விற்பனையுடன் விழிப்புணர்வும் உண்டு

விற்பனையுடன் விழிப்புணர்வும் உண்டு
Updated on
2 min read

இது இணைய வர்த்தகத்தின் காலம். இணையத்தில் எதைப் பார்த்தாலும் வாங்கிக் குவிக்கும் கூட்டமும் நம்மிடையே உண்டு. அத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்குமான எல்லைகள் அழிந்துவரும் இந்தக் காலத்தில் இணைய வர்த்தகத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான களமாகவும் பயன்படுத்திவருகிறார் அபிராமி. ஈரோட்டைச் சேர்ந்த இவர், பருத்தியிலான நாப்கின்களை (அறம் காட்டன் நாப்கின்ஸ்) விற்பனை செய்துவருகிறார்.

அபிராமி எம்.பி.ஏ., பட்டதாரி. திருமணத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறியவர், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் வேலையை விட்டு விலகினார். கரோனா பெருந்தொற்றின்போது ராஜாபாளையம் அருகில் உள்ள தளவாய்புரத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டில் தங்கினார். “எனக்கு இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. உதிரப் போக்கு அதிகமாக இருந்தது. அதற்குச் சிகிச்சை எடுத்தபடியே நாப்கின்களில் கவனம் செலுத்தினேன். பிளாஸ்டிக்கும் வேதிப்பொருள் களும் நிறைந்த பிராண்டட் நாப்கின்களுக்குப் பதிலாகப் பருத்தி நாப்கின்களை வாங்கினேன். தரமான பருத்தி நாப்கின்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது. ஒருவழியாக எனக்கு உகந்த நாப்கினை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிய ஆறு மாதங்களிலேயே மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் குறைந்தன” என்று தான் இந்தத் தொழிலைத் தொடங்க ஆரம்பப் புள்ளியாக இருந்த நிகழ்வை அபிராமி பகிர்ந்துகொண்டார்.

செயற்கையிலிருந்து இயற்கைக்கு

“இப்போதெல்லாம் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள். அவர்கள் பிளாஸ்டிக் நாப்கின்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது கிருமித்தொற்று,அரிப்பு போன்றவற்றால் அவதிக்குள்ளாகி றார்கள். அதனால், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என் அக்கா பொண்ணுக்கு பருத்தி நாப்கினைப் பரிந்துரைத்தேன். பிறகு, நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று பலருக்கும் இதைப் பற்றி எடுத்துச் சொன்னேன். அப்போதுதான் இதையே தொழிலாகச் செய்யும் எண்ணம் தோன்றியது” என்கிறார் அபிராமி.

பருத்தி நாப்கின்களை விற்க முடிவுசெய்ததுமே அபிராமியும் அவருடைய கணவர் வெயில்ராஜும் நம்பிக்கையான உற்பத்தியாளரைத் தேடினார்கள். “நாப்கின்களில் மொத்தம் ஏழு முதல் எட்டு அடுக்குகள் இருக்கும். ஒவ்வொன்றும் தரமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்த்து, அதற்கான தரச் சான்றிதழைச் சரிபார்த்த பிறகே நாப்கின்களுக்கு ஆர்டர் கொடுப்போம். சிலிகான், மேஜிக் ஜெல், செயற்கை நறுமணமூட்டிகள் போன்றவை சிறிதுகூட அவற்றில் இருக்கக் கூடாது என்பது எங்களது முதல் நிபந்தனை. பொதுவாக வட இந்திய மாநிலங்களில் இருந்துதான் நாப்கின்களை வாங்குகிறோம். வாடிக்கையாளர்களின் புகார்களை அடிப் படையாகக் கொண்டு நான்கைந்து உற்பத்தியாளர்களை மாற்றிவிட்டோம். இது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல, பெண்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது என்பதால் தரத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை” என்கிறார் வெயில்ராஜ்.

