

இலங்கை நவீனத் தமிழ் இலக்கியம் தனித்துவமானது. இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தைப் போல் அல்லாமல் அதற்கு மொழி அளவிலும் பொருள் அளவிலும் தமிழ்ச் செவ்விலக்கியத்தின் ஓர்மைகள் உண்டு. மகாகவி உத்திர மூர்த்தி, மு.பொன்னம்பலம், சண்முகம் சிவலிங்கம், சேரன், செல்வி, சிவரமணி என்கிற தொடர்ச்சியின் கண்ணி எனக் கவிஞர் தமிழ்நதியைச் சொல்லலாம். குந்தவை, அ.முத்துலிங்கம், யோ.கர்ணன் போன்ற புனைகதை யாளர்கள் வரிசையிலும் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர் இவர்.
ஈழத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான அம்சமாகப் பார்க்கப்படும் கவித்துவம் தமிழ்நதியின் எழுத்தில் உண்டு. அதைத்தமிழ்நதி இன்னும் நவீனப்படுத்தியிருக்கிறார். அவரது கவிதைகளிலும் கதைகளிலும் இதைப் பார்க்க முடியும். இந்தியத் தமிழ் நவீனக் கவிதைகள் 2000க்குப் பிறகு கைக்கொள்ள விழையும் தமிழ்ச் செவ்வியலின் அழகை, தமிழ்நதி தன் கவிதைகளுக்கான மொழியாகச் சூடிக்கொண்டவர்.
தமிழ்நதியின் கவிதைகளில் நிலமும் போரும் காதலும் காமமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாகவும் ஒன்று மற்றொன்றின் அம்சமாகவும் விரிந்து கிடக்கின்றன. போர், நிலம், காதல் என்கிற அம்சத்தில் சேரனின்கவிதைகளுடன் தமிழ்நதியை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால், சேரனின் கவிதைகளில்மூர்க்கம்கொள்ளும் காமம், தமிழ்நதியின் கவிதைகளில் தண்மையுடன் வெளிப்பட் டுள்ளது. இன்னும் சொன்னால் அது ஒரு ஜன்னல் திறப்புக்கான வெளியை உருவாக்க விழைகிறது. காமத்தை செளந்தர்யம் மிக்க ஒரு கலைப்பொருளாகக் கவிதைகளுக்குள் தமிழ்நதி பிரதிஷ்டை செய்திருக்கிறார். போர் குறித்த சித்திரங்களிலும் இன்றைய காலகட்டத்தின் யதார்த்தத்தைத் தீவிரத்துடன் தமிழ்நதியின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ‘ஒரு காலத்தில்/எங்களிடம் கொஞ்சம் புத்தகங்கள் இருந்தன/...எங்களோடு சில மனிதர்கள் இருந்தார்கள்’ என்கிற கவிதை வரிகள் இலங்கைப் பின்னணியுடன் வாசித்துப் பார்க்கப்பட வேண்டியவை. இதே கவிதையை தமிழ்நதி ஒரு விமர்சனத்துடன் இப்படி முடிக்கிறார்: ‘எங்கள் நாடு ஒரு ஜனநாயக நாடு/இரவு கவிந்துவிட்ட விறாந்தையில் இருந்து/பிள்ளைகள் மெதுவாகத்தான் படிக்கிறார்கள்’. மோசமான காலத்தின் வாழ்வு பற்றிய இவரது கவிதையையும் இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கலாம். ‘இரவுக்கும் பகலுக்குமிடையிலானதொரு பொழுதில்/உங்கள் பூர்விக நிலத்தை நீங்கிச் செல்கிறீர்கள்’ என்கிற வரிகள் உருவாக்கும் காட்சி, வேதனை மிக்கது. இவரது ‘பார்த்தீனியம்’ நாவல் இந்தப் போர்ச் சூழலில் எழுதப்பட்டது.
