

அண்மையில் நடைபெற்ற 77 ஆவது ‘கான்’ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ், கியாரா அத்வானி போன்ற பெயர்களுக்கு மத்தியில் ஊடகங்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் நான்சி தியாகி.
விரிந்த கண்கள், ஒல்லியான தோற்றம், தன்னம்பிக்கையான உடல் மொழியுடன் தான் வடிவமைத்த ஆடையை அணிந்து ‘கான்’ விழாவின் சிவப்புக் கம்பளத்தில் நான்சி வெளிப்படுத்திய ஆளுமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், ஃபேஷன் ஜாம்பவான்கள் மட்டுமே சர்வதேச ஃபேஷன் உலகின் மாபெரும் கொண்டாட்டமான மெட் காலா, சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இந்தியா சார்பாகப் பங்கேற்கிறார்கள். ஆனால், எந்தப் பிரபலப் பின்னணியும் இல்லாத நான்சி தியாகி, ‘கான்’ திரைப்பட விழாவில் பங்கேற்றதன் பின்னால் உத்வேகக் கதை ஒன்று மறைந்திருக்கிறது.
டெல்லி டூ கான்
கரோனா காலம் இந்தியாவின் கீழ்நடுத்தர வர்க்கத்தினரைப் பொருளாதார ரீதியாகக் கடுமையாக பாதித்தது. டெல்லியைச் சேர்ந்த நான்சி தியாகியின் குடும்பத்திலும் அது பிரதிபலித்தது.
தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த நான்சியின் அம்மாவுக்கு கரோனாவினால் வேலை பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அம்மா வுக்குப் பொருளாதார ரீதியாக எந்த வகையிலாவது உதவ வேண்டும் என நான்சி விரும்பினார்.
ஆனால், படிப்புகேற்ற வேலை கிடைக் காததால் தான் மிகவும் நேசிக்கும் ஆடை வடிவமைப்பை நான்சி கையிலெடுத்தார். தன் ஃபேஷன் டிசைனிங் திறமையைச் சமூக வலைதளப் பக்கங்களில் காட்சிப் படுத்தத் தொடங்கினார்.
டெல்லி சீலம்பூர் மார்க்கெட்டிலிருந்து துணிகளை வாங்கிவரும் நான்சி, பிரபல ஃபேஷன் ஜாம்பவான்கள், திரை நட்சத்திரங்களின் ஆடைகளைப் பார்த்து அவற்றை அப்படியே பிரதி எடுப்பதில் வல்லவர். மேலும், இன்றைய ஃபேஷனுக்கு ஏற்ற வகையில் ஆடைகள் வடிவமைப்பதையும் நான்சி வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் இன்ஸ்டகிராம், யூடியூபில் பரவலாக அறியப்படும் முகமாக மாறினார்.
அயராத உறுதி
ஆரம்ப நாள்களில் நான்சியின் தோற்றத் தையும் அவரது பேச்சுவழக்கையும் சிறு கூட்டம் இணையத்தில் கிண்டல் செய்த வண்ணம் இருந்தது. தன் மீதான தொடர் இணையவழித் தாக்குதல்களையும் எதிர்மறையான கருத்துகளையும் தாங்கிக்கொள்ள முடியாத நான்சி ஒருகட்டத்தில் சமூக வலைதளத்தைவிட்டே வெளியேற முடிவுசெய்தார். இருப்பினும் கனவை நோக்கிய பயணத்தில் எதற்கும் தளர்ந்துவிடக் கூடாது என்கிற பிடிவாதம் இணையத்தில் அவரை தொடர்ந்து இயங்கச் செய்தது. ஆடை வடிவமைப்பில் நான்சி மேற்கொண்ட மெனக்கெடல்கள் இணையத்தில் அவரை வெறுத்தவர்களையே பாராட்ட வைத்தது.
அதுவும் குறிப்பாக, ‘outfit from scratch’ என்கிற தலைப்பில் நான்சி பதிவிட்ட பெரும்பாலான வீடியோக்கள் இளம் பெண்களிடம் வரவேற்பைப் பெற்றதோடு, லட்சக் கணக்கானோர் அவரது சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடர்ந்தனர்.
தனித்துவம்
இன்ஸ்டா இன்ஃபுளூயன்சர் என்றாலே விருப்பக்குறிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் ஆசைப்பட்டு எதற்கும் பயனில்லாத அசட்டுரக வீடியோக்களைப் பதிவிடுவார்கள் என்கிற எதிர்மறையான மனநிலை பலருக்கும் இருக்கிறது.
அதனால், வழக்கமான இன்ஸ்டா, ரீல்ஸ் டிரெண்டிலிருந்து விலகி தனித்துத் தன்னை அடை யாளப்படுத்திக் கொண்டார் நான்சி. நான்சியின் தனித்துவமே அவருக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தற்போது பெற்றுத் தந்திருக்கிறது.
கைகூடிய கனவு
நான்சியின் வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து விருதுகள் அவரைத் தேடிவரத் தொடங்கின. சர்வதேச ‘கான்’ திரைப்பட விழாவில் இந்தியா சார்பாகப் பங்கேற்ற ஃபேஷன் இன்ஃபுளூயன்சர்களில் நான்சியும் ஒருவர்.
நான்சியின் இந்த வெற்றிப் பயணத்தை அவரது வயதையொத்த இளம்பெண்கள் பலரும் இணையத்தில் ‘நான்சி நீ ஜெயித்துவிட்டாய்’ எனக் கொண்டாடித் தீர்த்துள்ளனர்.
தனது வெற்றிப் பயணம் குறித்து நான்சி, “எங்கள் குடும்பத்தின் முந்தைய வருமானம் 6,000 முதல் 7,000 ரூபாயாக இருந்தது. அதை வைத்து என்ன செய்திருக்க முடியும்? நான் சுயமாகச் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு என் அம்மாவை வேலையிலிருந்து நிறுத்த எண்ணினேன். அதுதான் நடந்தது. இந்தப் பயணத்தில் என் தம்பிதான் எனக்குத் துணையாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறார். இனி நான் பிரபலங்களின் ஆடைகளைப் பிரதி எடுக்கப் போவதில்லை. எனது தனித்துவமான டிசைன்களில் ஆடைகளை உருவாக்கப் போகிறேன். என் ஆடை வடிவமைப்புக்கென்று ஒரு மதிப்பு உள்ளது. அதை நோக்கியே நான் பயணிக்கப் போகிறேன்” என்கிறார்.
நான்சி தியாகி அவரது தனித்துவப் பாணியை மையப்படுத்திய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.
நான்சி அடைந்திருக்கும் இந்த வெற்றி அவரது தனிப்பட்ட வெற்றி அல்ல; கனவுகளைத் துரத்திக்கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கு மானது!