வாடிக்கையாளர்களின் பாராட்டு

“நானும் என் உறவினர்களும் நண்பர்களும் பருத்தி நாப்கின்களைப் பயன்படுத்தி அவற்றின் நல்ல விளைவுகளைப் பார்த்த பிறகுதான் இந்தத் தொழிலைத் தொடங்கினோம். இந்த மூன்று ஆண்டுகளில் மூவாரயித்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றனர். பருத்தி நாப்கினின் பலனைப் பற்றி அவர்கள் சொல்லும்போது கிடைக்கிற மகிழ்ச்சி, அதுவரை நான் பட்ட கஷ்டங்களுக்கு மருந்தாக அமைகிறது. குழந்தை யின்றி இருந்த இருவர் தற்போது கருவுற்றிருப்பதாகச் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. தங்களது மாதவிடாய் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக எங்களது வலை தளப் பக்கத்தில் ஏராளமானோர் கருத்துத் தெரிவிப்பதைப் பார்க்கிறபோது கிடைக்கிற மன நிம்மதிக்கு இணையே இல்லை. நூற்றுக்கும் அதிகமானோர் எங்களிடம் நாப்கின்களை வாங்கி மறுவிற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, உற்பத்தியாளர்களிடம் எங்களது தேவைகளைச் சொல்லி பிரத்யேக மாற்றங்களோடும் நாப்கின்களைக் கொண்டு வருகிறோம்.

ஆரோக்கியக் குறிப்புகள்

இவை பருத்தி நாப்கின்கள் என்பதால் நான்கு முதல் ஐந்து மணிநேரத்துக்குள் மாற்றிவிட வேண்டும். வேலைக்குச் செல்லும் பலருக்கும் அது சாத்தியமில்லை என்பதைக் குறையாகச் சொன்னார்கள். இதை உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துத் பருத்தியின் அளவை அதிகரிக்கச் சொன்னோம். ஆனால், ஒரு பெண்ணுக்கு மாதவிடாயின்போது வெளியாகும் உதிரத்துக்கு ஏற்ற தடிமனில்தான் நாப்கின்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். தவிர, நீண்ட நேரம் ஒரே நாப்கினைப் பயன்படுத்துவதும் உடல்நலக் கேட்டுக்கு இட்டுச் செல்லும்தானே. அதனால், நாப்கினை அடிக்கடி மாற்றுவது நல்லது என வாடிக்கையாளார்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்” என்று சொல்லும் அபிராமி, மக்களை இயற்கையின் பக்கம் திருப்புவது பெரும் சவாலாக இருக்கிறது என்கிறார்.

“எல்லாரும் நவீன சாதனங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள். எங்கள் நாப்கின் களை சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய கடைகளில் வைப்பதற்குக் கேட்டால், கட்டுப் படியாகாத தள்ளுபடியைக் கேட்கிறார்கள். அப்படியே இடம் கொடுத்தாலும் கண்ணுக்கே தெரியாத இடத்தை ஒதுக்கித் தருகிறார்கள். இதையெல்லாம் மீறியும் சிலர் எங்கள் நாப்கின்தான் வேண்டும் என்று வாங்கிச் செல்வது ஆறுதலாக இருக்கிறது. பிற நாப்கின்களோடு ஒப்பிடுகையில் இதன் விலை மிகக் குறைவு. இரண்டு நாப்கின்களை இலவசமாக வழங்குகிறோம். அவற்றைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர்கள் ஆனவர்கள் பலர். அதேபோல் பொருளை அனுப்பிய பிறகே பணம் பெற்றுக்கொள்கிறோம். இதுவரை யாரும் பணம் தராமல் ஏமாற்றியது இல்லை. அப்படியே ஓரிருவர் பணம் தரவில்லை என்றாலும் நல்ல பொருளை ஒருவருக்குக் கொடுத்த நிம்மதி எங்களுக்கு” எனச் சிரிக்கிறார் அபிராமி.

நாப்கின்களை அனுப்பும்போது அவற்றுடன் ஆரோக்கியக் குறிப்புகள் அடங்கிய அட்டையையும் அனுப்புகிறார்கள். மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளைக் களையும்விதமாகக் கையேடு ஒன்றை விரைவில் வெளியிடப்போகிறார்களாம். நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்காகத் தனி உறைகளைத் தயாரித்து விநியோகிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

“இந்தத் தொழிலில் எங்களுக்குக் கிடைக்கும் லாபம் மிக மிகக் குறைவு. ஆனால், பெண்களின் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவுகிறோம் என்கிற நிம்மதி அதைவிடப் பெரிது” என்கிறார் அபிராமி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in