்வுக்காகவும் போராடத் தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து 2016 மே மாதம் நைஜீரியா முழுவதும் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. பெண்ணிய அமைப்புகளின் ஒற்றுமையாலும் மனஉறுதியாலும் கிடைத்த வெற்றிக்கு இந்த மாதத்தோடு இரண்டு வயதாகிறது.

வதந்தி பறித்த உயிர்

திருவண்ணாமலை மாவட்டம், அத்திமூர் கிராமத்தில் உள்ள முத்துமாரிஅம்மன் கோயிலுக்குச் செல்ல, சென்னை பழைய பல்லாவரத்திலிருந்து ருக்மணி என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர் சென்றனர். அவர்கள் போளூரையடுத்த தம்புகொட்டான்பாறை கிராமத்தில் இருந்த நீலா என்ற பெண்ணிடம் வழி கேட்டுள்ளனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த நீலாவின் இரண்டு பேத்திகளுக்கு மலேசியாவிலிருந்து வாங்கி வந்த சாக்லெட்களை ருக்மணி கொடுத்துள்ளனர்.

5jpgright

இதைப் பார்த்த கிராம மக்கள், அவர்களைக் குழந்தைக் கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து, கடுமையாகத் தாக்கியுள்ளனர். காரில் இருந்த மூதாட்டியையும் அந்தக் கும்பல் விட்டுவைக்கவில்லை. இந்த மூர்க்கமான தாக்குதலால் ருக்மணி உயிரிழந்தார். வதந்தியின் அடிப்படையில் நடைபெறும் கும்பல்வாதக் கொலைகள் சமீப காலமாக தமிழகத்திலும் அதிகரித்துவருவதையே ருக்மணியின் உயிரிழப்பு உணர்த்துகிறது.

- இரா.தினேஷ்குமார்

எண்ணமும் பேச்சும்: எஸ்.வி. சேகருக்கு மட்டும் ஏன் சலுகை?

பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம், சாமானிய மக்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதேபோல எஸ்.வி. சேகருக்கு எதிரான வழக்கிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in