தனிமையும் இவரது கவிதைகளின் பொருளாகத் தொழிற்பட்டுள்ளது. இந்தத் தனிமை ஓர் உறவுக்கு இட்டுச் செல்லத் தூண்டுகிறது. அந்த உறவின் சிக்கல்களை, குற்றவுணர்வை, வாழ்வு பற்றிய நம்பிக்கைகளை/அவநம்பிக்கைகளை எனக் கவிதையில் இந்தத் தனிமை ஒரு சங்கிலியாகத் தொடர்ந்துவருகிறது. குடும்ப அமைப்பின் விழுமியங்களை மீற யத்தனிக்கும் அம்சங்கள் இந்தக் கவிதைகளில் பரவலாக உள்ளன. ஆனால், அதன் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கவில்லை. அதுபோல் அதன் அவசியத்தையும் சொல்ல முயல்கின்றன. ஒரு நாயின் முன்பு இடப்பட்ட பிஸ்கட்டுடன் குற்றவுணர்வை ஒப்பிடுகிறது ஒரு கவிதை. ஆனால், அதை மீற முடியாததன் யதார்த்தத்தைப் பாடித் தீர்க்கின்றன. அமைப்புக்கு வெளியே அரும்பும் ஓர் அழகான காதலைச் சொல்கிறது ஒரு கவிதை. ‘தற்செயலாகவோ தன்னுணர்வுடனோ/நம் ஆடைகள் உரசிக்கொள்கிறபோது/விலங்குகள் விழிக்கின்றன/மலரொன்று வீழ்கிறது தலைகுப்புற/மஞ்சள் இதழோடு’ என ஒழுகுகிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை ’துரோகத்தின் கொலைவாளை/உறையிலிருந்து உருவிய பாவம் போதும்/இறக்கத் துணிவில்லை எவர் மீதும்’ என முடிகிறது. இன்னொரு கவிதை ‘உரிமைகளை இழந்ததோர் தேசத்தவள்/எல்லைகளைக் கடந்து ஒரு எட்டும் வைக்கிலேன்’ என்கிறது. இது விழுமியங்களை மீறுவது குறித்த மனக் குழப்பங்களைச் சொல்கிறது. இதனால், ’உடற் கடிகாரத்துக்கு பைத்திய’மும் பிடித்துவிடுகிறது. தமிழ்நதியின் ‘கானல் வரி’ நாவலை இந்தப் பின்னணியில் வாசித்துப் பார்க்கலாம்.
பொதுவாகப் பெண் கவிதைகளில் முன்னி றுத்தப்படும் ‘அபலைக் குரல்’ தமிழ்நதியின் கவிதைகளில் இல்லை. அவரது மொழியைப் போல் கவிதைகளும் திடகாத்திரம் மிக்கவையாக இருக்கின்றன. ஆண்-பெண் உறவு நிலையில் உள்ள சிக்கல்களை யதார்த்தத்துடன் பதிவுசெய் கின்றன; கிண்டல் செய்கின்றன. ஒரு தனிமைப் பெண்ணின் சிந்தனையில் மழையைப் பற்றி இவரது ஒரு கவிதை விவரிக்கிறது. ஒரு மழைக்குக் காத்திருக்கும் அவள், முந்தைய மழையைப் பற்றி யோசித்துப் பார்க்கிறாள். மழையின் பொழிவையும் மழை விட்ட பிறகு அது தரும் மெல்லுணர்வையும் அவள் பார்வையில் கவிதை சொல்கிறது. அந்தக் கவிதையின் கடைசி வரி இப்படி முடிகிறது: ‘வெளிக்கொடியில் உலரும்/அவனது துணிகளை/நனைத்துவிடுவதான/அச்சுறுத்தலைத் தவிர/இந்நாட்களில் எதையும் எடுத்துவராத/மழையை நினைக்க/துயரமாய்த்தானிருக்கிறது’. இதில் தனது துக்கத்தைக் கவிதைப் பெண் மழைக்குக் கையளித்துவிடுகிறாள். இயல்பாகப் பெய்யும் மழையின் துக்கம் இவளுக்குத் துயரமாக இருக்கிறதாம். இடையே ‘கணவனின் துணிகள்’ என்கிற வரியில், அவள் இருக்கும் குடும்ப அமைப்பின் சில விழுமியங்களையும் குறிப்பால் உணர்த்துகிறாள். இந்தக் கவிதை பலவிதமான உணர்வுகளைத் தருகிறது. ஒரு சிறு புன்சிரிப்பையும் அணிவிக்கிறது. இன்னொரு கவிதை, ‘கண்ணீர் நிறைந்து தளும்பிய கண்களை’ பார்க்காமலிருக்க வீட்டின் மூலை முடுக்கு, நகத்தின் வெள்ளை, பால்கனி மரக்கிளை என எதையெதையெல்லாமோ பார்த்துத் தொலைக்க வேண்டியிருப்பதைச் சொல்கிறது. ஆனால், புலம்பவில்லை. இந்த அம்சத்தில் தமிழ்நதியின் கவிதைகள் பெண் என்கிற நிலையில் அதன் கற்பிதங்களைக் களைந்து விடுபடலை நோக்கி முடுக்குகின்றன. ‘...சகலகலாவல்லி/சமையற்காரி/சமயங்களில் தனாதிகாரி/கவலைகளைக் கொட்டும் சேமிப்புக் கிடங்கு/இரவுக் காவலாளி/...சற்றேறக் குறைய கண்ணகி/பொருட்கள் உடைக்கப்பட்ட ஒருநாளிரவு/அவளும் உடைந்து வெளியேறினாள்/தாயிலிருந்தும்/மொத்த தளைகளிலிருந்தும்’. பெண் மீது இறக்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் என்கிற சுமைகளைக் கிண்டலடிக்கும் கவிதை தாய்மையையும் தளை என்றே சொல்கிறது எனப் புரிந்துகொள்ளாலாம்.
தமிழ்நதியின் கவிதை, கதைகளை வாசிக்கும்போது பிடிமானமற்ற ஒருவரின் வெளிப்பாட்டைப் பொதுவாக உணர முடிகிறது. பிடிமானம் என்பது ஸ்தூலமாக நாடற்ற, வீடற்ற, உறவு பொய்த்த எனப் பார்க்கலாம். ஆனால், இந்தப் பிடிமானமற்ற தன்மையை தமிழ்நதியின் எழுத்துகள், வாழ்க்கையின் பெரும்பரப்பில் வைத்துப் பார்க்கின்றன; அதை நொந்து கொள்ளவில்லை. மாறாக ‘ஆயினும் சிரிக்கப் பயிற்சி எடு’ என்கிற கவிதை வரியை இந்தப் பிடிமானமற்ற தன்மைக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. கவித்துவத்துக்கு இடையில் புதைக்கப்பட்டிருக்கும் இந்த விநோதம்தான் தமிழ்நதியின் எழுத்தின் விசேஷமான அம்சம் எனலாம்.
தமிழ்நதி, இலங்கையில் திருகோணமலையைச் சேர்ந்தவர். இயற்பெயர் கலைவாணி. கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர் ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது’ (காதை பதிப்பகம்), ‘தங்க மயில்வாகனம்’ (தமிழினி பதிப்பகம்), ‘மாயக்குதிரை’ (டிஸ்கவரி புக்பேலஸ்) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ (பனிக்குடம் பதிப்பகம்), ‘காலம் உறைந்த சட்டகம்’ (தமிழினி), ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ (ஆழி பதிப்பகம்), அதன் பிறகு எஞ்சும் (ஆகுதி பதிப்பகம்) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ‘கானல் வரி’ (உயிர்மை பதிப்பகம்), ‘பார்த்தீனியம்’ (நற்றிணை பதிப்பகம்) ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன.